Published : 10 Mar 2014 10:18 AM
Last Updated : 10 Mar 2014 10:18 AM
சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டியில் மிசோரம் அணி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இறுதி ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் ரயில்வே அணியைத் தோற்கடித்த மிசோரம் அணி, சந்தோஷ் டிராபி சாம்பியன்களின் பட்டியலில் இடம்பிடித்தது.
68-வது சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற ரயில்வேயும், மிசோரமும் மோதின. எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே ஆரம்பம் முதலே தாக்குதல் ஆட்டத்தில் இறங்கி அசத்தலாக விளையாடியது மிசோரம். ஆனாலும் முதல் 43 நிமிடங்களில் கோலடிக்க முடியவில்லை.
43-வது நிமிடத்தில் ரயில்வே அணிக்கு கோலடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த அணியின் ராஜேஷ் கோல் கம்பத்தின் மேல் பகுதியில் பந்தை அடிக்க, பந்து திரும்பி வந்தது. அதை மீண்டும் கோல் கம்பத்தை நோக்கி அடித்தார் ரயில்வேயின் கிஸ்கு. ஆனால் அதை மிசோரம் கோல் கீப்பர் முறியடிக்க, மறுகணமே பந்தை வேகமாக மறுமுனைக்கு எடுத்துச் சென்றது மிசோரம். அந்த அணியின் லால்ரின்புயா, கோல் ஏரியாவில் இருந்த ஜிகோவுக்கு பந்தைக் கடத்த அவர் கோலடித்தார். இதனால் 44-வது நிமிடத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது மிசோரம்.
பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்திலும் மிசோரமின் ஆதிக்கமே நீடித்தது. 61-வது நிமிடத்தில் ஜிகோ தனது 2-வது கோலை அடிக்க அந்த அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதன்பிறகு ரயில்வே அணி கடுமையாகப் போராடியபோதும் அதற்குப் பலன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் “இஞ்சுரி” நேரத்தையும் (90+1) விட்டுவைக்காத மிசோரம் அணி அதிலும் ஒரு கோலடித்தது. இந்த கோலை லால்ரின்புயா அடித்தார். இறுதியில் மிசோரம் 3-0 என்ற கோல் கணக்கில் ரயில்வேயைத் தோற்கடித்து சாம்பியன் ஆனது. கோப்பையை வென்ற மிசோரம் அணிக்கு ரூ.5 லட்சமும், 2-வது இடத்தைப் பிடித்த ரயில்வே அணிக்கு ரூ. 3 லட்சமும் ரொக்கப் பரிசாகக் கிடைத்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT