Published : 27 Apr 2014 12:00 PM
Last Updated : 27 Apr 2014 12:00 PM

பந்து வீச்சாளர்கள் தந்த வெற்றி: தோனி பெருமிதம்

மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிரான வெற்றிக்கு பந்து வீச்சாளர்களே காரணம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

நடப்பு சாம்பியனான மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசிய சூப்பர் கிங்ஸ் வீரர்கள் 141 ரன்களுக்கு மும்பையை கட்டுப்படுத்தினர். பின்னர் பேட்டிங்கில் ஜொலித்த சூப்பர் கிங்ஸ் வீரர்கள் 19 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டினர்.

இதில் 4 ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்திய மோஹித் சர்மா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றி மூலம் டெல்லி, ராஜஸ்தான், மும்பை அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்று தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது சூப்பர் கிங்ஸ். முன்னதாக தனது முதல் ஆட்டத்தில் பஞ்சாப் அணியிடம் மட்டும் சூப்பர் கிங்ஸ் தோல்வியடைந்தது.

மும்பை அணிக்கு எதிரான வெற்றி குறித்து கேப்டன் தோனி கூறியது:

இந்த ஆட்டத்தில் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இதனால் எதிர்பார்த்ததை விட குறைவான ஸ்கோரையே மும்பை அணியால் எடுக்க முடிந்தது. எனவே அனைத்து பெருமையும் பந்து வீச்சாளர்களையே சேரும். பந்துவீச்சில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை முன்னதாகவே திட்டமிட்டு களமிறங்கினோம்.

அது சிறப்பாக செயல்படுத்தப்பட்டது. பேட்டிங்கில் மெக்கல்லம் 71 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். டுவைன் ஸ்மித் 29 ரன்கள் எடுத்தார். இருவரது சிறப்பான தொடக்கம், வெற்றி இலக்கை எட்டுவது மிகவும் எளிதாக்கியது என்றார்.

இந்த தோல்வி மூலம் மும்பை அணி தொடர்ந்து 3-வது தோல்வியைச் சந்தித்துள்ளது. இது தொடர்பாக மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா கூறியது: நாங்கள் எடுத்த 141 ரன்கள் என்பது வலுவான ஸ்கோர் அல்ல. மேலும் கூடுதலாக ரன் சேர்த்திருக்க வேண்டும். இந்த ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருந்தது. எனவே தோல்விக்கு பேட்ஸ்மேன்கள்தான் காரணம் என்று கூறலாம். கடந்த சில ஆட்டங்களில் நாங்கள் 140-க்கும் குறைவாகவே ரன் எடுத்துள்ளோம். எனவே பேட்டிங்கில்தான் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

ஆட்டநாயகன் விருது பெற்ற சூப்பர் கிங்ஸ் வீரர் மோஹித் சர்மா கூறியது:

பந்து வீசுவது குறித்து கேப்டன் தோனி கூறிய அறிவுரை மிகவும் உதவிகரமாக இருந்தது. எப்போதும் ஒரேமாதிரியான வேகத்தில் பந்து வீசாமல் அவ்வப்போது மெதுவாகவும் வீச வேண்டுமென்று அவர் என்னிடம் கூறினார். கடைசி கட்ட ஓவர்களில் இது சிறப்பாக பலனளித்தது. எனினும் மும்பை அணி 140 ரன்கள் குவித்தது. எங்கள் தொடக்கவீரர்கள் மெக்கல்லம், ஸ்மித் ஆகியோர் சிறப்பாக விளையாடி வெற்றியை எளிதாக்கினர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x