Published : 09 Nov 2025 05:45 PM
Last Updated : 09 Nov 2025 05:45 PM
இந்தியா-ஏ, தென் ஆப்பிரிக்கா ஏ அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ வெற்றி பெற்றது. துருவ் ஜுரெல் 2 இன்னிங்ஸ்களிலும் சதமடித்தார். ரிஷப் பண்ட்டின் பிரதம போட்டியாளரான துருவ் ஜுரெல் இப்படி ஆட, ரிஷப் பண்ட்டோ 3 முறை சரியான அடி வாங்கி காயத்தினால் வெளியேறவும் செய்தார்.
இங்கிலாந்து பயணத்தின் போது தேவையில்லானல் கிறிஸ் வோக்ஸ் பந்தை ரிவர்ஸ் ஷாட் ஆடுகிறேன் என்று ஃபுல்டாசில் பாதத்தில் வாங்கி கடும் காயமடைந்து சிகிச்சை முடிந்து இப்போது தான் திரும்பி வருகிறார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வரவிருக்கும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட அணியிலும் ரிஷப் பண்ட் இடம்பெற்றுள்ளார்.
அந்த டெஸ்ட் போட்டிக்கான தயாரிப்பாகத்தான் தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிராக இந்தியா ஏ அணியின் கேப்டனாக ஆடினார் பண்ட். ஏற்கெனவே தன் அதிரடியினால் முதல் டெஸ்ட் போட்டியை வெற்றி பெற்றுக் கொடுத்தார் ரிஷப் பண்ட். 2வது டெஸ்ட் போட்டியிலும் அட்டகாசமாகவே ஆடினார். ஆனால் ஷாட்களின் போது பேலன்ஸ் இல்லாமல் தவறுவது, கீழே விழுவது போன்றவற்றை இன்னும் அவர் மாற்றிக்கொள்ளவில்லை.
2 வது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுலுக்குப் பிறகு இறங்கிய ரிஷப் பண்ட் வந்தவுடனேயே 4, 4, 6 என்று தன் அனாயாச மட்டைச் சுழற்றலைத் தொடங்கினார்.
ஆனால் திடீரென அவரது ஆக்ரோஷக் கோணங்கித் தனம் வெளிப்பட தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ஷீபோ மோர்க்கியை ரிவர்ஸ் ரேம்ப் ஷாட் ஆடப்போது ஹெல்மெட்டில் ‘மட்’ என்று வாங்கினார். பந்தின் வேகம் காரணமாகவும் பவுன்சரின் தாக்கம் காரணமாகவும் பேலன்ஸ் இழந்து தரையில் விழுந்தார். உடற்தகுதி மருத்துவர் கட்டாய மூளை அதிர்ச்சி சோதனை செய்ய வேண்டியதாயிற்று.
இதே மோர்க்கி இதன் பிறகும் ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசி பண்ட்டைச் சோதித்தார், இந்த முறை இடது முழங்கையை மட்டென்று வந்து அடித்தது. பண்ட் மீண்டும் வலியால் துடித்தார், அடி வாங்கிய போது உடனேயே சிறு அலறலும் அவரிடமிருந்து வெளிப்பட்டதாக செய்திகள் வெளியாகின. மீண்டும் பிசியோ வந்தார் பெயின் கில்லருடன் தொடர்ந்தார்.
இந்த 2-வது அடி வாங்கி தேறிய பிறகு சில நிமிடங்களிலேயே மோர்க்கியின் இன்னொரு வேகப்பந்தை தவறான லைனில் ஆடி அப்டமனில் சரியான அடியை வாங்கினார். படக்கூடாத இடத்தில் பட்ட அடியாகும் இது. இந்த முறையும் பிசியோ வந்தார், அதாவது 20 நிமிடங்களில் 3வது முறையாக பண்ட் அடி வாங்கி பிசியோ வந்தார்.
பிறகு அவர் வாங்கிய இரண்டாவது அடி முழங்கையைத் தாக்கியதால் அதன் வலி தாங்காமல் பெவிலியனுக்கே சென்றார். ரிட்டையர்ட் ஹர்ட் ஆனார்.
பிறகு மீண்டும் இறங்கி அரைசதம் நிறைவு செய்து கடைசியாக ஆட்டமிழந்து டிக்ளேர் செய்தார். அதாவது மோர்க்கி என்ற ஒரு பவுலர் ரிஷப் பண்ட்டை படாதபாடு படுத்தியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இதே டெக்னிக்கை பயன்படுத்தி அவரைச் சாய்க்க முனையலாம். ரிஷப் பண்ட் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஒன்று தன் ஆட்டத்தில் கவனம் தேவை, காயமடைந்து விடக்கூடாது, அவருக்கு இருக்கும் இன்னொரு அச்சுறுத்தல் துருவ் ஜுரெல் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT