Published : 07 Nov 2025 01:57 PM
Last Updated : 07 Nov 2025 01:57 PM
ஆக்லாந்தில் இன்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டி20 சர்வதேசப் போட்டியில் நியூஸிலாந்து அணி 207 ரன்களைத் தடுத்து ஆட்கொள்ள படாதபாடு பட்டு கடைசியில் நூலிழையில் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இதுவரை 1-1 என்று சமன் செய்துள்ளது. இது நியூஸிலாந்து அணியின் இந்த சீசனின் முதல் டி20 வெற்றியாகும்.
நியூஸிலாந்து முன்னதாக 28 பந்துகளில் 6 பவுண்டரிகள் 7 அதிரடி சிக்சர்களுடன் 78 ரன்கள் விளாசிய சாப்மனின் காட்டடி தர்பாரினால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்களைக் குவித்தது. செம அடி வாங்கியவர் மே.இ.தீவுகளின் ஓப்பனிங் ஃபாஸ்ட் பவுலர் ஜெய்டன் சீல்ஸ், இவர் 4 ஓவர்களில் 8 பவுண்டரிகள் 3 சிக்சர்களை வாரி வழங்கி 61 ரன்களை வாரி வழங்கினார். இவருக்கு அடுத்தபடியாக சாத்து வாங்கியவர் ரொமரியோ ஷெப்பர்ட் இவர் 3 ஓவர்களில் 2 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 38 ரன்களை தாரை வார்த்தார்.
செம பவுலிங் என்றால் ஆல்ரவுண்டர் மேத்யூ ஃபோர்டுதான் இவர் 4 ஓவர்களில் 17 ரன்களையே விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார். இடது கை ஸ்பின்னர் அலெக் ஹுசைன் 3 சிக்சர்கள் 3 வைடுகளுடன் ஒரே ஓவரில் 23 ரன்களை சொல்லி சொல்லி வாரி வழங்கினார்.
208 ரன்கள் இலக்கை விரட்டிய மே.இ.தீவுகள் பிராண்டன் கிங்கை டக்கில் இழந்து பிறகு 13வது ஓவர் முடிய ஒரு பந்து இருக்கும் போது 6 விக்கெட்டுகளை இழந்து 93 ரனக்ள் என்று தோல்வியைத் தவிர வேறு எதுவும் நடக்க வாய்ப்பில்லை என்று நினைத்த போது நடக்க முடியாத அசாத்தியத்தை மே.இ.தீவுகள் நடத்திக் காட்டிவிடும் என்ற அளவுக்கு ரோவ்மன் போவெல், ரொமாரியோ ஷெப்பர்ட், மேத்யூ ஃபோர்டு ஆகியோர் அப்படியே பிளேட்டைத் திருப்பி நியூஸிலாந்து அணிக்கு வயிற்றில் மோட்டார் ஓடச்செய்தனர்.
கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை என்ற அளவுக்கு போட்டி நெருக்கமாக வந்தது. கைலி ஜேமிசன் கடைசி ஓவரை வீசினார், முதல் 2 பந்துகளில் 2 பவுண்டரியை விளாச 4 பந்துகளில் 8 ரன்களே தேவை என்ற ஒரு அசாத்திய வெற்றிக்கு அருகில் வந்தனர். ஆனால் போவெல் அதிரடி இன்னிங்ஸ் கைலி ஜேமிசனால் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. கடைசி பந்தில் 4 ரன்கள் எடுத்தால் டை. சூப்பர் ஓவர் என்ற நிலையில் மேத்யூ ஃபோர்ட் சிங்கிள்தான் எடுக்க முடிந்தது. மே.இ.தீவுகள் 3 ரன்கள் பின்னிலை கண்டு பரிதாபத் தோல்வி கண்டது, ஆனால் ஸ்பிரிட்டட் சேசிங். ஜேமிசன் அருமையான ஸ்லோயர் பந்தை வீசினார்.
முதல் போட்டியில் மே.இ.தீவுகளிடம் 7 ரன்களில் தோல்வி அடைந்த நியூஸிலாந்து இந்தப் போட்டியில் வென்று சீசனின் முதல் டி20 வெற்றிக்காகப் போராடியது. பிராண்டன் கிங் எட்ஜ் செய்து டஃபியிடம் ஆட்டமிழந்த போது முதல் ஓவரில் 3 பந்துகளே வீசப்பட்டிருந்தன. அலிக் அதான்சே (25 பந்துகளில் 2 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 33) மற்றும் கேப்டன் ஷேய் ஹோப் (24) ஸ்கோரை 49 ரன்களுக்கு உயர்த்தினர்.
இந்நிலையில் அதான்சே ரிவர்ஸ் ஸ்வீப்பில் நீஷமுக்குப் பதில் அணிக்குள் வந்த இஷ் சோதியிடம் வெளியேறினார். அகஸ்டே அடுத்ததாக சாப்மேனின் சாதகக் கேட்சுக்கு இரையானார். இந்த விக்கெட்டும் சோதிக்குத்தான். ஜேசன் ஹோல்டரை சோதி அழகான கூக்ளியில் பவுல்டு செய்தார். 2 ஓவர்களில் மேட்சே மாறிப்போனது.
93/6 என்று மே.இ.தீவுகள் 13வது ஓவர் முடிவில் இருந்தது. ஆனால் இப்போதைய மே.இ.தீவுகளில் அதிரடி பலம் ஒரு சிலருக்குத்தான் தெரியும். 93/6-லிருந்து ரோவ்மன் போவெலும் ஷெப்பர்டும் காட்டடி தர்பாரில் இறங்கி 6 பந்துகளில் 5 சிக்சர்களைப் பறக்க விட்டனர். ஷெப்பர்ட் 16 பந்துகளில் 34 என்று வெளியேறினார். ஆனால் போவெலை வலுவாக இருந்தார், பந்துகளை மேற்கூரைகளுக்குப் பறக்க விட்டுக் கொண்டிருந்தார். 1 பவுண்டரி 6 சிக்சர்களுடன் போவெல் 16 பந்துகளில் 45 ரன்களை விளாசித்தள்ளினார். மேத்யூ ஃபோர்டு தன் பங்குக்கு 13 பந்துகளி 2 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 29 ரன்களை விளாசினார்.
93/6லிருந்து காட்டடி தர்பாரில் 4 ஓவர்களில் 62 ரன்களையும் பிறகு அடுத்த 17 பந்துகளில் மேஉம் 42 ரன்களையும் மே.இ.தீவுகள் கண்டபடி தாக்கி ஆடி எடுக்க கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை என்ற நிலை வந்தது. அதில்தான் ஷெப்பர்ட் 2 பவுண்டரிகளை அடித்தும் போவெல் விக்கெட்டினாலும் கடைசி அருமையான ஸ்லோ பந்தினாலும் நியூஸிலாந்து ஸ்கோரைக் கடக்க முடியாமல் துரதிர்ஷ்டவசமாகத் தோல்வி கண்டது. இஷ் சோதி தன் கடைசி 2 ஓவர்களில் 4 சிக்சர்களையும் சாண்ட்னர் 3 சிக்சர்களையும் கொடுக்க, கைலி ஜேமிசன் மொத்தம் 5 சிக்சர்கள் விளாசப்பட்டார். புதுமுக வேகப்பந்து வீச்சாளர் ஜாக் ஃபோல்க்ஸ் பவுலிங்கும் எடுபடவில்லை அவரும் 2 ஓவர்களில் 36 ரன்களை 4 சிக்சர்களுடன் வாரி வழங்கினார். டஃபி 4 ஓவர்களில் 21 ரன்கள் ஒரு விக்கெட். இஷ் சோதி 4 ஓவர் 39 ரன் 3 விக்கெட், சாண்ட்னர் 4 ஓவர் 31 ரன் 3 விக்கெட். ஆட்ட நாயகனாக மார்க் சாப்மேன் தேர்வு செய்யப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT