Published : 17 Nov 2025 09:28 AM
Last Updated : 17 Nov 2025 09:28 AM
கோயம்புத்தூர்: உத்தரபிரதேச அணிக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் தமிழக வீரர்கள் பாபா இந்திரஜித், ஆந்த்ரே சித்தார்த் ஆகியோர் அபாரமாக விளையாடி சதம் விளாசினர்.
உ.பி., தமிழக அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கிரிக்கெட் லீக் போட்டி கோயம்புத்தூரிலுள்ள ஸ்ரீராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கியது.
முதலில் விளையாடிய தமிழக அணி முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் 81.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் குவித்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்கள் பாலசுப்பிரமணியம் சச்சின் 2, என்.ஜெகதீசன் 8, பிரதோஷ் ரஞ்சன் பால் 2, பி.வித்யுத் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ஆனால் 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பாபா இந்திரஜித்தும், ஆந்த்ரே சித்தார்த்தும் அபாரமாக விளையாடி இன்னிங்ஸை கட்டமைத்தனர்.
38-வது ஓவரின் போது தமிழக அணி 4 விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. ஆனால், ஆந்த்ரே சித்தார்த், பாபா இந்திரஜித்தின் அபாரமான ஆட்டத்தால் தமிழக அணி 200 ரன்களைத் தாண்டியது. இருவரும் அடுத்தடுத்து சதம் விளாசினர்.
ஆந்த்ரே சித்தார்த் 205 பந்துகளில் 121 ரன்கள் எடுத்திருந்தபோது குணால் தியாகி பந்து வீச்சில், ஷிவம் மாவியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் பாபா இந்திரஜித் 157 பந்துகளில் 8 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 128 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
உ.பி. அணி தரப்பில் ஆகிப் கான், குணால் தியாகி ஆகியோர் 2 விக்கெட்களையும், கார்த்திக் யாதவ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இந்நிலையில் 2-ம் நாள் ஆட்டத்தை இன்று தமிழக அணி தொடர்ந்து விளையாடுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT