Published : 14 Nov 2025 11:24 AM
Last Updated : 14 Nov 2025 11:24 AM
சென்னை: ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருந்தது. இந்நிலையியில் ஹர்மன்பிரீத் கவுருக்கு சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழகத்தில் நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு பின்னர் நிரூபர்களிடம் ஹர்மன்பிரீத் கவுர் கூறியதாவது: உலகக் கோப்பை வெற்றியை மொத்த நாடும் கொண்டாடுவதால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நமது நாட்டில் ஆடவர், மகளிர் கிரிக்கெட் சமமாக நடத்தப்படுவதாகவே உணர்கிறேன். ஐசிசி கோப்பையை வெல்ல வேண்டும் என்ற லட்சத்தியத்தை நாங்கள் அடைந்துவிட்டோம். இந்த வெற்றி மகளிர் கிரிக்கெட்டுக்கு ஊக்கமாக இருக்கும். ஏராளமான இளம் வீராங்கனைகள் உந்துதல் பெறுவார்கள்.
விமர்சனம் என்பது விளையாட்டில் மட்டும் அல்ல, அது ஒவ்வொருவர் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே இருக்கிறது. எனக்கு எப்போதும் அது ஒரு சாதாரண பிரச்சினைதான். சமூக வலைதளங்களில் மக்கள் நம்மை பாராட்டுவார்கள். அது முக்கியம்தான். ஆனால் அதை ஏன் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்? இவ்வாறு அவர் கூறினார்.
‘ரஜினி போனில் வாழ்த்தினார்’: நிகழ்ச்சியின் போது ஹர்மன்பிரீத் கவுர் கூறும்போது, “உலகக் கோப்பை தொடர் முடிவடைந்ததும் சுற்றுலாவுக்காக தாய்லாந்து சென்றிருந்தேன். அப்போது நடிகர் ரஜினிகாந்த் போனில் தொடர்பு கொண்டு சாம்பியன் பட்டம் வென்றதற்காக வாழ்த்து தெரிவித்தார். அந்த தருணத்தை பெருமையாக உணர்ந்தேன். சென்னையில் அவரை நேரில் சந் திக்கலாம் என நினைத்திருந்தேன். ஆனால் அவர், சினிமா படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றுள்ளார்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT