Published : 08 Nov 2013 10:00 AM
Last Updated : 08 Nov 2013 10:00 AM
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நார்வேயின் கார்ல்சனுக்கு எதிராக தாக்குதல் பாணி ஆட்டத்தை வெளிப்படுத்த தயாராக இருப்பதாக நடப்பு சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்தார்.
ஆனந்த் மற்றும் உலகின் முதல் நிலை வீரரான கார்ல்சனுக்கு இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி வரும் சனிக்கிழமை முதல் 28-ம் தேதி வரை சென்னையில் நடைபெறுகிறது.
இந்த நிலையில் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த ஆனந்திடம் போட்டிக்கு எப்படித் தயாராகியிருக்கிறீர்கள் என்று கேட்டபோது, “எப்போதும் போலவே இப்போதும் என்னை தயார்படுத்தியிருக்கிறேன். கடந்த சில மாதங்களாக பயிற்சி பெற்றிருக்கிறேன்.
கார்ல்சனுக்கு எதிராக தாக்குதல் பாணி ஆட்டத்தை வெளிப்படுத்த தயார். போட்டி எப்படி போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம். சொந்த ஊரான சென்னையில் விளையாடுவது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. போட்டியை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என்றார்.
கார்சல்சன் தனது பயிற்சிக்காக யாருடன் எல்லாம் விளையாடினார் என்பதைத் தெரிவிக்க மறுத்துவிட்டார். ஆனால் ஆனந்தோ, கிராண்ட்மாஸ்டர்களான சசிகிரண், சந்திபன் சாந்தா, ஹங்கேரியின் பீட்டர் லீகோ, போலந்தின் ரடோஸ்லாவ் வோஜ்டாஸெக் ஆகியோர் தனக்கு உதவியதாகத் தெரிவித்தார்.
கார்ல்சன் பேசுகையில், “ஆனந்த் யாருடன் எல்லாம் பயிற்சி பெற்றார் என்பதைத் தெரிவித்தார். அதற்காக அவரைப் பாராட்டுகிறேன். இன்று மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
இதுவரை எல்லாமே நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. போட்டியை ஆவலோடு எதிர்பார்த்துள்ளேன்” என்றார்.
கார்ல்சன் யாருடன் பயிற்சி பெற்றார் என்பதை அவர் தெரிவிக்க மறுத்தது குறித்து ஆனந்திடம் கேட்டபோது, “நான் சொன்னது அனைத்தும் உண்மையாக இருக்காது என அவர் நினைத்திருக்கலாம்.
எங்கள் இருவருக்கும் அது ஒரு விஷயமே அல்ல. உங்களின் கேள்விக்கு நான் உண்மையாக பதில் சொல்லலாம்.
ஆனால் அது முற்றிலும் உண்மையா, இல்லையா என்பது உங்களுக்குத் தெரியாது. கார்ல்சனும் அப்படி நினைத்திருக்கலாம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT