Published : 28 Apr 2019 09:48 AM
Last Updated : 28 Apr 2019 09:48 AM
ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் 2019-ன் 45வது போட்டியில் சன் ரைசர்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துள்ளது. ஆனால் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்ற முதல் அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது உயர்வடைந்துள்ளது.
முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ரன்கள் எடுக்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 161/3 என்று 5 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்றது. இனி வரும் போட்டிகளையும் ராஜஸ்தான் ராயல்ஸ் வென்றால் அதன் பிளே ஆஃப் வாய்ப்பு தக்கவைக்கப்படும்.
இலக்கை விரட்டும்போது ரஹானே (39), லிவிங்ஸ்டோன் (44) இணைந்து முதல் விக்கெட்டுக்காக 9 ஓவர்களில் 78 ரன்கள் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுக்க சஞ்சு சாம்சனின் அனாயாச 48 ரன்கள் சன் ரைசர்ஸ் வாய்ப்புக்கு பூட்டு போட்டது. சன் ரைசர்ஸ் அணியில் மணீஷ் பாண்டே 36 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 61 ரன்களை அதிகபட்சமாக எடுக்க டேவிட் வார்னர் 32 பந்துகளில் 37 ரன்களை அதிசயமாக ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியாமல் முடிந்ததும் ஆச்சரியமே.
சன் ரைசர்ஸ் 121/3 என்று இருந்த போது இன்னும் 5 ஓவர்கள் மீதமிருந்தன. அப்போது உனாட்கட் தன் பந்து வீச்சில் 2 விக்கெட்டுகளை எடுத்திருந்த நிலையில் 3 கேட்ச்களைப் பிடித்து அசத்தினார். விஜய் சங்கர், ஹூடா, புவனேஷ்வர் குமார் ஆகியோர் கேட்ச்களை எடுத்தார் உனாட்கட், இதனால் அவருக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.
சன் ரைசர்ஸ் அணி பவர் ப்ளேயில் 51 ரன்களை எடுத்ததற்குக் காரணம் ராஜஸ்தான் ராயல்ஸின் மோசமான பீல்டிங்கும் காரணம். ஓவர் த்ரோக்கள், மிஸ்பீல்ட்கள் என்று ஒரு 20 ரன்கள் கூடுதலாக ஹைதராபாத் எடுக்க ராஜஸ்தான் பீல்டிங் வழிவகை செய்தது. பிட்ச் மந்தமாக இருந்ததால் வார்னரால் பவுண்டரியே அடிக்க முடியவில்லை. அவர் பவுண்டரியே அடிக்காமல் கடைசியில் ஒஷேன் தாமஸ் பந்தில் ஸ்டீவ் ஸ்மித்தின் அபார கேட்சுக்கு வெளியேற வேண்டியதாயிற்று.
அன்று சிஎஸ்கே அணிக்கு எதிராக 49 பந்துகளில் 83 ரன்கள் எடுத்த மணீஷ் பாண்டே, வார்னர் தடுமாறிய பிட்சில் மிக நன்றாக ஆடினார். ஷ்ரேயஸ் கோபால் பந்தில் ஒரு அரக்க பவுண்டரி அடித்த பாண்டே அடுத்த 8 ஒவர்களில் 7 பவுண்டரிகளை விளாசி 27 பந்துகளில் அரைசதம் கண்டார். வார்னர், பாண்டே கூட்டணி 75 ரன்களைச் சேர்த்தனர்.
சாம்சனின் அற்புத சமயோசிதம் : மணீஷ் அவுட்டுக்குப் பிறகு சரிவு:
மணீஷ் பாண்டே தன் 9வது பவுண்டரியை அடித்து 60 ரன்களை எட்டிய சமயத்தில் கோபால் பந்தை தட்டி விட முற்பட்டபோது பின் காலை கிரீசிலிருந்து தூக்க சஞ்சு சாம்சன் ஒரு அருமையான ஸ்டம்பிங்கை நிகழ்த்தினார், ஆனால் பந்து ஏற்கெனவே பாண்டே எட்ஜில் பட்டுச் சென்றதால் அது விக்கெட் கீப்பர் கேட்சாக தீர்ப்பானது.
பாண்டே ஆட்டமிழந்த பிறகு சன் ரைசர்ஸ் வீழ்ச்சி தொடங்கியது 34 ரன்களுக்கு 6 விக்கெடுட்டுகளை இழந்தது, கடைசியில் ரஷீத் கான் 11 பந்துகளில் 17 ரன்கள் எடுக்க 160/8 என்று முடிந்தது. சன் ரைசர்ஸ் இன்னிங்சின் ஒரே சிக்சரை அடித்தவர் ரஷீத் கான் என்பது குறிப்பிடத்தக்கது.
ராயல்ஸ் பீல்டிங் படுமோசமாக அமைந்தது, தொடக்கத்தில் பீல்டிங் சொதப்பியது போல் கடைசியிலும் சாம்சன், வருண் ஆரோன், கோபால் ஆகியோர் எளிதான கேட்ச்களை விட்டனர். ஆனால் உனாட்கட்டுக்கு நேற்று தொட்டதெல்லாம் துலங்கியது எல்லோரும் கேட்ச்களை விட்ட போது அவர் மட்டும் 3 கேட்ச்களை எடுத்தார், இதில் காட் அண்ட் பவுல்டு அபாரம்.
ராஜஸ்தான் அணியில் ஆரோன், ஒஷேன் தாமஸ், உனாட்கட், கோபால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
விரட்டலில் ரஹானே, லிவிங்ஸ்டோன், சாம்சன் அபாரம்:
லிவிங்ஸ்டோன் சித்தார்த் கவுலின் முதல் ஓவரில் 20 ரன்களை விளாசினார். ரஷீத் கானின் முதல் ஓவரிலேயே ரஹானே, லிவிங்ஸ்டோன் இருவரும் தலா ஒரு சிக்ஸ் அடிக்க அவர் ஓவரில் 16 ரன்கள் வந்தது, பவர் ப்ளே முடிவில் ஓவருக்கு 10 ரன்கள் விகிதத்தில் சென்று கொண்டிருந்தது ராஜஸ்தான்.
ஆனால் கடைசியில் ரஷீத் கான் தான் 44 ரன்களில் லிவிங்ஸ்டோனை வீழ்த்தி வெளியேற்றினார். 26 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்சர்கள் அடங்கும். ரஹானே 39 ரன்களில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் ஷாகிப் அல் ஹசன் பந்தில் வெளியேறினார்.
சஞ்சு சாம்சன் அபாரமான ஒரு அனாயாசத் தன்மையுடன் ஆட ஸ்டீவ் ஸ்மித் 22 ரன்களை எடுத்து அகமெட் பந்தில் ஆட்டமிழந்த போது 17 ஓவர்களில் 148/3 என்று இருந்தது, கடைசியில் சாம்சன் (44), டர்னர் (3) வெற்றிக்கு இட்டுச் சென்றனர். ஆட்ட நாயகன் ஜெய்தேவ் உனாட்கட்.
சன் ரைசர்ஸ் அணியில் கேன் வில்லியம்சன், ஷாகிப் அல் ஹசன், விஜய் சங்கர், ஹூடா, விருத்திமான் சஹா ஆகியோர் சொதப்பியதால் ஸ்கோரை 121/3 என்ற நிலையிலிருந்து 170-80 வரை கொண்டு செல்ல முடியவில்லை, இதனால் தோல்வி ஏற்பட்டது.
ராஜஸ்தானின் இந்த வெற்றியினால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்ற முதல் அணியானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT