Published : 08 Nov 2025 11:12 AM
Last Updated : 08 Nov 2025 11:12 AM
ஹாங்காங்: ஹாங்காங் சிக்ஸ் கிரிக்கெட் தொடர் ஹாங் காங்கில் நடைபெற்று வருகிறது. இதில் ‘சி’ பிரிவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இந்திய அணி 6 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 86 ரன்கள் குவித்தது.
ராபின் உத்தப்பா 11 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 28 ரன்களும், பரத் சிப்லி 13 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 24 ரன்களும், கேப்டன் தினேஷ் கார்த்திக் 6 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 17 ரன்களும் சேர்த்தனர். ஸ்டூவர்ட் பின்னி 4, மிதுன் 6 ரன்கள் எடுத்தனர்.
87 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் அணி 3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் எடுத்திருந்த போது மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் போட்டியை நடத்த முடியாத சூழ்நிலை உருவானது. இதையடுத்து வெற்றியை தீர்மானிக்க டக்வொர்த் லீவிஸ் முறை அமல்படுத்தப்பட்டது.
இதில் பாகிஸ்தான் அணி 2 ரன்கள் குறைவாக எடுத்திருந்தது. இதனால் இந்திய அணி டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT