Published : 15 Feb 2014 12:29 PM
Last Updated : 15 Feb 2014 12:29 PM
சென்னை லயோலா கல்லூரி சார்பில் எல்.டி.மர்பி எஸ்.ஜே. நினைவு தென்னிந்திய கல்லூரிகளுக்கு இடையிலான 15-வது கால்பந்து போட்டி வரும் 17-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது.
இது தொடர்பாக லயோலா கல்லூரியின் முதல்வர் ஜோசப் அந்தோணி சாமி, விளையாட்டுத் துறை இயக்குநர் சாமுவேல் ஜெயசீலன், போட்டி செயலர் விஜயகுமார் ஆகியோர் கூறியது:
கல்லூரி வளாகத்தில் நடைபெறும் இப்போட்டியில் தமிழகம், கேரளம் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த 22 அணிகள் பங்கேற்கின்றன. சென்னையைச் சேர்ந்த அணிகள் தகுதிச்சுற்று மூலமாக பிரதான சுற்றுக்கு தகுதி பெறும். மற்ற அணிகள் நேரடியாக பிரதான சுற்றில் பங்கேற்கும். முதல் இரண்டு நாள்கள் நடைபெறும் தகுதிச்சுற்றில் லயோலா கல்லூரி (எல்லோ), பார்ட்டிசியன் கல்லூரி, ஆர்.கே.எம்.விவேகா கல்லூரி, டி.எஸ்.என். கல்லூரி, குருநானக் கல்லூரி, ஆசன் கல்லூரி, டி.பி.ஜெயின் கல்லூரி, எல்.ஐ.சி.இ.டி. கல்லூரி, ஆல்பா கல்லூரி, மாநிலக் கல்லூரி, எஸ்.ஐ.வி.இ.டி. கல்லூரி, தியாகராயர் கல்லூரி உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கின்றன.
தகுதிச்சுற்று 3 நிலைகளில் நடைபெறுகிறது. லயோலா மற்றும் தியாகராயர் கல்லூரி அணிகளுக்கு “பை” வழங்கப்பட்டுள்ளதால், நேரடியாக 2-வது தகுதிச்சுற்றில் பங்கேற்கும். தகுதிச்சுற்றில் விளையாடும் 12 அணிகளில் இருந்து இரு அணிகள் பிரதான சுற்றுக்கு முன்னேறும்.
லயோலா கல்லூரி (ஒயிட்ஸ்), கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி, குருவாயூரப்பன் கல்லூரி (கேரளம்), செயின்ட் ஜோசப் கல்லூரி (திருச்சி), பி.எஸ்.எம்.ஓ. கல்லூரி (கேரளம்), பிஷப் ஹீபர் (திருச்சி), கிறிஸ்து கல்லூரி (பெங்களூர்), பால்ட்வின் மெதடிஸ்ட் கல்லூரி (பெங்களூர்), சென்னை எம்.சி.சி. கல்லூரி, கோவை பிஷப் அப்பாசாமி கல்லூரி ஆகிய 10 அணிகள் நேரடியாக பிரதான சுற்றில் பங்கேற்கின்றன.
பிரதான சுற்றில் மொத்தமுள்ள 12 அணிகளும் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தைப் பிடிக்கும் அணி அரையிறுதிக்கு முன்னேறும். இறுதிப் போட்டி மற்றும் 3-வது இடத்துக்கான போட்டி 24-ம் தேதி நடைபெறும். முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ.20 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம் ரொக்கப் பரிசாக வழங்கப்படும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT