Published : 16 Nov 2013 01:17 PM
Last Updated : 16 Nov 2013 01:17 PM
மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியதோடு, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர், மும்பை வான்கடே மைதானத்தில் உணர்ச்சி பொங்க பேசினார்.
'சச்சின் சச்சின்' என்று ரசிகர்கள் என்னை உற்சாகப் படுத்தியது என் இறுதி மூச்சு வரை என் காதுகளில் ரீங்காரமிடும் என தெரிவித்தார்.
சச்சின் பேச்சு - முழு விபரம்:
ரசிகர்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டுகிறேன். உங்கள் ஆரவாரம் என்னை மேலும் உணர்ச்சிவசப் படுத்தும். எனது கிரிக்கெட் பயணம் இன்றுடன் முடிவடைகிறது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இத் தருணத்தில் நான் பலருக்கு நன்றி கூற விரும்புகிறேன்.
தந்தை சொன்ன தாரக மந்திரம் :
முதலாவதாக என் தந்தைக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன். அவருடைய வழிநடத்தல் இல்லாவிட்டால், இன்று நான் உங்கள் முன் நின்று கொண்டிருக்க மாட்டேன். என் தந்தை எனக்கு சொன்ன தாரக மந்திரம் : "கனவுகள் கைகூடும் வரை அதை துரத்திக் கொண்டே இரு. இடையூறுகள் பல வரும், அப்போதும் தொடர்ந்து கனவுகளை நோக்கிச் செல்" என்பது தான். அவரை இல்லாததை இந்த வேளையில் உணர்கிறேன்.
என் தாய், என்னை எப்படித் தான் சமாளித்தாரோ தெரியவில்லை. நான் அவ்வளவு சுட்டிப் பையனாக இருந்தேன். நான் ஒவ்வொரு போட்டிக்குச் செல்லும் முன்னரும் அவர் எனக்காக பிரார்த்தனை செய்வார். பள்ளிப் பருவத்தில், 4 வருடங்கள் என் மாமா வீட்டில் தங்கியிருந்தேன். அவர்கள் என்னை சொந்தப் பிள்ளையைப் போல் பார்த்துக் கொண்டனர்.
என் மூத்த சகோதரர் நிதின் என் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்திருந்தார். நான் என்ன செய்தாலும், அதை 100% முழுமையாக செய்வேன் என நம்புவதாக சொல்வார். என் சகோதரி சவிதா என் கடைசி போட்டி வரை, நான் விளையாடும் நாட்களில் எனக்காக இறைவனை வேண்டி உண்ணா நோன்பு இருப்பார். எனக்கு முதல் பேட் பரிசளித்தவர் அவர் தான். என் மற்றொரு சகோதரர் அஜித், எனக்காக அவரது கனவுப் பணியை துறந்தார். என் குருநாதர் அச்ரேகரிடம் என்னை முதலில் அழைத்துச் சென்றது அவர் தான். நேற்று இரவு கூட நான் 74- ரன்களில் அவுட் ஆனது குறித்து என்னிடம் பேசினார். நான் விளையாடா விட்டாலும், போட்டியின் நுட்பங்கள் குறித்து ஆலோசித்துக் கொண்டிருப்போம். இவை எல்லாம் நடக்காமல் இருந்தால் நான் மிகப்பெரிய கிரிக்கெட் வீர்ராக சோபித்திருக்க மாட்டேன்.
என் வாழ்வின் அழகிய நிகழ்வு:
1990- ஆம் ஆண்டு அஞ்சலியை நான் சந்தித்தது தான் என் வாழ்வின் அழகிய நிகழ்வாகும். ஒரு மருத்துவராக இருந்த அவர் முன்னாள் மிகப்பெரிய கடமை இருப்பது எனக்குத் தெரியும். இருப்பினும், நான் தொடர்ந்து விளையாட வேண்டும் என்பதால் குடும்பத்தையும், குழந்தைகளையும் பார்க்கும் முழு பொறுப்பையும் அவர் ஏற்றுக்கொண்டார். என்னை பொறுத்துக் கொண்ட அவருக்க நன்றி தெரிவிக்கிறேன்.
என் வாழ்வின், இரு விலை மதிக்கமுடியாத வைரங்கள் என் குழந்தைகள், சாரா மற்றும் அர்ஜூன். கடந்த 16 வருடங்களில் அவர்களுடைய பிறந்தநாட்கள், விடுமுறை நாட்களில் நான் அவர்களுடன் இருந்ததில்லை. இனி வரும் 16 வருடங்களில் அவர்களுடன் இருப்பேன் என உறுதியளிக்கிறேன்.
என் மாமியார்- மாமனார் எனக்கு செய்த பெரிய நன்மை, அஞ்சலியை நான் திருமணம் செய்து கொள்ள அனுமதித்தது. அவர்களுடன் நான் நிறைய விசயங்களை பேசியிருக்கிறேன்.
கடந்த 24 ஆண்டுகளாக என் நண்பர்கள் எனக்காக நிறைய செய்துள்ளார்கள். நான் சோர்ந்திருந்த போதெல்லாம் அவர்கள் என்னுடன் இருந்துள்ளனர். எனக்காக என்னுடன் இருந்தமைக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
நான் என் 11-வது வயதில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தேன். எனக்காக என் குரு அச்ரேகர் மைதானத்தில் இருப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கும். அவருடைய ஸ்கூட்டரை எடுத்துச் சென்று ஒரு நாளில் 2 போட்டிகளில் கலந்து கொள்வேன். அவரும் என்னுடன் வருவார். என்னை ஒருபோதும் அவர் நன்றாக விளையாடினாய் என பாராட்டியது இல்லை. நானே என் விளையாட்டுத் திறன் பற்றி அதிகமாக நினைத்து விடக்கூடாது என்பதற்காகவே அவர் அப்படிச் சொன்னார் என்பதும் எனக்குட் தெரியும்.
நான் மும்பையில் தான் என் விளையாட்டை ஆரம்பித்தேன். எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. நியூசிலாந்து சென்று விட்டு காலை 4 மணிக்கு திரும்பினேன். அன்றே ரஞ்டி டிராஃபியில் விளையாடினேன். எனக்கு மிகப்பெரிய அறிமுகம் தந்த பிசிசிஐ-க்கும் என்னை தேர்வு செய்த தேர்வுக்குழுவினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடன் விளையாடிய மூத்த கிரிக்கெட் வீரர்கள் அனிவருக்கும் நன்றி. ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, அனில் கும்ப்ளே அனைவருக்கும் நன்றி.
200வது டெஸ்ட் போட்டிக்கான தொப்பியை தோணி என்னிடம் அளித்த போது இந்திய அணிக்குச் சொல்ல என்னிடம் ஒரு விஷேச செய்தி இருந்தது. இந்திய தேசத்திற்காக விளையாடுவதில் நாம் அனைவரும் மெருமிதம் கொண்டுள்ளோம். இனிமேலும் என் தேசத் தொண்டை தொடர்வேன். அதே போல், நீங்கள் அனைவரும் முழு விச்சில் இந்தியாவுக்காக சேவை செய்வீர்கள் என நான் நம்புகிறேந் என்று அவர்களிடம் தெரிவித்தேன்.
எனக்கு காயங்கள் ஏற்பட்ட போதெல்லாம் எனக்கு சிறப்பாக சிகிச்சை அளித்த மருத்துவர்களை என்னல் நினைவு கூறாமல் இருக்க முடியாது. கால நேரம் கருதாமல் அவர்கள் எனக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.
என் ஆரம்ப நாள் முதல் மீடியாக்கள் எனக்கு மெரும் உதவி செய்திருக்கின்றன. இன்றளவும் அது தொடர்கிறது. மீடியாக்களுக்கு நன்றி. என்னுடைய மிக முக்கியமான தருணங்களை படம் பிடித்த புகைப்படக்காரர்களுக்கும் நன்றி. இவ்வாறு சச்சின் டெண்டுல்கர் பேசினார்.
நன்றி தெரிவிப்பு உரையை முடித்த சச்சின் டெண்டுல்கரை தோணியும், விராட் கோஹ்லியும் தங்களது தோளில் தூக்கிக் கொண்டு மைதானம் முழுவதும் சுற்றி வந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT