Published : 17 Feb 2014 11:15 AM
Last Updated : 17 Feb 2014 11:15 AM
இந்தியா நியூஸிலாந்து இடையே நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் நியூஸிலாந்துக்கு சாதகமாகத் திரும்பியுள்ளது. அந்த அணியின் கேப்டன் மெக்கல்லம் இரட்டைச் சதத்தைக் கடந்து அணியை சரிவிலிருந்து மீட்டார். அவருடன் சேர்ந்து ஆடிய வாட்லிங் 124 ரன்கள் எடுத்தார். ஆட்ட நேர முடிவில் நியூஸிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 571 ரன்கள் எடுத்திருந்தது. இதன் மூலம் 325 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
முன்னதாக, நியூஸிலாந்து நேற்று தனது இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை ஐந்து விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்த நிலையில் முடித்தது. 6 ரன்கள் முன்னிலையோடு, இன்றைய நாள் ஆட்டம் துவங்கியது. களத்திலிருந்த நியூஸி. கேப்டன் மெக்கல்லம் நேற்றே சதத்தைக் கடந்திருந்தார். அவருடன் ஆடி வந்த வாட்லிங், அரை சதத்தைக் கடந்திருந்தார். இன்று உணவு இடைவேளை வரையாவது இந்த ஜோடி தாக்கு பிடிக்குமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் நேற்று வரை இந்தியாவுக்குச் சாதகமாக இருந்த டெஸ்ட் போட்டியை, இந்த இருவரும் நியூஸி. பக்கம் திருப்பினர்.
அசாத்தியமான ஆட்டம்
இந்தியாவின் எந்த பந்தவீச்சாளரின் யுக்தியும் பலனளிக்கவில்லை. தொடர்ந்து நியூஸி. அணிக்கு ரன்கள் வந்துகொண்டே இருந்தன. தவறாக வீசப்பட்ட எல்லா பந்துகளும் பவுண்டரிகளுக்கோ, சிக்ஸருக்கோ விரட்டப்பட்டன.
முறையான பந்துவீச்சாளர்கள் யாரும் எடுபடாமல் போனதால், கேப்டன் தோனி, இந்திய பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மாவையும், விராட் கோலியையும் பந்துவீசச் செய்தார். ஆனால் அதுவும் பலனின்றி போகவே, தானே பந்து வீசவும் முடிவு செய்தார். ஆனால் ஒரு ஒவரோடு நிறுத்திக் கொண்டார்.
மெக்கல்லம் 394 பந்துகளில், 199 ரன்கள் எடுத்திருந்த போது, ஒரு பவுண்டரி அடித்து தனது இரட்டைச் சதத்தைக் கடந்தார். இந்தத் தொடரில் அவர் அடிக்கும் இரண்டாவது இரட்டைச் சதம் இது. அவர் மொத்தம் 24 பவுண்டரிகளும், 1 சிக்ஸரும் அடித்திருந்தார். வாட்லிங் 297 பந்துகளில் தனது சதத்தைக் கடந்தார். அதில் 12 பவுண்டரிகள் அடக்கம்.
சாதனை பார்ட்னர்ஷிப்
6-வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த மெக்கல்லம் வாட்லிங் ஜோடி, 123 ஓவர்களை சந்தித்து, 352 ரன்கள் குவித்தது. இதன் மூலம், டெஸ்ட் அரங்கில் 6-வது விக்கெட்டுக்கான சிறந்த பார்ட்னர்ஷிப் என்கிற சாதனையை இந்த இணை படைத்தது. இதற்கு அடுத்த ஓவரிலேயே வாட்லிங் ஷமியின் பந்தில் 124 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பின்னர் மெக்கல்லமுடன் ஜோடி சேர்ந்த நீஷமும், இந்தியாவின் பந்துவீச்சை சுலபமாக எதிர்கொண்டார். இவரும் 79 பந்துகளில் அரைசதத்தைக் கடந்தார். இவரும் மெக்கல்லமும் இணைந்து 125 ரன்கள் பார்ட்னர்ஷிப்பில் அடித்தனர். இருவரும் இன்னும் ஆட்டமிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அயராத மெக்கல்லம்
இன்று நியூஸி. கேப்டன் மெக்கல்லத்தின் முதுகில் காயம் காரணமாக, அவ்வப்போது ஆட்டத்தின் நடுவே சிகிச்சை எடுத்துக் கொண்டார், தனது வலியையும் பொருட்படுத்தாது ஆடிய அவர், இன்றைய ஆட்டத்தின் முடிவில் 281 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். நாளைய ஆட்டத்தில் இவர் 300 ரன்களைக் கடப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
325 ரன்கள் முன்னிலை
6 ரன்கள் முன்னிலையோடு இன்றைய ஆட்டத்தைத் துவக்கிய நியூஸிலாந்து, அந்த அணியின் விக்கெட் கீப்பர் வாட்லிங், மற்றும் கேப்டன் மெக்கல்லம் ஆகிய இருவரால், ஆட்ட நேர முடிவில் 325 ரன்கள் முன்னிலை பெற்றது. பின்னால் வந்த நீஷமும் அரை சதம் கடந்ததால் அந்த அணியின் ஸ்கோர் 6 விக்கெட் இழப்பிற்கு 571 ரன்களாக உள்ளது.
இந்த டெஸ்ட் போட்டியில் இதுவரை சிறப்பாக பந்துவீசிய எந்த இந்திய பந்துவீச்சாளரும் இன்று எடுபடவில்லை. மோசமான பந்து வீச்சின் காரணமாக, இந்தியாவுக்குச் சாதகமாக இருந்த இந்த டெஸ்ட் போட்டி, முற்றிலும் நியூஸிலாந்துக்குச் சாதகமாக மாறியுள்ளது. நாளைய கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணி பேட்டிங் செய்தால் கூட, போட்டியை சமன் செய்யவே விளையாடும் என்றுத் தெரிகிறது. மீண்டும், திறமையான பந்துவீச்சு இல்லாததன் காரணமாக இந்தியா, அன்னிய மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT