Published : 06 Feb 2014 10:02 AM
Last Updated : 06 Feb 2014 10:02 AM

முடிவுக்கு வந்தது பீட்டர்சனின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சனின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் இணைந்து பீட்டர்சன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இங்கிலாந்துக்காக விளையாடியது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். ஆயினும் என்னுடைய வியக்கத்தக்க சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததில் வருத்தமே. கடந்த 9 ஆண்டுகளில் நானும், எனது சகஅணியினரும் இணைந்து படைத்த சாதனைகளுக்காக பெருமை கொள்கிறேன். இங்கிலாந்து அணி மிகப்பெரிய வெற்றிகளைக் குவித்த காலத்தில் விளையாடியதும் தலைசிறந்த வீரர்களுடன் விளையாடியதும் எனது மிகப்பெரிய அதிர்ஷ்டம் என கருதுகிறேன்.

ஒரு கிரிக்கெட் வீரராக நான் சாதிக்க இன்னும் நிறைய இருக்கிறது என நம்புகிறேன். நான் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவேன். எனினும் இங்கிலாந்துக்காக இனி விளையாடமுடியாது என்பது வருத்தமாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். 33 வயதாகும் பீட்டர்சன் 104 டெஸ்ட் போட்டியில் 8,181 ரன்களையும், 136 ஒருநாள் போட்டியில் 4,440 ரன்களையும் குவித்துள்ளார்.

ஆஷஸ் தொடரில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தால் பீட்டர்சனின் ஓய்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கிரிக்கெட் வாரியத்தின் புதிய நிர்வாக இயக்குநரான பால் டான்டன் கூறுகையில், “உலகக் கோப்பை போட்டிக்காக அணியை கட்டமைப்பதன் ஒரு பகுதியாக பீட்டர்சன் நீக்கப்பட்டுள்ளார். இது கடினமான முடிவு” என்றார்.

பீட்டர்சனின் திடீர் ஓய்வு அறிவிப்பு கடும் சர்ச்சைக்குள்ளா கியிருக்கிறது. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள முன்னாள் வீரர் மைக்கேல் வாஹன், ஆஷஸ் தோல்விக்கு ஒரு பெரிய பலியாடு தேவைப்பட்டது” என்று விமர்சித்துள்ளார்.

முன்னாள் வீரர் அலெக்ஸ் ஸ்டீவார்ட் கூறுகையில், “பீட்டர்சன் நியாயமாக நடத்தப்படவில்லை. இங்கிலாந்து வெற்றி பெற்றபோது யாரும் எதையும் கேட்கவில்லை. ஆனால் தோற்றபோது எல்லோரும் பீட்டர்சனை நோக்கி கை நீட்டுகிறார்கள். இது அநியாயம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x