Published : 10 Nov 2025 12:06 PM
Last Updated : 10 Nov 2025 12:06 PM
சண்டிகர்: தன்னம்பிகை வைத்து செயல்படும்போது அதற்கான வெற்றிகள் தேடி வரும் என்று இந்திய மகளிர் அணி கிரிக்கெட் வீராங்கனை ஷபாலி வர்மா தெரிவித்தார்.
கடந்த வாரம் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிச் சுற்றில் ஷபாலி வர்மா சிறப்பாக விளையாடி 87 ரன்கள் குவித்து ஆட்டநாயகி விருதை கைப்பற்றினார். மேலும், பந்துவீச்சின்போது 2 விக்கெட்களைச் சாய்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இதுதொடர்பாக சண்டிகரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: உலகக் கோப்பையை வென்றதை எங்களால் மறக்கவே முடியாது. கடந்த ஓராண்டாக பல்வேறு சவால்களைச் சந்தித்து அணியில் இடம்பெற்றேன். கடந்த ஓராண்டு காலம் என்பது எனக்கு மிகுந்த சவால்கள் நிறைந்ததாகவே இருந்தது.
பல்வேறு பிரச்சினைகளைச் சந்திக்க நேர்ந்தது. ஆனால் அந்த சவால்களை சமாளிக்க போதிய முயற்சிகளை செய்தேன். எனது முயற்சிகளுக்குக் கிடைத்த பலனாக கடவுள் எனக்கு இறுதிப் போட்டியில் விளையாட வாய்ப்பு ஏற்படுத்தித் தந்தார். அரை இறுதிக்கு முன்னதாக இந்திய அணியுடன் நான் இணைந்தபோது, உலகக் கோப்பை வெற்றிக்காக எனது பங்களிப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று உறுதி செய்து கொண்டேன்.
இறுதிப் போட்டி என்பது மிகப்பெரிய மேடை. தொடக்கத்தில் நான் பதற்றமாகவே இருந்தேன். ஆனால், அதன் பின்னர் என்னை நான் அமைதிப்படுத்திக் கொண்டு, எங்களது திட்டத்தை செயல்படுத்தினோம். திட்டத்தை நாங்கள் சரியாக செயல்படுத்தியதால் கோப்பையைக் கைப்பற்றினோம்.
அணி வீராங்கனைகள் அனைவரும் திட்டமிட்டு செயல்பட்டு அதை களத்தில் பரிசோதித்தோம். அதனால்தான் கோப்பையை எங்களால் வெல்ல முடிந்தது. இறுதிப் போட்டியில் ஆல்-ரவுண்டராக நான் பரிமளித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நான் என்னுடைய சொந்த ஊரான ரோஹ்டாக்குக்கு சென்றபோது எனக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். கடின உழைப்புக்கு எப்போதுமே பலன் கிடைக்கும் என்பதை நான் உணர்ந்துகொண்டேன். தன்னம்பிக்கை வைத்து செயல்படும்போது அதற்கான வெற்றிகள் தேடி வரும்.
என்னுடைய ரோல் மாடல் எப்போதுமே கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்தான். எனது வெற்றிக்குக் காரணம் எனது குடும்ப உறுப்பினர்கள், பயிற்சியாளர்கள், அணி வீராங்கனைகள் என்பதில் சந்தேகமில்லை.
வெற்றிக்குப் பிறகு பிரதமர் மோடியைச் சந்தித்தோம். அவரது பாராட்டு எங்களுக்கு ஊக்கம் அளித்தது. சுமார் 2 மணி நேரம் இந்திய அணி வீராங்கனைகளுடன் அவர் செலவிட்டார். விரைவில் ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனியை சந்திக்க உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT