Published : 11 Nov 2025 12:16 PM
Last Updated : 11 Nov 2025 12:16 PM
டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி ஏறக்குறைய தோற்கடிக்க முடியாத அணி என்ற நிலையை அடைந்து வருகிறது. காரணம் பவர் ஹவுஸ் பேட்டிங் வரிசையே. ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் என்ன நினைத்து பேட்டரை இறக்குகிறார் என்பதை கவுதம் கம்பீர் இப்போது மனம் திறந்து பேசியுள்ளார்.
அது சரி, இதையெல்லாம் கேப்டன் சூரியகுமார் யாதவ் தானே பேச வேண்டும். பயிற்சியாளர் கம்பீர் டீம் பேட்டிங் டவுன் ஆர்டர் பற்றியெல்லாம் ஏன் பேசுகிறார்?. டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணி ஷுப்மன் கில்லுடையது, டி20 சூரியகுமார் யாதவுடையது என்று அன்று வாய் கிழிய செய்தியாளர்களிடம் கூறிய கம்பீர் இப்போது டவுன் ஆர்டர் பற்றி கூறுவதைப் பார்த்தால் உள்ளுக்குள்ளிருந்து கேப்டன்சியையும் கம்பீர்தான் செய்கிறார் என்பது நிரூபணமாகிறது.
அதாவது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் எந்த பேட்டரை இறக்கினால் அது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை முடிவு செய்வதாகவும் அதில் அவரது வழக்கமான டவுன் ஆர்டர், அவரது சராசரி, ஸ்ட்ரைக் ரேட் போன்றவற்றைப் பார்ப்பதில்லை என்றும் கூறுகிறார் கம்பீர்.
இந்நிலையில் பிசிசிஐ-யின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட வீடியோவில் கம்பீர் கூறியிருப்பதாவது: நான் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றதிலிருந்தே என் கொள்கை அதுதான். பேட்டிங் வரிசை அல்லது டவுன் ஆர்டர் என்பது எப்போதுமே அதிமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அப்படி அவசியமில்லை. இரண்டு ஓப்பனர்கள் நிரந்தரம். மீதமுள்ள வீரர்களை மாற்றி மாற்றி இறக்க வேண்டியதுதான்.
டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ஒருவர் எவ்வளவு ரன்கள் எடுத்துள்ளார் என்பது முக்கியமல்ல. அந்தச் சூழ்நிலையில் அவர் ஏற்படுத்தும் தாக்கம்தான் முக்கியம். எனவே இந்தக் குறிப்பிட்ட சூழ்நிலையில் இவர் தாக்கம் ஏற்படுத்துவார் என்று தோன்றினால் அவரை இறக்குவேன்.
மக்கள் பொதுவாக ரன்களுக்கும் தாக்கத்திற்கும் வேறுபாடு பார்க்க மாட்டார்கள். ஆனால் இரண்டும் வேறு வேறு. டி20 கிரிக்கெட்டில் தாக்கம் தான் முக்கியம். மொத்தம் 120 பந்துகளில் ஒவ்வொரு பந்துமே ஒவ்வொரு நிகழ்வு. எனவே ஒவ்வொரு பந்துக்குமே தாக்கம் ஏற்படுத்தும் வீரர் தேவை. அதனால்தான் பேட்டிங் ஆர்டரை இப்படி நெகிழ்வுத் தன்மையுடன் வைத்திருக்கிறோம்.
சராசரி, ஸ்ட்ரைக் ரேட்களை சிந்தித்து ஆட விரும்பவில்லை. ஒருகுறிப்பிட்ட சூழ்நிலையில் ஒரு வீரர் என்ன தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பதைப் பார்த்து அதற்கு ஏற்ப இறக்குகிறோம். டி20-யில் இது முக்கியமானது.
காலப்போக்கில் டி20 கிரிக்கெட் இன்னும் பரிணாம வளர்ச்சியடையும் ஆகவே பயிற்சியாளராகிய நாங்களும் வளர்ச்சியடையவில்லை எனில் கஷ்டம். காலத்தைத் தாண்டி நிற்க வேண்டும், இப்போது வரும் வீரர்கள் அப்படித்தான் தங்களை பழக்கிக் கொள்கின்றனர். இப்படியே தங்களைப் புதுப்பித்துக் கொண்டு இவர்கள் மேன்மேலும் வளர்வார்கள் என்று நம்புகிறேன்.” என்றார் கம்பீர்.
வெற்றி பெறும் வரையில் என்ன வேண்டுமானாலும் பேசலாம், நியாயப்படுத்தலாம், தொடர் தோல்விகள் வரும்போது என்ன சொல்வார் கம்பீர்? இப்போது புரிகிறது இந்திய டி20 அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் இல்லை, இந்திய டெஸ்ட், ஒருநாள் கேப்டன் ஷுப்மன் கில் இல்லை என்பது இப்போதாவது நமக்கு புரியவருமாறு கம்பீர் ஒப்புக் கொண்டுள்ளாரே அதுவே போதும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT