Published : 11 Nov 2025 10:47 AM
Last Updated : 11 Nov 2025 10:47 AM
புதுடெல்லி: டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் இடிக்கப்பட உள்ளது. அதற்கு பதிலாக அதிநவீன வசதிகளுடன் 102 ஏக்கரில் விளையாட்டு நகரம் உருவாக்கப்பட உள்ளது.
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, ஐவஹர்லால் நேரு ஸ்டேடியம் இடிக்கப்பட்டு, அனைத்து முக்கிய விளையாட்டுப் பிரிவுகளுக்கும் மைதானங்கள், வீரர்களுக்கான குடியிருப்பு வசதிகள் கொண்ட ஒரு விளையாட்டு நகரம் உருவாக்கப்படுகிறது. எனினும் இந்தத் திட்டம் இன்னும் ஆரம்பகட்ட யோசனை நிலையிலேயே உள்ளது.
இந்தத் திட்டத்திற்காக உலகம் முழுவதிலும் இது போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட பல்வேறு மாதிரிகளை அரசு ஆய்வு செய்து வருகிறது. இந்த வகையில் கத்தார் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள விளையாட்டு நகரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சமீபத்தில் தோகாவில் உள்ள விளையாட்டு நகரத்தை பார்வையிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
1982-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் கட்டப்பட்டது. 60 ஆயிரம் இருக்கைகள் கொண்ட இந்த மைதானத்தில் கடந்த 2010-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 2017-ம் ஆண்டு யு-17 ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்றுள்ளன.
2010-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக மைதானம் ரூ.961 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டது. சமீபத்தில், இந்த மைதானத்தில் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதற்காக ரூ.50 கோடி செலவில் மைதானம் சீரமைக்கப்பட்டு இருந்தது.
தற்போது மைதான வளாகத்தில் கால்பந்து மைதானம், தடகளப் பாதை தவிர, வில்வித்தை அகாடமி, பாட்மிண்டன் ஆடுகளங்கள், இந்திய விளையாட்டு ஆணையத்தின் அலுவலகம், தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை மற்றும் தேசிய ஊக்க மருந்து பரிசோதனை ஆய்வகம் ஆகியவை உள்ளன. விளையாட்டு நகரம் தொடங்கப்படுவதற்கான பணிகள் தொடங்கியவுடன் இந்த அலுவலகங்களும் இடமாற்றம் செய்யப்படும். அதேபோல் முக்கிய மைதானமும் இடிக்கப்படும்.
குடியிருப்பு வளாகங்கள் கட்டப்படும். இதனால் போட்டியில் வரும் வீரர், வீராங்கனைகள் இங்கேயே தங்குவதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்படும். மைதான வளாகத்தின் 102 ஏக்கர் பரப்பளவையும் பயன்படுத்திக் கொள்ள திட்டமிடப்பட்டு வருகிறது. ஏனெனில் தற்போது 100 ஏக்கர் பரப்பளவு விளையாட்டுக்கு உகந்த அளவில் பயன்படுத்தப்படாமல் உள்ளது.
டெல்லி மைதான வட்டாரங்கள் கூறும்போது, “தற்போது இது ஒரு யோசனைதான், ஆனால் சாத்தியக்கூறு ஆய்வு எவ்வாறு செயல்படுகிறது என்பதை பார்க்கவேண்டும். ஆனால் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் மிகவும் தீவிரமாக உள்ளது” என்று தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT