Published : 25 Mar 2014 11:10 AM
Last Updated : 25 Mar 2014 11:10 AM

நியூஸி.யின் வெற்றியை பறித்தார் டேல் ஸ்டெயின்: 2 ரன்களில் தென் ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 2 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தைத் தோற்கடித்தது.

கடைசி ஓவரில் நியூஸிலாந்தின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அதில் 4 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த அணியிடம் இருந்து வெற்றியைப் பறித்தார் ஸ்டெயின். சிட்டகாங் நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் டி காக் 4, கேப்டன் டூ பிளெஸ்ஸி 13, டிவில்லியர்ஸ் 5 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 6.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் எடுத்திருந்தது தென் ஆப்பிரிக்கா.

இதன்பிறகு ஆம்லாவுடன் இணைந்தார் டுமினி. இவர்கள் நிதானம் காட்ட, 10 ஓவர்களில் 61 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது தென் ஆப்பிரிக்கா. 12-வது ஓவரில் சிக்ஸர் அடித்து அதிரடியைத் தொடங்கிய டுமினி, ஆண்டர்சன் வீசிய 14-வது ஓவரில் ஒரு பவுண்டரியையும், ஒரு சிக்ஸரையும் விளாசினார். ஆனால் அதே ஓவரில் ஆம்லா ஆட்டமிழந்தார். அவர் 40 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து டேவிட் மில்லர் களம்புகுந்தார். பவுண்டரி அடித்து 31 பந்துகளில் அரைசதம் கண்ட டுமினி, பின்னர் வெளுத்து வாங்கினார். இதனிடையே மில்லர் 6, பின்னர் வந்த அல்பி மோர்கல் 13 ரன்களில் ஆட்டமிழக்க, தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் குவித்தது. டுமினி 43 பந்துகளில் 3 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 86 ரன்கள் குவித்தார்.

பின்னர் ஆடிய நியூஸி. அணியில் கப்டில்-வில்லியம்சன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7.1 ஓவர்களில் 51 ரன்கள் சேர்த்தது. கப்டில் 22 ரன்களில் வெளியேற, பின்னர் வந்த கேப்டன் பிரென்டன் மெக்கல்லத்தை 4 ரன்களில் வெளியேற்றினார் ஸ்டெயின். இதையடுத்து வில்லியம்சனுடன் இணைந்தார் ராஸ் டெய்லர். வில்லியம்சனின் அதிரடியால் முதல் 10 ஓவர்களில் 77 ரன்களை எட்டியது.

வில்லியம்சன் 31 பந்துகளில் அரைசதத்தை எட்ட, மோர்ன் மோர்கல் வீசிய 12-வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசினார் டெய்லர். இதன்பிறகு வில்லியம்சன் 51 ரன்களில் (35 பந்துகள்) வெளியேற, பின்னர் வந்த மன்றோ 7 ரன்களில் நடையைக் கட்டினார்.

எனினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய டெய்லர், 26 பந்துகளில் அரைசதம் கண்டார். இதனிடையே கோரே ஆண்டர்சன் 7 ரன்களில் ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் நியூஸி.யின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அந்த ஓவரை வீசிய ஸ்டெயின், முதல் பந்தில் லியூக் ரோஞ்சியை (5) ரன்களில் வீழ்த்தினார். இதையடுத்து வந்த நாதன் மெக்கல்லம் 2 பந்துகளை வீணடித்த நிலையில் 4-வது பந்தில் பவுண்டரி அடித்தார். இதனால் கடைசி 2 பந்துகளில் 3 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் 5-வது பந்தில் மெக்கல்லம் அவுட்டானார். கடைசிப் பந்தில் 3 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் டெய்லரை ரன் அவுட்டாக்கி, நியூஸி.யிடம் இருந்து வெற்றியைப் பறித்தார் ஸ்டெயின்.

இதனால் நியூஸி.யால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. டெய்லர் 37 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் எடுத்தார். ஸ்டெயின் 4 ஓவர்களில் 17 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டுமினி ஆட்டநாய கனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x