Published : 16 Nov 2025 10:20 AM
Last Updated : 16 Nov 2025 10:20 AM

2-வது இன்னிங்ஸிலும் தடுமாற்றம்: 93 ரன்னுக்கு 7 விக்கெட்டை இழந்த தென் ஆப்பிரிக்கா!

தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரரான எய்டன் மார்க்ரம்மை ஆட்டமிழக்கச்செய்த ரவீந்திர ஜடேஜாவை பாராட்டும் இந்திய அணி வீரர்கள்.

கொல்கத்தா: தென் ஆப்​பிரிக்க அணிக்கு எதி​ரான முதல் டெஸ்ட் போட்​டி​யில் இந்​திய அணி முதல் இன்​னிங்​ஸில் 189 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. தொடர்ந்து விளை​யாடிய தென் ஆப்​பிரிக்க அணி 2-வது இன்​னிங்​ஸில் 93 ரன்​களுக்கு 7 விக்​கெட்​களை இழந்​தது.

கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் நடை​பெற்று வரும் இந்த போட்​டி​யில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்​பிரிக்க அணி 159 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. இதையடுத்து பேட் செய்த இந்​திய அணி முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 20 ஓவர்​களில் ஒரு விக்​கெட் இழப்​புக்கு 37 ரன்​கள் எடுத்​தது. யஷஸ்வி ஜெய்​ஸ்​வால் 12 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தார். கே.எல்​.​ராகுல் 13, வாஷிங்​டன் சுந்​தர் 6 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர். நேற்று 2-வது நாள் ஆட்​டத்தை இந்​திய அணி தொடர்ந்து விளை​யாடியது.

பொறுமை​யாக விளை​யாடி வந்த வாஷிங்​டன் சுந்​தர் 122 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 2 பவுண்​டரி​களு​டன் 29 ரன்​கள் எடுத்த நிலை​யில் சைமன் ஹார்​மர் வீசிய பந்தை தடுத்து விளை​யாட முயன்ற போது மட்டை விளிம்​பில் பட்டு சிலிப் திசை​யில் நின்ற எய்​டன் மார்க்​ரமிடம் கேட்ச் ஆனது. 2-வது விக்​கெட்​டுக்கு கே.எல்​.​ராகுல், வாஷிங்​டன் சுந்​தர் ஜோடி 57 ரன்​கள் சேர்த்​தது.

இதையடுத்து களமிறங்​கிய கேப்​டன் ஷுப்​மன் கில், சைமன் ஹார்​மர் வீசிய 35-வது ஓவரின் 4-வது பந்தை பேக்​வேர்டு ஸ்கொயர் திசை​யில் ஸ்வீப் ஷாட் மூலம் பவுண்​டரி அடித்​தார். அப்​போது அவருக்கு கழுத்து பகு​தி​யில் சுளுக்கு ஏற்​பட்​டது. இதனால் 4 ரன்​களு​டன் ஷுப்​மன் கில் ரிட்​டயர்டு ஹர்ட் முறை​யில் வெளி​யேறி​னார். இதையடுத்து களமிறங்​கிய ரிஷப் பந்த் அதிரடி​யாக விளை​யாடி​னார். கேசவ் மஹா​ராஜ் வீசிய 38-வது ஓவரில் மிட் ஆஃப் திசை​யிலும் 42-வது ஓவரில் லாங் ஆன் திசை​யிலும் சிக்​ஸர் விளாசி அசத்​தி​னார் ரிஷப் பந்த்.

மறு​முனை​யில் நங்​கூரமிட்டு விளை​யாடி வந்த கே.எல்​.​ராகுல் 119 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 4 பவுண்​டரிளு​டன் 39 ரன்​கள் எடுத்த நிலை​யில் கேசவ் மஹா​ராஜ் பந்​தில் சிலிப் திசை​யில் நின்ற எய்​டன் மார்க்​ரமிடம் பிடி​கொடுத்து வெளி​யேறி​னார்.

மட்​டையை சுழற்​றிய ரிஷப் பந்த் 24 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 2 பவுண்​டரி​களு​டன் 27 ரன்​கள் எடுத்த நிலை​யில் கார்​பின் போஷ் வீசிய வேகம் குறைந்த பவுன்​ஸரை லெக் திசை​யில் விளாச முயன்​றார். ஆனால் பந்து கையுறை​யில் பட்டு விக்​கெட் கீப்​பர் கைல் வெர்​ரைய்​னிடம் கேட்ச் ஆனது. மதிய உணவு இடைவேளை​யில் இந்​திய அணி 45 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 138 ரன்​கள் எடுத்​திருந்​தது. ரவீந்​திர ஜடேஜா 11, துருவ் ஜூரெல் 5 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர்.

மதிய உணவு இடைவேளைக்கு பின்​னர் இந்​திய அணி தொடர்ந்து விளை​யாடியது. துருவ் ஜூரெல், சைமன் ஹார்​மர் வீசிய பந்​தில் அவரிடமே பிடி​கொடுத்து வெளி​யேறி​னார். 14 பந்​துகளை எதிர்​கொண்ட துருவ் ஜூரெல் 3 பவுண்​டரி​களு​டன் 14 ரன்​கள் சேர்த்​தார். இதைத் தொடர்ந்து அக்​சர் படேல் களமிறங்​கி​னார். கார்​பின் போஷ் வீசிய 50-வது ஓவரின் முதல் பந்தை ஜடேஜா பவுண்​டரிக்கு விரட்ட இந்​திய அணி 161 ரன்​களு​டன் முன்​னிலை பெறத் தொடங்​கியது.

சீராக ரன்​கள் சேர்த்து வந்த ஜடேஜா 45 பந்​துகளில், 3 பவுண்​டரி​களு​டன் 27 ரன்​கள் எடுத்த நிலை​யில் சைமன் ஹார்​மர் பந்தை தடுத்​தாடிய போது எல்​பிடபிள்யூ முறை​யில் ஆட்​ட​மிழந்​தார். இதையடுத்து களமிறங்​கிய குல்​தீப் (1), முகமது சிராஜ் (1) ஆகியோர் மார்கோ யான்​சன் பந்​தில் நடையை கட்​டினர். அதிரடி​யாக விளை​யாடி ரன்​கள் குவிக்​கக்​கூடும் என எதிர்​பார்க்​கப்​பட்ட அக்​சர் படேல் 45 பந்​துகளில், 2 பவுண்​டரி​களு​டன் 16 ரன்​கள் எடுத்த நிலை​யில் சைமன் ஹார்​மர் பந்​தில் பேக்​வேர்டு பாயின்ட் திசை​யில் நின்ற மார்கோ யான்​சனிடம் எளி​தாக கேட்ச் கொடுத்து வெளி​யேறி​னார்.

முடி​வில் இந்​திய அணி 62.2 ஓவர்​களில் 189 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. காயம் காரண​மாக வெளி​யேறி இருந்த ஷுப்​மன் கில் மீண்​டும் பேட் செய்ய களமிறங்​க​வில்​லை. பும்ரா ஒரு ரன்​னுடன் ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார். இந்​திய அணி ஒரு கட்​டத்​தில் 75 ரன்​களுக்கு ஒரு விக்​கெட்டை மட்​டுமே இழந்து வலு​வான நிலை​யில் இருந்​தது. ஆனால் அதன் பின்​னர் மேற்​கொண்டு 114 ரன்​களை சேர்ப்​ப​தற்​குள் 8 விக்​கெட்​களை​யும் பறி​கொடுத்​தது. தென் ஆப்​பிரிக்க அணி தரப்​பில் சைமன் ஹார்​மர் 4, மார்கோ யான்​சன் 3 விக்​கெட்​களை வீழ்த்​தினர். கேசவ் மஹா​ராஜ், கார்​பின் போஷ் ஆகியோர் தலா ஒரு விக்​கெட் கைப்​பற்​றினர்.

30 ரன்​கள் பின்​ தங்​கிய நிலை​யில் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய தென் ஆப்​பிரிக்க அணி ரவீந்​திர ஜடேஜா, குல்​தீப் யாதவ் ஆகியோரின் சுழற்​பந்து வீச்​சில் தடு​மாறியது. ரியான் ரிக்​கெல்​டன் 11, எய்​டன் மார்க்​ரம் 4, வியான் முல்​டர் 11, டோனி டி ஸோர்ஸி 2, டிரிஸ்​டன் ஸ்டப்ஸ் 5, கைல் வெர்​ரெய்ன் 9, மார்கோ யான்​சன் 13 ரன்​களில் நடையை கட்​டினர்.

2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் தென் ஆப்​பிரிக்க அணி 35 ஓவர்​களில் 7 விக்​கெட்​கள் இழப்​புக்கு 93 ரன்​கள் எடுத்​திருந்​தது. கேப்​டன் தெம்பா பவுமா 78 பந்​துகளில், 3 பவுண்​டரி​களு​டன் 29 ரன்​களும், கார்​பின் போஷ் ஒரு ரன்​னும் சேர்த்து களத்​தில இருந்​தனர். இந்​திய அணி தரப்​பில் ரவீந்​திர ஜடேஜா 4, குல்​தீப் யாதவ் 2, அக்​சர் படேல் ஒரு விக்​கெட் கைப்​பற்​றினர். 63 ரன்​கள் மட்​டுமே முன்​னிலை பெற்​றுள்ள தென் ஆப்​பிரிக்க அணி கைவசம்​ 3 விக்​கெட்​கள்​ இருக்​க இன்​று 3-வது நாள்​ ஆட்​டத்​தை எ​திர்​கொள்​கிறது.

கே.எல்.ராகுல் 4 ஆயிரம் ரன்கள்: கொல்கத்தா டெஸ்ட் போட்டியின் 2-வது நாளான நேற்று இந்திய அணியின் தொடக்க வீரரான கே.எல்.ராகுல் 39 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவர், 15 ரன்கள் சேர்த்திருந்த போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 4 ஆயிரம் ரன்கள் என்ற மைல் கல்லை கடந்தார். அவர், அறிமுகமான நாளில் இருந்து இதற்காக 3,977 நாட்களை செலவிட்டுள்ளார்.

சிக்ஸர் மன்னன்: கொல்கத்தா டெஸ்ட் போட்டியின் 2-வது நாளான நேற்று இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் 2 சிக்ஸர்கள் விளாசினார். இதன் மூலம் அவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் விளாசிய இந்திய வீரர்களின் பட்டியலில் வீரேந்திர சேவக்கை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை பிடித்தார். ரிஷப் பந்த் இதுரை 92 சிக்ஸர்கள் பறக்கவிட்டுள்ளார். சேவக் 90 சிக்ஸர்கள் விளாசியிருந்தார்.

4 ஆயிரம் ரன்கள்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர், 10 ரன்களை எடுத்திருந்த போது சர்வதேச டெஸ்ட் அரங்கில் 4 ஆயிரம் ரன்கள் என்ற மைல் கல்லை எட்டினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 4 ஆயிரம் ரன்கள் மற்றும் 300 விக்கெட்களை வீழ்த்தியவர்களின் பட்டியலில் இங்கிலாந்தின் இயன் போத்தம், இந்தியாவின் கபில்தேவ், நியூஸிலாந்தின் டேனியல் வெட்டோரி ஆகியோருடன் ஜடேஜா 4-வது வீரராக இணைந்தார்.

உருமாறிய ஆடுகளம்: கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தின் தன்மை 2-வது நாள் ஆட்டம் தொடங்கிய ஒரு மணி நேரத்திலேயே பெரிய அளவில் மாறியது. துணைக்கண்டங்களில் 4-வது நாளில் காணப்படும் ஆடுகளம் போன்று செயல்பட்டது. ஆடுகளத்தில் அதிகளவில் விரிசல்கள் இருந்தன. சிறந்த நீளத்தில் பந்துகள் வீசப்பட்ட போது புழுதி கிளம்பியது. அதேவேளையில் பவுன்ஸ்கள் மாறுபட்ட வகையில் இருந்தன.

120 ரன் இலக்கை எட்டுவதே கடினம்: கொல்கத்தா ஈடன் கார்டன் ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்கள் ஸ்டிரோக் மேற்கொள்வது கடினமாக உள்ளது. ஆட்டமிழக்காமல் இருப்பதற்கே கடுமையாக போராட வேண்டிய சூழல் நிலவுகிறது. இதனால் இந்த போட்டி இன்றே முடிவுக்கு வரக்கூடும். இந்த ஆடுகளத்தில் 120 முதல் 150 ரன்கள் இலக்கை அடைவதே கடினமாக அமையக்கூடும்.

கில்லின் நிலை என்ன?: கொல்கத்தா டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் ஆட்டத்தில் பேட்டிங்கின் போது இந்திய அணியின் கேப்டனான ஷுப்மன் கில்லுக்கு கழுத்து பகுதியில் சுளுக்கு ஏற்பட்டது. இதனால் அவர், ரிட்டயர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார். இந்நிலையில் அவரது உடல் நிலையை மருத்துவக்குழு கண்காணித்து வருவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

250 விக்கெட்கள்: கொல்கத்தா டெஸ்ட் போட்டியின் 2-வது நாளான நேற்று தென் ஆப்பிரிக்க அணியின் டிரிஸ்டன் ஸ்டப்ஸை (5), ரவீந்திர ஜடேஜா தனது சுழலால் போல்டாக்கினார். சொந்த நட்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் ஜடேஜாவுக்கு இது 250-வது விக்கெட்டாக அமைந்தது. இதன் மூலம் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட்டில் 250+ விக்கெட்களை வீழ்த்திய இந்திய வீரர்களின் பட்டியலில் ஜடேஜா 4-வது இடத்தை பிடித்தார். இந்த வகையில் அஸ்வின் (383), அனில் கும்ப்ளே (350), ஹர்பஜன் சிங் (265) முதல் 3 இடங்களில் உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x