Published : 23 Mar 2014 08:40 PM
Last Updated : 23 Mar 2014 08:40 PM
டி20 உலகக் கோப்பை போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.
ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரின் அபார பேட்டிங்கும், மேற்கிந்திய தீவுகள் அணியின் ரன் எண்ணிக்கையை இந்திய சுழற் பந்துவீச்சாளர்கள் வெகுவாக கட்டுப்படுத்தியதும் இந்த வெற்றிக்கு வித்திட்டன. மிர்பூரில் நடந்து முடிந்த இப்போட்டியில் 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இந்தியா, 19.4 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா கடைசி வரை ஆட்டமிழக்காமல், 55 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உறுதுணை புரிந்தார். மற்றொரு துவக்க அட்டக்காரரான தவாண் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க, ரோகித்துடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி 41 பந்துகளில் 54 ரன்கள் விளாசி, அணியின் வெற்றியை எளிதாக்கினார். யுவராஜ் சிங் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரெய்னா வின்னிங் ஷாட் அடித்தார்.
முன்னதாக, இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி, ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். மேற்கிந்திய தீவுகள் அணி தனது இன்னிங்ஸ்சில், 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 129 ரன்களை எடுத்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களான டிவைன் ஸ்மித் 11 ரன்களிலும், கிறிஸ் கெயில் 34 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
சாமுவேல்ஸ் 18 ரன்களிலும், பிராவோ ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். சம்மி 11 ரன்களில் ஆட்டமிழக்க, சைமன்ஸ் 22 பந்துகளில் 27 ரன்கள் விளாசி அவுட் ஆனார். ரஸல் 7 ரன்களை எடுத்தார். நரேன் ஆட்டமிழக்காமல் ஒரு சிக்ஸர் உள்பட 7 ரன்கள் எடுத்தார். மேற்கிந்திய தீவுகள் அணி கடைசி ஓவரில் மட்டும் 21 ரன்கள் குவித்ததால், ஓரளவு போராடத்தக்க ஸ்கோரை எட்டியது.
இந்திய தரப்பில், 4 ஓவர்களில் 48 ரன்களை வழங்கிய ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அமித் மிஸ்ரா 4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அஸ்வின் ஒரு விக்கெட்டை சாய்த்தார். முன்னதாக, இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT