Published : 17 Nov 2025 11:18 AM
Last Updated : 17 Nov 2025 11:18 AM
124 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து இந்திய அணி 93 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி கண்டதில் சில சுவாரஸ்யமான புள்ளிவிவரங்கள் கிடைத்துள்ளன.
1997 பிரிட்ஜ்டவுன் டெஸ்ட் போட்டியில் அபாயகரமான குழிப்பிட்சில் இந்திய அணி 120 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்கை எடுக்க முடியாமல் 81 ரன்களுக்குச் சுருண்டதன் பிறகு 124 ரன்கள் எடுக்க முடியாமல் கொல்கத்தாவில் இப்போது 93 ரன்களுக்குச் சுருண்டது. தென் ஆப்பிரிக்கா அணியும் இத்தனைக் குறைந்த இலக்கை வெற்றிகரமாக தடுத்திருப்பது இது 2-வது முறையாகும். முதல் முறை 1994-ம் ஆண்டு சிட்னியில் 117 ரன்களை ஆஸ்திரேலியாவால் எடுக்க முடியாமல் செய்து 111 ரன்களுக்குத் தென் ஆப்பிரிக்க பவுலர்கள் சுருட்டினர்.
அப்படிப்பட்ட தில்லாலங்கடி பவுலர் யார் என்றுதானே கேட்கிறீர்கள்? அவர்தான் ஃபானி டிவில்லியர்ஸ். 43 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைச் சாய்த்தார். ஆலன் டொனால்டு 3 விக்கெட். இதே ஃபானி டிவில்லியர்ஸ்தான் ஒளிபரப்பு நிறுவனம் ஒன்றிற்காக புகழ்பெற்ற ஸ்மித், வார்னர், பேங்க்கிராப்ட் ஈடுபட்ட ‘சாண்ட் பேப்பர்’ தகிடுத்தத்தத்தை வெளிக்கொணர்ந்தவர்.
ஆசியாவில் 124 ரன்களை சேஸ் செய்ய முடியாமல் தோற்றிருப்பது இரண்டாவது முறை. முதல் முறை மும்பை குழிப்பிட்சில் 107 ரன்களை ஆஸ்திரேலியா எடுக்க முடியாமல் 93 ரன்களுக்குச் சுருண்டதன் பிறகு இந்தியா இப்போது சொந்த மண்ணில் படுதோல்வி கண்டுள்ளது.
இதற்கு முன்னர் கடைசியாக 2010-ல் நாக்பூரில் இந்திய அணியை இன்னிங்ஸ் மற்றும் 6 ரன்களில் இந்திய அணியை வீழ்த்திய பிறகு இப்போதுதான் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெறுகிறது.
200 ரன்களுக்குக் கீழான வெற்றி இலக்கை விரட்டும் போது 34 போட்டிகளில் இந்தியாவில் இந்தியாவின் 2-வது தோல்வி இது. சமீபத்தில் 147 ரன்களை நியூஸிலாந்துக்கு எதிராக எடுக்க முடியாமல் தோற்றது, இப்போது இந்தக் கொல்கத்தா தோல்வி. மற்றபடி 30 போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது.
அதே போல் வெற்றி பெற்ற ஒரு அணி இரண்டு இன்னிங்ஸ்களிலும் எடுத்த ஸ்கோர் என்ற அளவில் தென் ஆப்பிரிக்கா 312 ரன்களை மட்டுமே எடுத்து வெற்றி பெற்றுள்ளது ஒரு சாதனையாகும்.
மேலும், இரண்டு இன்னிங்ஸ்களிலும் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணியை வெற்றி பெறுவது என்பதில் இந்த இரு இன்னிங்ஸ் 312 ரன்கள்தான் இந்தியாவுக்கு எதிராக வெற்றியில் எடுத்த ஆகக்குறைந்த ரன் எண்ணிக்கையாகும். 1987-ல் பாகிஸ்தான் வெற்றியில் பெங்களூருவில் இரு இன்னிங்ஸ்களிலும் 365 ரன்களை எடுத்ததே இந்தியாவில் குறைந்தபட்ச ரன் எண்ணிக்கையில் எதிரணி பெற்ற வெற்றியாகும்.
159 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட் ஆன தென் ஆப்பிரிக்கா இதே போன்ற குறைந்த முதல் இன்னிங்ஸ் ரன் எண்ணிக்கையை வெற்றியாக மாற்றுவது 3-வது முறையாகும்.
அதே போல் 159 ரன்கள் என்ற குறைந்த முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை வைத்துக் கொண்டு இந்திய அணியை வீழ்த்துவது என்பது இந்தியத் தோல்வியில் எதிரணியின் 3-வது குறைந்த முதல் இன்னிங்ஸ் ரன் எண்ணிக்கையாகும்.
இந்திய அணி 93 ரன்களுக்கு 4-வது இன்னிங்ஸில் ஆல் அவுட் ஆனது 4-வது குறைந்த ரன் எண்ணிக்கையாகும். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3-வது குறைந்த ரன் எண்ணிக்கையாகும். 2008-ல் அகமதாபாத்தில் தென் ஆப்பிரிக்கா அணி இந்திய அணியை 76 ரன்களுக்குச் சுருட்டியபிறகு இதுதான் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான குறைந்த ரன்களாகும்.
11 டெஸ்ட்களில் கேப்டன்சி செய்துள்ள பவுமாவின் 10-வது வெற்றியாக கொல்கத்தா டெஸ்ட் அமைந்தது. அந்த ஒரு போட்டி தோல்வி அல்ல டிரா என்பது குறிப்பிடத்தக்கது. தோல்வி அடைவதற்கு முன்பாக 10 டெஸ்ட் வெற்றி என்ற அளவில் இங்கிலாந்தின் மைக் பிரியர்லியுடன் இணைகிறார் பவுமா.
சைமன் ஹார்மர் இந்த டெஸ்ட்டில் 51 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளைச் சாய்த்தது இந்தியாவில் தென் ஆப்பிரிக்கா பவுலர் வீசும் 2-வது சிறந்த பந்து வீச்சாகும். முன்னதாக கடந்த 2010-ம் ஆண்டு நாக்பூரில் டேல் ஸ்டெய்ன் 10 விக்கெட்டுகளை 108 ரன்களுக்குக் கைப்பற்றினார். கடைசியாக இந்தி மண்ணில் தென் ஆப்பிரிக்க வென்ற டெஸ்ட் போட்டியும் அதுதான். அதன் பிறகு இப்போது தான் அந்த அணி இந்தியாவில் டெஸ்ட் போட்டியில் வென்றுள்ளது.
இதோடு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றாமல் டெஸ்ட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வகையிலும் சைமன் ஹார்மர் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT