Published : 11 Nov 2025 02:22 PM
Last Updated : 11 Nov 2025 02:22 PM
1977-78-ல் பிஷன் சிங் பேடி தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. அது ஒரு நெருக்கமான தொடர். அதில் ஆஸ்திரேலியா 3-2 என்று வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்தத் தொடரில்தான் 8 கவுண்டி போட்டிகளில் இந்தியா அங்கு விளையாடியது, 8 போட்டிகளிலும் வென்று சாதனை படைத்தது.
அந்தத் தொடர் ஏன் நெருக்கமான தொடர் என்றால், முதல் 2 டெஸ்ட்களில் ஆஸ்திரேலியா வெல்ல, 3, மற்றும் 4-வது டெஸ்ட்களில் இந்தியா வெற்றி பெற, கடைசி டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்றது. இதில் கடைசி இன்னிங்சில் இந்திய அணிக்கு வெற்றி பெற 490 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இந்திய அணி 445 ரன்களைக் குவித்ததும் மறக்க முடியாது.
அந்தத் தொடரின் ஒரு கவுண்ட்டி போட்டியை விக்டோரியா அணிக்கு எதிராக மெல்போர்னில் இந்திய அணி ஆடியது. இதில் விக்டோரியா ஓப்பனர் பால் ஹிப்பர்ட் (Paul Hibbert) சதம் எடுத்தார். ஆனால் அதில் ஒரு பவுண்டரியைக் கூட அவர் அடிக்கவில்லை. மிக அதிசயமான ஒரு நிகழ்வு.
நவம்பர் 11-ம் தேதி தொடங்கிய இந்த கவுண்ட்டி போட்டி 4 நாட்கள் கொண்டது. இதில் இந்திய அணி விக்டோரியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இன்னொரு நிகழ்வு இதில் என்னவெனில், இந்திய டெஸ்ட் ஓப்பனர் சேத்தன் சவுகான், டெஸ்ட் போட்டிகளில் சதமே எடுத்ததில்லை, அதிகபட்ச ஸ்கோர் 97-தான் ஆனால் இந்தப் போட்டியில் முதல் இன்னிங்சில் 157 ரன்களை விளாசியதோடு 2வது இன்னிங்சில் 130 ரன்கள் வெற்றி இலக்கில் 47 ரன்களை எடுத்தார்.
விக்டோரிய தொடக்க வீரர் பி.ஏ.ஹிப்பர்ட் விக்டோரியாவின் முதல் இன்னிங்சில் 100 ரன்களை எடுத்து மதன்லாலிடம் கேட்ச் ஆகி ஆஃப் ஸ்பின்னர் பிரசன்னாவிடம் அவுட் ஆனார். இப்போதெல்லாம் இப்படி ஆடினால் டெஸ்ட் வாழ்க்கையை மறந்து விட வேண்டியதுதான். ஆனால் அன்றைய தினம் வேறு மதிப்பீடுகள் இருந்ததால் ஹிப்பர்ட்டை பிரிஸ்பன் முதல் டெஸ்ட் போட்டிக்கு ஆஸ்திரேலிய அணி தேர்வு செய்தது.
இவரும் இறங்கினார் 77 பந்துகள் ஆடி 13 ரன்களை மட்டுமே எடுத்தார். இதில் ஒரு பவுண்டரியையும் அடித்து அனைவரையும் அசத்தினார். ஆனால் கிர்மானியிடம் கேட்ச் ஆகி மொஹீந்தர் அமர்நாத்திடம் வீழ்ந்தார். 2-வது இன்னிங்ஸில் மதன்லாலிடம் 2 ரன்களில் எல்.பி.ஆகி வெளியேற டெஸ்ட் வாழ்க்கை அத்தோடு முடிவுக்கு வந்தது. ஆனாலும் இன்று வரை ஹிப்பர்ட் அந்த பவுண்டரியே அடிக்காத சதத்திற்காக நினைவில் கொள்ளப்பட்டு வருகிறார்.
அந்த பிரிஸ்பன் டெஸ்ட்டையும் இந்திய அணி மறக்க முடியாது ஏனெனில் 4வது இன்னிங்சில் இந்திய அணிக்கு வெற்றி இலக்கு 341 ரன்கள் இந்திய அணி இலக்கை விரட்டி 324 ரன்கள் வரை வந்தது. இன்று ஜென் ஸீ தலைமுறை கிரிக்கெட் ரசிகர்கள் கேலி பேசும் சுனில் கவாஸ்கர்தான் 113 ரன்கள் எடுத்து விரட்டளுக்கு அடித்தளம் அமைத்தார். கேப்டன் பிஷன் பேடியும் தன்னால் முடிந்தவரை போராடி 30 பந்துகளில் 26 ரன்களை விளாசி ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தினார்.
பவுண்டரியே இல்லாமல் சதம் எடுத்ததில் ஹிப்பர்ட் மட்டுமே தனித்து இல்லை, இங்கிலாந்தின் டெர்பிஷயர் பெட்டர் ஆலன் ஹில்லும் பவுண்டரியே அடிக்காமல் சதம் எடுத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து வீரர் கிரகாம் தோர்ப் 2000-01 தொடரில் லாகூரில் பாகிஸ்தானுக்கு எதிராக சதம் எடுத்த போது வெறும் 2 பவுண்டரிகளையே அடித்ததும் நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT