Published : 18 Nov 2025 10:22 AM
Last Updated : 18 Nov 2025 10:22 AM
இந்திய கிரிக்கெட் அணி அதன் சொந்த மண்ணிலேயே டெஸ்ட் போட்டியில் 124 ரன்கள் எடுக்க முடியாமல் தோற்று விட்டு ‘மாற்றத்தில் இருக்கிறது அணி’ என்றெல்லாம் சப்பைக்கட்டு கட்டாதீர்கள், இந்திய ஏ அணியே தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியிருக்கும் என்று முன்னாள் இந்திய வீரர் புஜாரா சாடியுள்ளார்.
கொல்கத்தாவில் ‘ரேங்க் டர்னர்’ பிட்ச் வேண்டும் என்று கேட்டு விட்டு, பிட்சில் ஒன்றும் பெரிய பூதங்களெல்லாம் இல்லை என்றும் பேட்டர்களுக்கு டெக்னிக் பத்தாது என்றும் ஒரு பயிற்சியாளராக இருந்து கொண்டே கம்பீரினால் பேச முடிந்துள்ளது பற்றி பிசிசிஐ என்ன கருதுகிறது என்பது இன்னும் தெரியவில்லை.
இந்நிலையில், ஜியோ ஸ்டாருக்கு அளித்த பேட்டியில் புஜாரா கூறியதாவது: இந்தியாவிலேயே இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு அணி மாற்றத்தில் இருக்கிறது என்றெல்லாம் சாக்குப்போக்குச் சொல்லாதீர்கள், என்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. என்னால் இந்த வாதத்தையை ஜீரணிக்க முடியாது. இங்கிலாந்திலோ, ஆஸ்திரேலியாவிலோ தோல்வி அடைந்தால் மாற்றத்தில் இருக்கிறோம் என்று கூறிக்கொள்ளலாம்.
இந்த அணிக்கு திறமையும் ஆற்றலும் உள்ளது. யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், ஷுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது உள்நாட்டு கிரிக்கெட் தொடர் ரன்களை எடுத்துப் பாருங்கள் நன்றாகவே இருக்கிறது. இருப்பினும் உள்நாட்டில் தோல்வி அடைகிறோம் என்றால் ஏதோ தவறு இருக்கிறது.
நல்ல பிட்சில் ஆடியிருந்தால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்புகள் கூடுதலாக இருந்திருக்கும். டெஸ்ட் கிரிக்கெட்டிற்கான விளக்கம் என்ன? எந்த மாதிரியான பிட்சில் நமக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்? இது போன்ற பிட்ச்களில் எதிரணியினர் கை ஓங்கியிருக்கவே செய்யும். நமக்கான வாய்ப்புக் குறைவாகவே இருக்கும். இவ்வளவு திறமைகள் இருந்தும் தோற்கலாமா? இந்தியா ஏ அணியே தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியிருக்கும். எனவே இந்த தோல்வி அணி மாற்றத்தினிடையே உள்ளது என்று கூறினால் அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
மேலும் பிளேயர்களை இதில் குறை கூற முடியாது, இத்தகைய பிட்சில் ஆட முடியாது. அப்படி ஆட வேண்டுமென்றால் அதற்கான தயாரிப்பு வித்தியாசமாக இருந்திருக்க வேண்டும். ஒரு பேட்டர்தான் இரு அணியிலுமே அரைசதம் எடுக்க முடிந்துள்ளது, எனவே இது நல்ல பிட்ச் எல்லாம் இல்லை, கவுதம் கம்பீர் எப்படி இப்படி சொல்கிறார் என்று புரியவில்லை.
இப்படிப்பட்ட பிட்சில் ஆட வேண்டுமென்றால் அதற்கான தயாரிப்பு வேறு விதமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இந்திய அணித் தயாரிப்பு இந்தப் பிட்சிற்கானதாக இல்லை. இத்தகையப் பிட்ச்களில் கொஞ்சம் பாசிட்டிவ் ஆக ஆட வேண்டும். முதல் பந்திலிருந்தே டர்ன் ஆக வேண்டும் என்ற பிட்சைக் கேட்டால் அதற்கேற்ப தயாராகியிருக்க வேண்டும். இவ்வாறு சாடியுள்ளார் புஜாரா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT