Published : 13 Nov 2025 07:54 PM
Last Updated : 13 Nov 2025 07:54 PM

ஆஸி. பிட்ச்களில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சு ‘செல்ஃப்’ எடுக்காது: ஸ்டீவ் ஸ்மித்

தற்போது போடப்படும் ஆஸ்திரேலிய பிட்ச்கள் கணிக்க முடியாததாகி வருகிறது. மேலும், இங்கிலாந்து பவுலர்கள் ஸ்விங் செய்வதற்கு ஏற்ப அமையாது. இங்கு வேகமும் பவுன்ஸும் இருந்தால்தான் பிழைக்க முடியும் என்று ஆஸ்திரேலிய அணியின் ஆஷஸ் முதல் டெஸ்ட் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.

பெர்த்தில் வரும் 21-ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது, ஆப்டஸ் ஸ்டேடியத்தின் பிட்ச் நிச்சயம் பவுலிங்கிற்கு, குறிப்பாக வேகப்பந்து வீச்சுக்கு அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலிய ரக கூகபரா ‘சீம் அப்’ பந்து வீச்சுக்குச் சாதகமாகவே இருக்கும் என்று ஸ்டீவ் ஸ்மித் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

காயத்தினால் சந்தேகமாயிருந்த ஜாஷ் ஹேசில்வுட் இப்போது முழு உடல் தகுதியுடன் களமிறங்குகிறார். இங்கிலாந்து ஏதாவது ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசையை ஆட்டிப்பார்க்க முடியுமெனில், அது ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் மார்க் உட் ஆகியோரின் 145 - 150 கிமீ வேகப்பந்து வீச்சாகத்தான் இருக்க முடியும். அதுவும் மார்க் உட் சற்று முன் தான் காயமடைந்து ஸ்கேனுக்குச் சென்றதாகச் செய்திகள் எழுந்துள்ளன.

முதல் டெஸ்ட் பேஸ் மற்றும் பவுன்ஸ் அதிகமாக இருக்கும் பெர்த்தில் என்றால், அடுத்த டெஸ்ட் பிரிஸ்பன் என்னும் வேகப்பந்து வீச்சு ஆட்டக்களத்தில் பகலிரவு டெஸ்ட். எனவே இங்கிலாந்துக்கு ஓய்வே கிடையாது.

இந்நிலையில், விக்டோரியா அணியுடன் தோற்ற நியூஸவுத் வேல்ஸ் அணி வீரரும் ஆஸ்திரேலிய முதல் டெஸ்ட் கேப்டனுமான ஸ்டீவ் ஸ்மித், “இப்போது பிட்ச்கள் வித்தியாசமாக இருக்கின்றன. அதுவும் ‘பைட்’ இல்லாமல் மெதுவாக வீசும் இங்கிலாந்து பவுலர்களுக்குக் கடினம்.

இப்போது வேகமாக வீசக் கூடியவர்கள் இங்கிலாந்தில் இருக்கின்றனர். ஆனால், அவர்களும் ஃபிட் இல்லை அல்லது வயதாகிவிட்டது என்றே கூற வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு என்றால் இவர்கள் பந்து வீச்சு எடுபட்டிருக்கும். இப்போதைய பிட்ச்களில் எடுபடுவது கொஞ்சம் கடினம்.

மேலும், ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்து வீச்சை திறம்படக் கையாளும் வீரர்கள் உள்ளனர். எனவே இது ஒரு நல்ல சவால். வேகத்துடன் பந்தை ஸ்விங்கும் செய்ய முயன்றால் நிச்சயம் பயனளிக்கும். ஆனால் இன்னொன்றையும் கூற வேண்டும். இத்தகைய வேகப்பந்து பிட்ச்களில் ஸ்லோயர் பவுலர்களை கையாள்வதும் சில வேளைகளில் கடினம். ஆகவே பொறுத்திருந்து பார்ப்போம்” என்றார் ஸ்டீவ் ஸ்மித்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x