Published : 08 Nov 2025 12:05 PM
Last Updated : 08 Nov 2025 12:05 PM
புதுடெல்லி: ஹாக்கி இந்தியா நூற்றாண்டு விழா கொண்டாட்டம் நேற்று டெல்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் தேசிய மைதானத்தில் நடைபெற்றது. விழாவில் புகைப்பட கண்காட்சி இடம் பெற்றிருந்தது. இந்திய ஹாக்கி அணி பல்வேறு ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்ற தருணங்களின் வரலாற்று சிறப்புமிக்க புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.
தொடர்ந்து ஹாக்கி ஜாம்பவான்களான குர்பக்ஸ் சிங், அஸ்லாம் ஷெர் கான், ஹர்பிந்தர் சிங், அஜித் பால் சிங், அசோக்குமார், பி.பி.கோவிந்தா, ஜாபர் இக்பால், பிரிகேடியர் ஹர்சரண் சிங், வினீத்குமார், மிர் ரஞ்சன் நேகி, ரோமியோ ஜேம்ஸ், அசுந்த லக்ரா சுபத்ரா பிரதான் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.
விழாவில் மத்திய சிறுபான்மை விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு, விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் தமிழகத்தில் நடைபெற உள்ள 14-வது ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்கான கோப்பையும் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.
தொடர்ந்து காட்சிப் போட்டி நடத்தப்பட்டது. இதில் மன்சுக் மாண்டவியா தலைமையிலான அணியும், இந்திய ஹாக்கி கூட்டமைப்பின் தலைவர் திலிப் திர்கே தலைமையிலான அணியும் விளையாடின. இரு அணிகளிலும், முன்னாள் வீரர், வீராங்கனைகள் கலவையாக இடம் பெற்றிருந்தனர். இந்த ஆட்டத்தில் மன்சுக் மாண்டவியா தலைமையிலான அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் டங் டங், சலிமா டிடி, கிருஷ்ண பதக் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். ஹாக்கி இந்தியா லெவன் அணி சார்பில் மன்பிரீத் சிங் ஒரு கோல் அடித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT