Published : 17 Nov 2025 01:00 PM
Last Updated : 17 Nov 2025 01:00 PM
கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி தாங்கள் உலக டெஸ்ட் சாம்பியன்கள் என்பதை உறுதி செய்துள்ளது. ஒரு பயிற்சியாளருக்கு என்ன உரிமைகள் உண்டோ அவர் என்ன செய்யலாமோ அதுவரை அவரை நிறுத்துவதுதான் நல்லது. இல்லையெனில் கவுதம் கம்பீர் ஒரு எதேச்சதிகரியாக உருவாகி அணியைச் சீரழிப்பதுதான் நடக்கும் என்ற எச்சரிக்கை பிசிசிஐ, முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் பண்டிதர்கள் போன்றோருக்கு நிச்சயம் வேண்டும்.
நியூஸிலாந்துக்கு எதிராக பெங்களூருவில் வேகப்பந்து வீச்சு ஆட்டக்களம் போடப்பட்டு இந்திய அணி 49 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி கண்டது. பிறகு எனக்கு முதல் பந்திலிருந்தே திரும்பும் பிட்ச்கள் வேண்டும் என்று பயிற்சியாளர் கம்பீர் வலியுறுத்தினார். என்ன ஆயிற்று? 0-3 என்று உதைதான் கிடைத்தது. அஸ்வினாலேயே விக்கெட் எடுக்க முடியவில்லை. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் எப்பவாவது ஆடும் சாண்ட்னர் இந்திய அணியைச் சுருட்டி பாக்கெட்டிற்குள் போட்டுக் கொண்டார்.
இப்போது கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் பிட்சிற்கு தண்ணீர் காட்ட வேண்டாம் எனக்கு வறண்ட, கண்டபடி திரும்பும் பிட்ச்தான் வேண்டும் என்று திருவாளர் கம்பீர் கேட்டதாக அவரே ஒப்புக் கொண்டுள்ளார். நேற்று ஆட்டம் முடிந்தவுடன் கம்பீர் கூறியது, “இப்படித்தான் பிட்ச் கேட்டோம், அதைத்தான் அப்படியே எங்களுக்குக் கொடுத்தார்கள். பிட்ச் தயாரிப்பாளர் மிகவும் ஆதரவாகச் செயல்பட்டார். பிட்ச் எப்படி இருந்தாலும் 124 ரன்கள் இலக்கு வெற்றி பெற வேண்டிய இலக்கே. நல்ல திடமான தடுப்பாட்டம் ஆடியிருந்தால் பிரச்சினை இருந்திருக்காது, தலையைத் தூக்காமல் தாழ்த்தி ஆடியிருந்தால் இந்தப் பிட்சிலும் ரன்கள் எடுக்க முடியும்” என்று தன் அபாண்டமான தவறை நியாயப்படுத்திப் பேசியுள்ளார்.
எந்த அணியுமே 200 ரன்கள் எடுக்க முடியவில்லை. இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 100 ரன்களைக் கூட எட்ட முடியவில்லை. ஆனாலும் கம்பீர், “இது போன்ற பிட்சைத்தான் கேட்டோம், அப்படியேதான் கொடுத்திருக்கிறார்கள்” என்கிறார்.
கேப்டன் - பயிற்சியாளர் கம்யூனிகேஷன் இடைவெளி: போட்டித் தொடங்குவதற்கு 2-3 நாட்களுக்கு முன்பாக பிட்சைப் பார்த்து கேப்டன் ஷுப்மன் கில் என்ன இப்படி வறண்டிருக்கிறது? ஏன் தண்ணீர் தெளிக்காமல் இத்தனை நாட்கள் காய விட வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். சவுரவ் கங்குலியும் இதற்கு சரியான பதிலை அளிக்கவில்லை. ஒருவேளை கில்லிடம் தனிப்பட்ட முறையில் சொல்லியிருக்கலாம்.
அப்போதே திருவாளர் கம்பீர் வந்து சொல்லியிருக்கலாமே. ‘இல்லப்பா கில் இப்படியான பிட்சைத்தான் நான் கேட்டிருக்கிறேன்’ என்று. ஏன் சொல்லவில்லை. ஆக மொத்தம் அணித் தேர்வு, வாஷிங்டன் சுந்தருக்கு பவுலிங் கொடுக்காதது, டாஸ் முடிவில் பேட்டிங்கா, பவுலிங்கா, களவியூகம் என்று அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் கம்பீர். அப்படியென்றால் அடைந்த படுதோல்விக்கும் அவர்தான் பொறுப்பேற்க வேண்டும். அப்போது மட்டும் தலையைக் குனிந்து ஆடியிருந்தால் 124 எடுத்து வென்றிருக்கலாம் என்று வீரர்கள் மீது பழி சுமத்தக் கூடாது.
சைமன் ஹார்மர் என்ற ஆஃப் ஸ்பின்னர் இந்திய பேட்டிங்கை ஊதித்தள்ளிவிட்டார். இந்திய ஸ்பின்னர்களை பின்னுக்குத் தள்ளி விட்டார். ஆஃப் ஸ்பின்னரை வைத்து இந்தியக் கதையை முடித்தார் பவுமா. ஆனால் இங்கோ அஸ்வினுக்குப் பிறகு அவரது இடத்தை நிரப்ப வந்த வாஷிங்டன் சுந்தருக்கு ஒரு ஓவர் மட்டுமே கொடுத்து அவரை அசிங்கப்படுத்தும் அணி நிர்வாகத்தின் அவலட்சணம்.
தன்னம்பிக்கையுடன் ஆடிவந்த ஜெய்ஸ்வாலை டி20, ஒருநாள் அணிகளில் தேர்வு செய்யாமல் ஒதுக்கி அவரது தன்னம்பிக்கையையும் காலி செய்து அவர் தன் இடத்தைத் தக்கவைக்கப் பாடுபடுமாறு செய்து விட்டார் கம்பீர். இதைத்தான் ராகுலுக்கும் செய்துள்ளார். சாய் சுதர்ஷனை நீக்கி அவருக்கும் இதையே செய்ததோடு அந்த இடத்தில் வாஷிங்டன் சுந்தரை இறக்கி அவரது பந்து வீச்சைக் காலி செய்து சுந்தரிடம் கீழ் வரிசை பேட்டர் பிளஸ் அற்புதமான பவுலர் என்று மிளிரும் திறமையை அழிக்கிறார் கம்பீர். கேள்வி கேட்பார் இல்லாமல் அவரது பயிற்சிக்காலக்கட்ட குளறுபடிகள் போய்க்கொண்டிருக்கின்றன.
நிச்சயம் இந்த கம்பீர் என்னும் பூனைக்கு யாராவது மணி கட்ட வேண்டியதுதான். அணியின் பலத்திற்குப் பிட்சைப் போடுவதுதான் வழக்கம், ஆனால் அணியின் பலவீனத்திற்குப் பிட்சைப் போடும் பயிற்சியாளரை இப்போதுதான் பார்க்கிறோம். முதலில் இந்தப் பிட்ச் வேண்டும், அந்தப் பிட்ச் வேண்டும் என்று கேட்க கம்பீர் யார்? அணியின் கேப்டன் வீரர்களுடன் கலந்தாலோசித்து எடுக்க வேண்டிய முடிவை ஏன் இவர் எடுக்கிறார்? செய்தியாளர்கள் இவற்றையெல்லாம் கம்பீரிடம் எழுப்ப வேண்டும். அவர் கோபப்படுவார், ஆனாலும் எழுப்ப வேண்டும், அவர் சொல்வதை அப்படியே கொடுப்பது பத்திரிகைகளின் வேலை அல்ல. எனவே நிறைய மாற வேண்டியுள்ளது. மாற்றம் ஒன்றே இந்திய அணியை சரிவுப்பாதையிலிருந்து மீட்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT