Published : 18 Nov 2025 12:03 PM
Last Updated : 18 Nov 2025 12:03 PM
கொல்கத்தா தோல்வி பெரும் சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது. கம்பீர் குண்டுகுழியுமான பிட்சை தண்ணி காட்டாமல் அப்படியே கொடுங்கள் என்று கேட்டது இந்திய அணிக்கு எதிராகவே திரும்பியது. நியூஸிலாந்துக்கு எதிராக அப்படித்தான் ஆனது, உலகக்கோப்பை 2023 இறுதிப் போட்டியில் டாக்டரிங் செய்யப்பட்ட பிட்சில் தோற்றது இந்திய அணி.
இப்படி எப்போதெல்லாம் பிட்ச் கேட்கப்படுகிறதோ அப்போதெல்லாம் தோல்விதான் என்று தெரிந்தும் கம்பீர் எப்படி இப்படி கிழிந்து தொங்கும் பிட்சைக் கேட்கலாம்? இந்தக் கேள்வியையெல்லாம் மூட்டைக் கட்டி வைத்த கவாஸ்கர் ‘கம்பீருக்கு முழு ஆதரவு...’ பிட்சில் ஒன்றும் பூதம் இல்லை, பேட்டர்கள் உத்தி சரியில்லை என்று கம்பீரின் ‘யெஸ் மேன்’ ஆகிவிட்டார்.
அவர் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், “கவுதம் கம்பீருடன் முழுமையாக ஒத்துப் போகிறேன். 124 ரன்கள் விரட்டக்கூடிய இலக்குதான். இதில் கேள்வியே இல்லை. நிறைய பேர் பிட்ச் பற்றி கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். சைமன் ஹார்மர் என்ன செய்தார் என்று பாருங்கள். அவரது பந்துகளில் எத்தனை பந்துகள் திரும்பின. அவர் கலந்து கலந்து வீசினார், அருமையாகவே வீசினார் இல்லை என்று சொல்லவில்லை. நேராகவே வீசினார் திடீரென ஒன்றிரண்டு பந்துகள் திரும்பின அவ்வளவுதான்.
எனவே இது பயங்கரமாக பந்துகள் திரும்பும் பிட்ச் அல்ல. 5 நாட்கள் டெஸ்ட்டில் ஆடுவது போல் ஆட வேண்டும், இது ஒருநாள், டி20 போட்டியல்ல. 3 டாட்பால்கள் ஆடிவிட்டால் அடுத்த பந்து சிறையிலிருந்து விடுபட்டவர் போல் மட்டையச் சுழற்றினால்... இதுதான் பிரச்சனை. 124 ரன்களை 5 விக்கெட்டுகளில் நாம் வென்றிருக்க வேண்டும்.
கவுதம் கம்பீருடன் ஒத்துப் போகிறேன் பிட்சில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. 3ம் நாள் பிட்சில் ஒன்றிரண்டு பந்துகள் திரும்பின அவ்வளவுதான். ஜடேஜா, அக்சர் படேலின் எத்தனை பந்துகள் திரும்பின? இதை ஸ்பின் பிட்ச் என்கின்றனர். அதில் பயங்கரமாக எதுவும் இல்லை. மோசமான உத்தி, பொறுமையின்மை ஆகியவையே தோல்விக்குக் காரணம்.” என்று கவுதம் கம்பீரின் ஆமாம் சாமி நபராகி விட்டார் கவாஸ்கர்.
பிரச்சினை பந்துகள் திரும்பியதா இல்லையா என்பதல்ல. இது சுனில் கவாஸ்கர் போன்ற ஒரு ஜாம்பவானுக்கே புரியவில்லை என்பதுதான் ஆச்சரியம். ஸ்பின் பந்து வீச்சில் ஒரே இடத்தில் பிட்ச் ஆகும் இருவேறு பந்துகள் ஒன்று விக்கெட் கீப்பர் முகத்திற்கு மேலே எழும்புகிறது, இன்னொன்று சரேலென காலுக்குக் கீழ் ஷூட் ஆகிறது என்பதுதான். இதில் எப்படி ஆட முடியும்? யார் இதை ஸ்பின் பிட்ச் என்றார்கள். இது குழிப்பிட்ச், இதில் ஆட முடியாது என்பதுதான் நிதர்சனம்.
மேலும் புஜாரா கூறுவது போல் ஏன் நல்ல பிட்சைப் போட்டு ஆட வேண்டியதுதானே, அதில்தானே இந்திய வெற்றி சாத்தியம் அதிகம்? ஏன் இது சுனில் கவாஸ்கருக்குப் புரியவில்லை? கம்பீருக்கு ஆமாம்சாமி போடும் நபராகிவிட்டாரா அல்லது உண்மையில் கவாஸ்கருக்கு வயதாகி விட்டதா? ஆம்! கவாஸ்கருக்கு வயதாகி விட்டது என்றுதான் கூற வேண்டியுள்ளது.
மேலும் 3ம் நிலையில் வாஷிங்டன் சுந்தர் நன்றகாகக் கணித்து ஆட முடியும் போது தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் சுதர்ஷனை எதற்காக உட்கார வைக்க வேண்டும்? பும்ரா 5 விக்கெட்டுகள் எடுப்பதற்கு எதற்காக 4 ஸ்பின்னர்கள், அதுவும் சுந்தருக்கு ஒரே ஒரு ஓவர்தான் கொடுக்கப்பட்டுள்ளது.
சுந்தர் 8ம் நிலையில் இறங்கியிருந்தால் அவரும் அக்சர் படேலும் போட்டியை முடித்துக் கொடுத்திருப்பார்களே. இதையெல்லாம் கவாஸ்கர் பேசாமல், கம்பீருக்கு ஜால்ரா தட்டுவது ஏன் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது. ஆம்! கவாஸ்கருக்கு வயதாகி விட்டது என்பதை அவர் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT