Published : 07 Nov 2025 03:18 PM
Last Updated : 07 Nov 2025 03:18 PM

ஷமிக்கு உடல்தகுதி இல்லை, மேட்ச் பிராக்டீஸ் இல்லை என்பதெல்லாம் பொய் - பயிற்சியாளர் கடும் சாடல்!

எவ்வளவுதான் திறமையைக் காட்டி நிரூபித்தாலும் சிலருக்கு இப்போதெல்லாம் இந்திய அணியில் புதிதாக இடம் கிடைப்பதோ அல்லது தன்னை நிரூபித்த வீரர்கள் மீண்டும் அணிக்குத் திரும்புவதோ நிச்சயமற்றதாகி விடுகிறது. முகமது ஷமி இப்போது லேட்டஸ்ட் பலி ஆடாகியுள்ளார்.

ரஞ்சி டிரோபி 2025–26 தொடரில் ஷமி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அப்படியும் அவரை இந்தியா ஏ அணிக்குத் தேர்வு செய்யவில்லை, இப்போது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவர் தேர்வு செய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளார். இதுவரை மூன்று போட்டிகளில் அவர் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி, பெங்காலை உத்தராகண்ட் மற்றும் குஜராத் அணிகளுக்கு எதிராக வெற்றி பெறச் செய்தார். இத்தகைய ஆட்டத்தையும் பொருட்படுத்தாமல் தேர்வுக்குழு அவரை மீண்டும் புறக்கணித்துள்ளது. அஜித் ஆகார்கர் தலைமையிலான தேர்வுக்குழு ஷமியின் ‘மேட்ச் ஃபிட்ட்னஸ்’ குறித்த சந்தேகங்களையே காரணமாகக் கூறியுள்ளதாகத் தெரிகிறது.

மேட்ச் ஃபிட்னெஸ், மேட்ச் பிராக்டீஸ் போன்ற சொற்றொடர்களெல்லாம் ‘சும்மா பம்மாத்து’ என்பதே ஷமியின் பயிற்சியாளரான முகமது பத்ருதீனின் காட்டமான சாடலாக உள்ளது. ஷமியின் தனிப்பட்ட பயிற்சியாளராக உள்ள முகமது பத்ருதீன், “எனக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிகிறது, ஷமியை வேண்டுமென்றே புறக்கணிக்கிறார்கள். வேறு எந்தக் காரணமும் இருப்பதாக நான் கருதவில்லை. அவர் பூரண உடல் தகுதியுடன் தான் இருக்கிறார். ரஞ்சி போட்டிகளில் விளையாடி, 15 விக்கெட்டுகள் எடுத்து வருபவர் எப்படி ‘அன்ஃபிட்’ ஆக இருக்க முடியும்? அணித் தேர்வில் தவறு நடந்துள்ளது. இந்தியாவில் நடக்கும் டெஸ்ட் தொடரில் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே விளையாடுவார்கள். ஷமியை குறைந்தபட்சம் அணியில் வைத்திருக்கலாம். அதனால் பும்ராவின் பணிச் சுமை குறையும். ஆனால் அவர்கள் முன்கூட்டியே ஷமியை எடுக்க வேண்டாம் என்று தீர்மானித்துக் கொண்டு விட்டார்கள் போலிருக்கிறது.

டெஸ்ட் அணியைத் தேர்வுசெய்யும் போது ரஞ்சி டிரோபி ஆட்டங்களின் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்வதுதான் வழக்கம். ஆனால் இப்போது பார்த்தால், T20 அளவுகோல்களை வைத்து தேர்வு செய்கிறார்கள் போல. இது முற்றிலும் தவறு. இப்போது கூறப்படும் ‘ஆட்டத்திறன்’ 'உடல் தகுதி' போன்றவை வெறும் வாய்ஜாலங்களே, சாக்கு போக்குகளே.

ஷமியை ‘அன்ஃபிட்’ என்பதும் அவருக்கு மேட்ச் பிராக்டீஸ் தேவை என்று கூறுவதும் பொய்கள். யார் வேண்டும், வேண்டாம் என்று முன் கூட்டியே தீர்மானித்து பட்டியல் தயாரித்து விடுகிறார்கள். ஷமி நிச்சயம் தேர்வுப் புறக்கணிப்பினால் மனம் உடைந்துதான் போயிருக்கிறார். யாராக இருந்தாலும் அப்படித்தானே இருக்கும். நன்றாக ஆடியும் தேர்வு செய்யப்படவில்லை என்றால் வெறுப்பாகத்தான் இருக்கும். நான் அவரிடம் என்ன கூற முடியும்? தொடர்ந்து செயல்படு, நிரூபி, நீ 100% உடல்தகுதி பெற்றிருக்கிறாய், உன் ஆட்டம் தான் அவர்களை உன் பக்கம் திருப்பும், பதற்றமடையாதே, நிச்சயம் உன் வாய்ப்பு வரும் என்றுதான் கூறிவருகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x