Published : 15 Nov 2025 10:40 AM
Last Updated : 15 Nov 2025 10:40 AM
சென்னை: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து டிரேடிங் முறையில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சனை வாங்கியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதற்கு பதிலாக ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை ராஜஸ்தான் வசம் கொடுத்துள்ளது சிஎஸ்கே.
ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான சீசனை முன்னிட்டு 10 ஐபிஎல் அணிகளும் தங்கள் அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் விவரங்களை இன்று வெளியிட வேண்டும். இதை தொடர்ந்து டிசம்பர் மாதம் நடைபெறும் மினி ஏலத்தில் ஐபிஎல் அணிகள் தங்களுக்கு வேண்டிய வீரர்களை பெறலாம். இந்த சூழலில் இதற்கு முன்பாக ஐபிஎல் அணிகள் டிரேடிங் முறையில் வீரர்களை மாற்றிக் கொள்ளலாம்.
அந்த வகையில் எதிர்வரும் சீசனை முன்னிட்டு ஷர்துல் தாக்குர், ரூதர்போர்ட் உள்ளிட்ட வீரர்களை லக்னோ மற்றும் குஜராத் அணியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கி உள்ளது. இந்த நிலையில், ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் அணிகளில் ஒன்றான சிஎஸ்கே அணி, சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் ரூ.18 கோடிக்கு ராஜஸ்தான் அணியில் இருந்து வாங்கியுள்ளது. இதற்கு பதிலாக ஜடேஜாவை ரூ.14 கோடிக்கு ராஜஸ்தான் வசம் சிஎஸ்கே வழங்கியுள்ளது. இதன் மூலம் ஜடேஜா தனது முன்னாள் ஐபிஎல் அணியுடன் மீண்டும் இணைந்துள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 11 ஐபிஎல் சீசன்களில் விளையாடி உள்ள சஞ்சு சாம்சன், 4027 ரன்கள் எடுத்துள்ளார். அந்த அணியின் கேப்டனாகவும் அவர் செயல்பட்டுள்ளார். அவர் சிஎஸ்கே அணிக்குள் வந்துள்ளது தோனிக்கு மாற்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் அணியில் இருந்து ஜடேஜா வெளியேறி உள்ளது சிஎஸ்கே அணியின் சுழற்பந்து வீச்சு பிரிவுக்கு சற்று பின்னடைவாக அமைந்துள்ளது. தரமான இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை மினி ஏலத்தில் சிஎஸ்கே டார்கெட் செய்யும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT