Published : 29 Nov 2013 12:00 AM
Last Updated : 29 Nov 2013 12:00 AM
உயிரிழந்த தலிபான் அமைப்பைச் சேர்ந்தவர்களை தியாகிகள் என குறிப்பிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்போரின் செயல், இந்தியர் என்பதற்காக கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை புகழக் கூடாது என கூறுபவர்களுக்கு ஒப்பானது என்று பாகிஸ்தான் தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தானில் செயல்படும் தெஹ்ரிக் – இ – தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஷாகிதுல்லா ஷாகித் வெளியிட்டுள்ள வீடியோ சி.டி.யில் கூறியிருப்பதாவது: உயிரிழந்த தலிபான் தலைவர் ஹக்கிமுல்லா மெஹ்சூத்தை தியாகி என ஜமாத் – இ – இஸ்லாம் அமைப்பை சேர்ந்த தலைவர் முனாவர் ஹசன் சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதை சிலர் கடுமையாக விமர்சித்தி ருந்தனர்.
இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை பாகிஸ்தான் ஊடகங்களும், பாகிஸ்தானி யர்களும் புகழ்ந்து வருகின்றனர். அதே சமயம் பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் மிஸ்பா உல் - ஹக் கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறார்.
இந்நிலையில், டெண்டுல்கர் சிறந்த விளையாட்டு வீரராக இருந்தாலும், அவர் ஓர் இந்தியர் என்பதால் புகழக்கூடாது. அவ்வாறு புகழ்வது பாகிஸ்தான் தேச நலனுக்கு எதிரானது என்று சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். அதுமட்டுமல்ல, மிஸ்பா உல் - ஹக் மோசமாக விளையாடினாலும், பாகிஸ்தானைச் சேர்ந்த அவரை புகழ வேண்டும் என்கின்றனர்.
இந்த கருத்து எவ்வாறு தவறானதோ, அதைப் போன்றது தான் ஹக்கிமுல்லா மெஹ்சூத்தை தியாகி எனக் கூறிய முனாவர் ஹசனின் கருத்தை விமர்சிப்போரது செயலும் தவறானது” என்றார்.
நவம்பர் 1-ம் தேதி அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் ஹக்கிமுல்லா மெஹ்சூத் கொல்லப்பட்டார். ஹக்கி முல்லாவை தியாகி என வர்ணித்த ஜமாத் – இ – இஸ்லாம் தலைவர் முனாவர் ஹசன், “அமெரிக்கா வுக்கு ஆதரவாக செயல்படும் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இறந்தால் தியாகிகள் என அழைக்கப்படுகின்றனர். ஆனால், இஸ்லாம் மதத்துக்காக இறக்கும் தலிபான் அமைப்பினரை அவ்வாறு அழைப்பதில்லை” என்று கூறியி ருந்தார்.
இதற்கு கடும் கண்டணம் தெரிவித்த பாகிஸ்தான் ராணுவம், “தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையின்போது உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினரிடம் முனாவர் ஹசன் மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்று வலியுறுத்தி யிருந்தது. இது தொடர்பாக முனாவர் ஹசனை விமர்சித்து சில ஊடகங்களும் செய்தி வெளி யிட்டிருந்தன.
முன்னதாக சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்றதையடுத்து, கிரிக்கெட்டுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை பாராட்டி பாகிஸ்தான் ஊடகங்கள் ஏராளமான கட்டுரைகளை வெளியிட்டன.
‘டான்’ பத்திரிகை வெளியிட்ட செய்தியில், “பாகிஸ்தானுக்கு எதிராக கராச்சியில் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கிய சச்சின், பல்வேறு சாதனைகளை மாற்றி எழுதிய பெருமைக்குரியவர்” என்று தெரிவித்திருந்தது.
‘தி எக்ஸ்பிரஸ் டிரிபியூன், டெய்லி டைம்ஸ்’ ஆகிய பத்திரிகைகள் வெளியிட்ட செய்தியில், எந்த வகையான பந்துவீச்சாக இருந்தாலும், அதை துவம்சம் செய்யக் கூடியவர் சச்சின். பேட்டிங் கில் அத்தனை ஷாட்களையும் அடிக்கக் கூடிய திறன் படைத்தவர்” என்று தெரிவித்திருந்தன.
உருது பத்திரிகையான ‘இன்சாப்’ வெளியிட்ட செய்தியில், “அனைவராலும் விரும்பத்தக்கவராகவும், மிகவும் மதிக்கப்படு பவராகவும் டெண்டுல்கர் உள்ளார். சச்சின் இல்லாத கிரிக்கெட்டால் அவரது ரசிகர்கள் ஏமாற்றமடைவார்கள்” என்று தெரிவித்திருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT