Published : 06 Nov 2025 04:07 PM
Last Updated : 06 Nov 2025 04:07 PM
கடந்த ஐபிஎல் சாம்பியன் ஆர்சிபி அணியின் உரிமையாளர் நிறுவனமான டியாஜியோ ஆர்சிபி கிரிக்கெட் அணியை விற்க முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (SEBI) டியாகியோ நிறுவனம் அளித்த அறிக்கையில், ஆர்சிபி மீது தனது முதலீட்டுக்கான தேவைப்பாடு குறித்த ஆய்வு (strategic review) நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளது. இந்த மதிப்பாய்வு 2026 மார்ச் 31-க்குள் நிறைவடையும் என கூறப்பட்டுள்ளது.
ஆர்சிபி அணி தற்போது அதிகாரபூர்வமாக விற்பனைக்கு வந்துள்ளது. அணியின் உரிமையாளரான டியாஜியோ (Diageo) நிறுவனம், கிட்டத்தட்ட 2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு அணியை விற்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆர்சிபி ஆண்கள் மற்றும் மகளிர் அணிகளின் உரிமையாளரான ராயல் சாலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் (Royal Challengers Sports Private Limited-RCSPL), நிறுவனம் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் முழுமையான துணை நிறுவனம். இந்நிறுவனத்தின் உரிமையாளர் டியாகியோ. இன்னும் நான்கு மாதக் காலத்திற்குள் ஆர்சிபி விற்பனையை முடிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
“ஆர்சிபி அணி எங்களுக்கு முக்கியமான மூலதனச் சொத்தாக இருந்து வருகிறது. இருப்பினும், எங்களின் முக்கியத் தொழிலான மதுபான வர்த்தகத்துக்கு, கிரிக்கெட் வணிகம் நேரடியாக இணைந்தது அல்ல. எனவே, இந்த முதலீட்டை திரும்பப் பெறுவது குறித்த மதிப்பாய்வை மேற்கொண்டு வருகிறோம்” என்று டியாஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமீப ஆண்டுகளில் டியாகியோவின் உலகளாவிய வணிகம் சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், இத்தீர்மானம் வந்துள்ளது. இதற்கு முன், 2024 ஜூன் மாதத்தில் வெளியிடப்பட்ட பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையத்துக்கான அறிக்கையில், ஆர்சிபி அணியின் விற்பனை குறித்தச் செய்திகளை "கற்பனையானவை" என அந்நிறுவனம் மறுத்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இப்போது உலகளாவிய சந்தை அழுத்தங்கள் காரணமாக டியாகியோவின் இந்த விற்பனைப் பரிசீலனைக்கு வந்ததாகத் தெரிகிறது. மேலும் தங்கள் முதல் ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகு பெங்களூரு சின்னசாமி மைதானம் வெளியே ஏற்பட்ட பரிதாபகரமான நெரிசலில் பலர் பலியானதையடுத்து அணி விற்பனை குறித்த ஊகங்கள் அதிகரித்தன.
ஐபிஎல் தொடங்கிய காலத்தில் ஆர்சிபி அணி 111.6 மில்லியன் டாலர்களுக்கு விஜய் மல்லையாவால் வாங்கப்பட்டது. அவர் 2016-ல் பதவி விலகியபின், டியாகியோ நிறுவனம் முழுமையான உரிமையாளராக ஆனது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT