Published : 24 Dec 2013 12:00 AM
Last Updated : 24 Dec 2013 12:00 AM
தென்னாப்பிரிக்க வீரர்கள் தோல்வி பயத்தில் விளையாடவில்லை என்று அந்த அணியின் கேப்டன் ஸ்மித் விளக்கமளித்துள்ளார்.
இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் மிகவும் பரபரப்பாக இருந்தது. ஒரு கட்டத்தில் தென்னாப்பிரிக்கா எளிதாக வென்று விடும் என்ற நிலை இருந்தது. ஆனால் கடைசி கட்டத்தில் சில விக்கெட்டுகள் விழுந்ததால் அந்த அணி வீரர்கள் தற்காப்பு ஆட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் போட்டி டிராவில் முடிந்தது. கடைசி கட்டத்தில் தென்னாப்பிரிக்க வீரர்கள் வேண்டுமென்றே ரன் எடுக்காமல் இருந்தனர். இது போட்டியைக் காண மைதானத்துக்கு வந்த ரசிகர்களை பெரும் ஏமாற்றுத்துக்கு உள்ளாக்கியது. ரசிகர்கள் தங்கள் அதிருப்தியை வெளிக்காட்டும் விதமாக கோஷமிட்டனர். கூடுதலாக 8 ரன்கள் எடுத்திருந்தால் தென்னாப்பிரிக்கா வெற்றி பெறுவதுடன், 2-வது இன்னிங்ஸில் அதிக ரன்களே எட்டிப்பிடித்த அணி என்ற சாதனையையும் படைத்திருக்க முடியும். ஆனால் அது முடியாமல் போனது.
இப்போட்டிக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய தென்னாப்பிரிக்க கேப்டன் ஸ்மித்திடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. தோல்வியடைந்து விடுவோம் என்ற பயத்தில் நாங்கள் விளையாடவில்லை. எனினும் உணவு இடைவேளைக்குப் பின் விக்கெட் விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டே விளையாடினோம். டூ பிளெஸ்ஸிஸ் ரன் அவுட் ஆனது ஆட்டத்தின் போக்கை மாற்றிவிட்டது. எனவே ஆட்டத்தை டிரா செய்யும் நோக்கத்துடன் விளையாடுவதுதான் அந்த சூழ்நிலையில் சிறப்பானதாக இருந்தது என்று ஸ்மித் கூறினார்.
அதே நேரத்தில் இந்தியா அணியும் டிரா செய்யும் நோக்கத்துடன் விளையாடியது என்று சுட்டிக்காட்டிய அவர், கடைசி 3 ஓவர்களில் இந்தியாவின் பீல்டிங் அமைப்பு விக்கெட் எடுக்கும் நோக்கத்தில் இல்லை. நாங்கள் ரன் சேர்த்துவிடக் கூடாது என்று நோக்கத்தில்தான் இருந்தது. 458 ரன்களை இலக்காக நிர்ணயித்தும் போட்டி டிரா ஆனது நிச்சயமாக தோனிக்கு ஏமாற்றம் அளிப்பதாகவே இருந்திருக்கும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT