Published : 11 Nov 2025 11:22 AM
Last Updated : 11 Nov 2025 11:22 AM
புதுடெல்லி: உடற் தகுதி விஷயத்தை பொறுத்தவரை டி20 உலகக் கோப்பை தொடருக்கு இந்திய கிரிக்கெட் அணி இன்னும் தயாராகவில்லை என பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கவுதம் கம்பீர் பிசிசிஐ.டிவி இணையதளத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: வீரர்களின் ஓய்வறை வெளிப்படையாகவும் நேர்மறையான இடமாகவும் அமைந்துள்ளது. இது இப்படிதான் இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். டி20 உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் உடற்தகுதியைப் பொறுத்தவரை நாங்கள் இன்னும் இருக்க விரும்பும் இடத்தில் இல்லை என்றே நினைக்கிறேன். இதுதொடர்பாக அணி வீரர்களுடன் உரையாடி உள்ளேன். இந்த விஷயத்தில் உறுதியாக இருக்க விரும்புகிறோம்.
வீரர்கள் அனைவரும் உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என விரும்புகிறோம். நாம் உடல் ரீதியாக வலிமையாக இருந்தால், மன ரீதியாகவும் உறுதியானவர்களாக மாறுகிறோம். உயர் அழுத்த சூழ்நிலைகளில், உடல் தகுதி நேரடியாக நமது மன உறுதிக்கு பங்களிக்கிறது, இது மிக முக்கியமான நேரங்களில் சிறப்பாக செயல்பட அனுமதிக்கிறது. உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் 3 மாதங்கள் உள்ளன. அதற்குள் நாங்கள் விரும்பும் இடத்தில் இருக்க வேண்டும்.
ஏராளமானோர் தற்போதைய இந்திய டி20 அணியை ஆக்ரோஷமான பேட்டிங் வரிசையாகக் கருதுகிறார்கள். என்னை பொறுத்தவரையில் பந்துவீச்சில் ஆசிய கோப்பை தொடரில் முதல் 6 ஓவர்களில் ஜஸ்பிரீத் பும்ராவை 3 ஓவர்கள் வீசச் செய்ததே ஆக்ரோஷமான செயலாக நினைக்கிறேன். ஆக்ரோஷமான பேட்டிங் வரிசையை கொண்ட அணி என்று மட்டுமே அழைக்கப்படும் அணியாக நாங்கள் இருக்க விரும்பவில்லை, ஒட்டுமொத்தமாக அனைத்து துறையிலும் ஆக்ரோஷமான அணியாக இருக்க விரும்புகிறோம்.
பவர்பிளேவில் பும்ரா 3 ஓவர்களை வீசச் செய்தது நல்ல பலனை கொடுத்தது. பெரும்பாலான நேரங்களில் பவர்பிளேவில் வெற்றிகரமாக செயல்பட்டோம். மேலும் நடுஓவர்களில் வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் சுதந்திரமாக பந்துவீசவும், விக்கெட்களை வீழ்த்தவும் அதிக வாய்ப்புகளை கொடுத்தது. ஆல்ரவுண்டர்கள் அணியில் அதிகம் இருப்பது மிகவும் முக்கியம். கடந்த காலங்களில் பந்து வீச்சு தேர்வில் 6 பேர் மட்டுமே இருந்தனர். ஆனால் தற்போது 7 அல்லது 8 பேர் உள்ளனர்.
வாஷிங்டன் சுந்தரும், அக்சர் படேலும் துணைக் கண்டங்களில் மட்டும் சிறப்பாக செயல்படும் திறமை கொண்டவர்கள் கிடையாது. அனைத்து இடங்களிலும் சிறப்பாக செயல்படும் திறன் அவர்களிடம் உள்ளது. இதனால் தான், கடந்த 7 அல்லது 8 மாதங்களில் வாஷிங்டன் சுந்தரின் பந்து
வீச்சு பெரிய வெற்றியாக அமைந்துள்ளது.
அக்சர் படேல் சாம்பியன்ஸ் டிராபியில் 5-வது இடத்தில் பொறுப்புடன் பேட்டிங் செய்தார். விதிவிலக்காக அவர், சிறப்பாக செயல்பட்டார், பந்துவீச்சில் கடினமான ஓவர்கள் வீசினார். பவர்பிளே மற்றும் நடு ஓவர்களிலும் பந்து வீசினார். இவ்வாறு கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT