Published : 11 Oct 2013 05:17 PM
Last Updated : 11 Oct 2013 05:17 PM
இந்திய-ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடரின்போது நடுவரின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் முறை (டி.ஆர்.எஸ்.) குறித்து தொலைக்காட்சி வர்ணனையாளர்கள் பேசக்கூடாது என கட்டுப்பாடு விதித்துள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மீது முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் இயான் சேப்பல் கடுமையாக சாடியுள்ளார்.
இந்திய ஆஸ்திரேலியத் தொடரில் வர்ணனையாளராகப் பணியாற்ற மாட்டேன் என்றும் சேப்பல் கூறியுள்ளார்.
இந்திய-ஆஸ்திரேலிய அணிக ளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின்போது டி.ஆர்.எஸ். தொழில்நுட்பம், இந்திய அணித் தேர்வு மற்றும் பிசிசிஐ நிர்வாகம் ஆகியவை குறித்து எதுவும் பேசக்கூடாது என தங்களின் நடுவர் குழுவில் இடம்பெற்றுள்ள சுநீல் கவாஸ்கர், ரவி சாஸ்திரி, லட்சுமண் சிவராம கிருஷ்ணன், மேத்யூ ஹேடன் ஆகியோருக்கு பிசிசிஐ கட்டுப்பாடு விதித்துள்ளது.
இதேபோல் போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்யுவுள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி வர்ணையாளர்களுக்கும் (ஹர்ஷா போக்லே, சௌரவ் கங்குலி, ஷேன் வார்ன்) மேற்கண்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் சேனல் 9 தொலைக்காட்சிக்காக கிரிக்கெட் வர்ணனை செய்து வரும் இயான் சேப்பல், சிட்னி மார்னிங் ஹெரால்டு பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தில் ஏராளமான குறைபாடுகள் உள்ளதாக நினைக்கிறேன். பிசிசிஐயின் நிபந்தனைக்கு அடிபணிந்து நான் சரியான முறையில் வர்ணனை செய்ய முடியாது. கடந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரின்போதுகூட சேனல் 9 தொலைக்காட்சிக்காக வர்ணனை செய்தபோது, டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தில் என்னென்ன குறைபாடுகள் இருக்கிறது என நான் நினைத்தேனோ, அது பற்றியெல்லாம் பேசினேன்.
ஆஷஸ் தொடருக்குப் பிறகு டி.ஆர்.எஸ். குறித்து எனக்கு ஏராளமான விளக்கங்கள் தரப்பட்டாலும், இந்திய வீரர்களுக்கு அதில் நம்பிக்கை கிடையாது என்பது எனக்குத் தெரியும். அதில் குறிப்பாக சச்சினுக்கு டி.ஆர்.எஸ். மீது சற்று அதிகமாகவே அவநம்பிக்கை இருக்கலாம். தென் ஆப்பிரிக்க வீரர் ஜாக்ஸ் காலிஸும், டி.ஆர்.எஸ். மீது தனக்கு நம்பிக்கையில்லை என கூறியிருக்கிறார். என்னுடைய அனுபவத்தில் இருந்து சொல்வதானால் அப்போதும் சரி, இப்போதும் சரி டி.ஆர்.எ,ஸ். மீது எனக்கு நம்பிக்கையில்லை. வர்ணனையாளர்கள் பேசுவது தங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அவர்களை கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக நீக்கிவிடலாம். அதுதான் சரியாக இருக்கும். மக்களிடம் ஏற்கெனவே நம்பிக்கையை இழந்துள்ள பிசிசிஐ, மேலும் அவர்களை ஏமாற்ற முயற்சிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
எதிர்கால போட்டி திட்டங்கள் தொடர்பான பிசிசிஐயின் நிலைப்பாடு குறித்து கேள்வியெழுப்பியதாலேயே வர்ணனையாளர் குழுவில் இருந்து சஞ்சய் மஞ்சரேக்கர் நீக்கப்பட்டார் எனவும் அந்த பத்திரிகை செய்தியில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT