Published : 11 Dec 2013 12:00 AM
Last Updated : 11 Dec 2013 12:00 AM
இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவின் செஞ்சுரியன் நகரில் புதன்கிழமை நடைபெறுகிறது. முதல் போட்டியில் 141 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் 134 ரன்கள் வித்தியாசத்திலும் படுதோல்வி கண்டு தொடரை இழந்த இந்திய அணி, கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
தொடர்ச்சியாக 6 ஒருநாள் தொடர்களில் வாகை சூடிய இந்திய அணி, தென் ஆப்பிரிக்க பௌலர்களின் அசுர வேகத்தை எதிர்கொள்ள முடியாமல் இப்போது அடுத்தடுத்து இரு தோல்விகளை கண்டு தொடரையும் இழந்திருக்கிறது. இந்த ஆண்டில் முதல் முறையாக ஒருநாள் தொடரை இழந்துள்ள இந்திய அணி இந்தப் போட்டியில் வென்று ஆறுதல் தேடிக்கொள்ளப் போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரத்தில் தென் ஆப்பிரிக்க அணி இந்தப் போட்டியிலும் வென்று இந்தியாவை “ஒயிட் வாஷ்” ஆக்கும் முனைப்பில் களமிறங்குகிறது. அடுத்ததாக இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகள் இடையே இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. அதனால் கடைசி ஒருநாள் போட்டியை வெற்றியில் முடித்து டெஸ்ட் தொடரை சிறப்பாக தொடங்க தென் ஆப்பிரிக்கா முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பலம் வாய்ந்த இந்திய அணியின் பேட்டிங் தென் ஆப்பிரிக்க தொடரில் பலவீனமாகிவிட்டது. இந்த ஆண்டில் 1,000 ரன்களுக்கு மேல் குவித்த ரோஹித் சர்மா, ஷிகர் தவண், விராட் கோலி ஆகியோர் இந்திய ஆடுகளங்களில் சிறப்பாக விளையாடியபோதும், கடந்த இரு போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்க பௌலர்களை எதிர்கொள்ள முடியாமல் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இவர்கள் சிறப்பாக விளையாடினால் ஒழிய இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றிகூட சாத்தியமில்லை. மிடில் ஆர்டரில் தோனியைத் தவிர வேறு யாரும் சரியாக விளையாடவில்லை. கடந்த போட்டியில் ரெய்னா 36 ரன்கள் சேர்த்தார். கடந்த போட்டியில் யுவராஜ் சிங்கிற்குப் பதிலாக சேர்க்கப்பட்ட அஜிங்க்ய ரஹானே அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டார். அதனால் இந்தப் போட்டியில் அம்பட்டி ராயுடுவுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
வேகப்பந்து வீச்சை முகமது சமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் கூட்டணியும், சுழற்பந்து வீச்சை அஸ்வின், ஜடேஜா கூட்டணியும் கவனிக்கும். அதில் எவ்வித மாற்றமும் இருக்காது என தெரிகிறது. அணியில் எந்த மாற்றமும் இருக்காது என கேப்டன் தோனியும் கூறியுள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணி வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் குயின்டன் டி காக்கும் ஆம்லாவும் கடந்த இரு போட்டிகளிலும் முதல் விக்கெட்டுக்கு 150 ரன்களுக்கு மேல் குவித்து தென் ஆப்பிரிக்காவுக்கு நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர்.
இவர்களில் டி காக் தொடர்ந்து இரு சதங்களை அடித்துள்ளார். அவர்கள் இருவரும் இந்த ஆட்டத்திலும் ரன் குவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டன் டிவில்லியர்ஸ், ஜே.பி.டுமினி, டேவிட் மில்லர், ரியான் மெக்லாரன் ஆகியோர் மிடில் ஆர்டரில் தென் ஆப்பிரிக்காவுக்கு பலம் சேர்க்கின்றனர்.
மூத்த ஆல்ரவுண்டரான ஜாக்ஸ் காலிஸ், முன்னணி வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெயின் ஆகியோருக்கு இந்தப் போட்டியில் ஓய்வளிக்கப்படும் என தெரிகிறது. ஸ்டெயினுக்கு ஓய்வளிக்கப்படும் பட்சத்தில் அது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானதாக இருக்கும் என்றாலும், மோர்கல், பிலாண்டர், சோட்சோபி ஆகியோரின் பந்துவீச்சை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதைப் பொறுத்துதான் இந்தியாவின் ரன் குவிப்பு அமையும்.
மைதான கண்ணோட்டம்
செஞ்சுரியன் சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா இதுவரை 30 போட்டிகளில் விளையாடி 19-ல் வெற்றியும் 11-ல் தோல்வியும் கண்டுள்ளது. இந்தியா இங்கு 10 போட்டிகளில் விளையாடி 4-ல் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. 5-ல் தோல்வியடைந்துள்ளது. ஒரு போட்டியில் முடிவு எட்டப்பட வில்லை. இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் இங்கு 4 போட்டிகளில் மோதியுள்ளன. இரு அணிகளும் தலா இரு போட்டிகளில் வென்றுள்ளன.
இங்கு 2007-ல் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 392 ரன்கள் குவித்ததே ஓர் அணியால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும். கடந்த 3 ஆண்டுகளாக இந்த மைதானம் பந்துவீச்சுக்கு சாதகமாகவே இருந்துள்ளது. இந்த ஆண்டில் நடைபெற்ற இரு போட்டிகளிலும் பாகிஸ்தானும், தென் ஆப்பிரிக்காவும் 200 ரன்களுக்கும் குறைவாகவே எடுத்துள்ளது.
இந்தியா: எம்.எஸ்.தோனி (கேப்டன்), ஷிகர் தவண், ரோஹித் சர்மா, விராட் கோலி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது சமி, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, அமித் மிஸ்ரா, அம்பட்டி ராயுடு, அஜிங்க்ய ரஹானே.
தென் ஆப்பிரிக்கா: டிவில்லியர்ஸ் (கேப்டன்), குயின்டன் டி காக், ஜே.பி.டுமினி, இம்ரான் தாஹிர், ஜாக்ஸ் காலிஸ், ரியான் மெக்லாரன், டேவிட் மில்லர், மோர்ன் மோர்கல், வேயன் பர்னெல், வெர்னான் பிலாண்டர், கிரீம் ஸ்மித், டேல் ஸ்டெயின், லான்வாபோ சோட்சோபி. -பிடிஐ
போட்டி நேரம்: மாலை 5 நேரடி ஒளிபரப்பு: டென் கிரிக்கெட்,
தூர்தர்ஷன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT