Published : 15 Nov 2025 09:09 AM
Last Updated : 15 Nov 2025 09:09 AM
டப்ளின்: 2026-ம் ஆண்டு ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது.
இந்த தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. இதில் ஐரோப்பிய தகுதி சுற்றில் நேற்று முன்தினம் இரவு அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் ‘எஃப்’ பிரிவில் இடம் பெற்றுள்ள போர்ச்சுகல் - அயர்லாந்து அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் உலகக் கோப்பையில் விளையாட தகுதி பெறலாம் என்ற நிலையில் போர்ச்சுகல் அணி களமிறங்கியது. ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த அணி 0-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. அயர்லாந்து அணி சார்பில் ட்ராய்பரோட் 17 மற்றும் 45-வது நிமிடங்களில் கோல் அடித்து அசத்தினார்.
இந்த தோல்வியால் போர்ச்சுகல் அணி உலகக் கோப்பை தொடருக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது 61-வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது.
அயர்லாந்து டிஃபென்டரான தாரா ஓ’ஷியாவை, ரொனால்டோ தனது முழங்கையால் இடித்து தள்ளினார். இதற்காக அவருக்கு களநடுவர் ரெட் கார்டு வழங்கினார். இதனால் ரொனால்டோ வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் அர்மேனியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்க முடியாது. இந்த ஆட்டத்தில் போர்ச்சுகல் வெற்றி பெற்றால் உலகக் கோப்பை தொடருக்கு எளிதாக தகுதி பெறும்.
ஃபிபாவின் ஒழுங்கு விதிகளின்படி, முரட்டுத்தனமாக ஃபவுல் செய்தால் 2 ஆட்டங்களில் தடைவிதிக்கப்பட வேண்டும். வன்முறை நடத்தை, முழங்கையால் இடித்து தள்ளினால் 3 போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட வேண்டும். கிறிஸ்டியானோ ரொனால்டோ விவகாரத்தில் ஃபிபா விசாரணை மேற்கொண்டு தடை உத்தரவை பிறப்பித்தால் உலகக் கோப்பை தொடரின் சில ஆட்டங்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாட முடியாத நிலை ஏற்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT