Published : 15 Nov 2025 02:11 PM
Last Updated : 15 Nov 2025 02:11 PM
கொல்கத்தாவில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வாஷிங்டன் சுந்தர் ஸ்பின் ஆதரவுப் பிட்சில் ஒரே ஓவர்தான் வீசியிருக்கிறார். பேட்டிங்கில் 3ம் நிலையில் இறங்கி 29 ரன்களை எடுத்து 2ம் நாள் உணவு இடைவேளைக்கு முன்னதாக ஹார்மரின் அட்டகாசமான பந்தில் எட்ஜ் ஆகி ஆட்டமிழந்தார்.
வாஷிங்டன் சுந்தர் இந்திய அணிப் பயிற்சியாளரின் தத்துப் பித்து உத்திகளின் பலியாகி விடக்கூடாது என்ற அக்கறையினால் எழும் எச்சரிக்கை உணர்வு அவருக்குத் தேவை. தேவையில்லாமல் 3 இடது கை ஸ்பின்னர்களை அணியில் எடுத்து பவுலிங் ஆல்ரவுண்டர் ஆன வாஷிங்டன் சுந்தரை வெறும் பேட்டராக மட்டுமே கருதி 3ம் நிலையில் இறக்குவதில் என்ன சிக்கல் எனில், கடும் நெருக்கடியில் அவர் இறங்க நேரிடும். அதுவும் இது போன்ற டர்னிங் ட்ராக்கில் அவர் அதீத கவனத்துடன் தான் ஆட முடியுமே தவிர இங்கிலாந்தில் ஆடியது போல் சுதந்திரமாக ஆட முடியாது.
இன்னொரு மிகப்பெரிய ஆபத்து என்னவெனில் சுந்தர் இந்த டவுன் ஆர்டரில் இறங்கி கடும் அழுத்தத்தை சமாளிக்க முடியாமல் பேட்டிங்கில் தோல்வி அடைந்தால் அவர் ரோலை மீண்டும் பவுலிங் பிறகு கீழ்வரிசை பேட்டர் என்பதாக கம்பீர் மீட்டெடுக்க வாய்ப்பளிக்க மாட்டார் என்பது குறித்து சுந்தர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டுமெனில், அணியில் இடமில்லையா பரவாயில்லை நான் முழு நேர பவுலராகக் கீழ் வரிசை பினிஷிங் பேட்டராகவே தொடர்வேன். 3-ம் நிலையில் பேட்டிங்கில் என்னை இறக்க வேண்டாம் என்று கட் அண்ட் ரைட்டாக கம்பீர், கில் ஆகியோரிடம் தெரிவித்து விட வேண்டும்.
இல்லையெனில் சுந்தருக்கு பவுலிங்கில் வாய்ப்பில்லை, பும்ரா, சிராஜ், ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் இருக்கும் போது 6வது பவுலருக்கு அங்கு தேவை இல்லை. எனவே அவர் பேட்டிங்கில் ஆடினால் நீடிக்கலாம் இல்லையெனில் we have to move away from Sundar- என்று வாய் கூசாமல் கைகழுவும் ஒரு நிர்வாகத்திடம் தான் தற்போதைய இந்திய அணி சிக்கியுள்ளது. சுந்தரை நீக்கி விட்டு சாய் சுதர்சனையோ, தேவ்தத் படிக்கல்லையோ கொண்டு வருவார்கள், இவர்களில் யாரேனும் சொதப்பினால் படிதாரைக் கொண்டு வருவார்கள், சுந்தரின் டெஸ்ட் கரியர் அவ்வளவுதான்.
விவிஎஸ் லஷ்மண் ஒரு மிடில் ஆர்டர் பேட்டர், ஆனால் அணியின் தேவைகருதி அவரை ஓப்பனிங் ஆடச்சொல்லி வலியுறுத்தினார்கள் அவரும் ஒரு சில போட்டிகளில் ஆடினார். சிட்னியில் ஒரு மிகப்பெரிய 167 என்ற சதத்தையும் ஓப்பனிங்கில் எடுத்தார். ஆனால் அவர் என்ன சொன்னார் தெரியுமா? நான் ஓப்பனிங் பேட்டர் இல்லை, எனவே அந்த நிலையிலிருந்து என்னை எடுத்து மிடில் ஆர்டரில் இறக்குங்கள், அதுதான் எனக்குச் சரியானது என்று வாதிட்டு அதன் பிறகுதான் நாம் அவரது கொல்கத்தா மாஸ்டர் பீஸ் 291 போன்றவற்றையெல்லாம் பார்த்தோம்.
அணியில் யாரைப் பலி கடா ஆக்கலாம் என்பதில் கம்பீரின் சிந்தனைப் போக்கு எந்த ஒரு தனிப்பட்ட வீரருக்கும் நல்லதல்ல. எனவே வாஷிங்டன் சுந்தர் இதே டவுன் ஆர்டரில் பேட்டிங்கில் தொடர நேரிடுமே ஆனால் அவர் சொதப்பவும் கூடும். இல்லையேல் சிறப்பாக ஆடிவிட்டார் என்றாலும் இவரை விடவும் சிறந்த வீரர் அந்த டவுன் ஆர்டருக்கு வந்து விட்டால், வாஷிங்டன் சுந்தரின் கீழ்வரிசை பேட்டிங் மற்றும் ஆஃப் ஸ்பின் பவுலிங் ரோல் திரும்பவும் மீட்டெடுக்கப் பட மாட்டாது, அவரை ஒழித்து விடுவார்கள். எனவே வாஷிங்டன் சுந்தர் தன் டெஸ்ட் கரியரை தீர்மானம் செய்ய கம்பீரிடம் உடனடியாகப் பேசி தன் ஒரிஜினல் பேட்டிங் வரிசைக்கும் பவுலிங் வீசவும் வலியுறுத்தி அந்த இடத்தைத் தக்கவைப்பதுதான் சிறந்தது.
இல்லையெனில் சுந்தரின் கரியர் நிச்சயம் முடித்து வைக்கப்படும் என்பதில் சுந்தர் தெளிவாக இருந்து செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் வேண்டுகோளாக இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT