Published : 11 Nov 2025 10:52 AM
Last Updated : 11 Nov 2025 10:52 AM
கொல்கத்தா: இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையே 2 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டி, 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் கலந்துகொள்வதற்காக தென் ஆப்பிரிக்க வீரர்கள் நேற்று இந்தியா வந்து சேர்ந்தனர். பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை முடித்துக் கொண்டு தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை இரு பிரிவாக கொல்கத்தா வந்து சேர்ந்தனர்.
இங்குள்ள ஈடன் கார்டன் மைதானத்தில்தான் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 14-ம் தேதி தொடங்குகிறது. தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணியில் இடம் பெற்று இந்தியா ‘ஏ’ அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய தெம்பா பவுமா நேற்று காலை பெங்களூருவில் இருந்து புறப்பட்டு கொல்கத்தா வந்து தங்கியுள்ள தென் ஆப்பிரிக்க அணியுடன் இணைந்தார். அவருடன் ஜுபைர் ஹம்சா உள்ளிட்ட சில வீரர்களும், உதவி பயிற்சியாளர்களும் வந்திருந்தனர்.
தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனான தெம்பா பவுமா, பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக கலந்துகொள்ளவில்லை. இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் விதமாக அவர், இந்தியா ‘ஏ’ அணிக்கு எதிராக நடைபெற்ற 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி இருந்தார்.
இதன் முதல் இன்னிங்ஸில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்திருந்த தெம்பா பவுமா 2-வது இன்னிங்ஸில் 59 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தார். இதே போட்டியில் நடுவரிசை பேட்ஸ்மேனான ஜுபைர் ஹம்சா, இரு இன்னிங்ஸிலும் அரை சதம் அடித்து கவனம் ஈர்த்திருந்தார். சுழற்பந்து வீச்சுக்கு எதிராக வலுவான செயல் திறனையும் அவர், வெளிப்படுத்தியிருந்தார்.
இந்திய அணியில் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், கேப்டன் ஷுப்மன் கில், ஜஸ்பிரீத் பும்ரா, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல் ஆகியோர் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தா வந்து சேர்ந்தனர். மற்ற வீரர்கள் நேற்று அவர்களுடன் இணைந்தனர். இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் இன்று ஈடன் கார்டன் மைதானத்தில் பயிற்சியை தொடங்குகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT