Published : 05 Nov 2025 12:17 PM
Last Updated : 05 Nov 2025 12:17 PM

ஆஷஸ் முதல் டெஸ்ட்: கோன்ஸ்டாஸ் டிராப்- வெதரால்ட் என்ற புதுமுகம் அறிமுகம்!

நவம்பர் 21ம் தேதி பெர்த்தில் தொடங்கும் ஆஷஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் அதிரடி தொடக்க வீரர் சாம் கோன்ஸ்டாஸ் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் நீக்கப்பட்டுள்ளார்.

புதுமுக வீரர் ஜேக் வெதரால்ட் 15 வீரர்கள் கொண்ட அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 31 வயதாகும் ஜேக் வெதரால்ட் தொடக்க வீரர். தெற்கு ஆஸ்திரேலியா அணிக்கு ஆடுகிறார். பீபிஎல் டி20-யில் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கு ஆடுகிறார். பாகிஸ்தான் சூப்பர் லீகில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கு ஆடினார். 76 முதல் தரப் போட்டிகளில் இவர் 5,269 ரன்களை 13 சதங்கள் 26 அரைசதங்கள் எடுத்துள்ளார். சராசரி 37.63. கடந்த ஷெஃபீல்ட் ஷீல்ட் உள்நாட்டுத் தொடரில் வெதரால்ட் 906 ரன்களை 50.33 என்ற சராசரியில் எடுத்து முன்னணி வீரராகத் திகழ்ந்தார்.

அணியிலிருந்து தூக்கப்படுவார் என்று எதிர்பார்த்த மார்னஸ் லபுஷேன் சமீபத்தில் குவீன்ஸ்லாந்து அணிக்காக 5 சதங்களை விளாசியதையடுத்து மீண்டும் ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசையில் 3-ம் நிலைக்குத் திரும்பியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி உட்பட லபுஷேன் சொதப்பியதால் மே.இ.தீவுகள் தொடருக்கு ட்ராப் செய்யப்பட்டார். உஸ்மான் கவாஜாவை வேறு வழியின்றி அணியில் தக்கவைத்துள்ளனர். ஏனெனில் இன்னொரு அனுபவ ஓப்பனர் அங்கு இல்லை.

மே.இ.தீவுகள் தொடரில் வாய்ப்பளிக்கப்பட்ட சாம் கோன்ஸ்டாஸ் 3, 5, 25, 0, 17, 0 என்று சொதப்பினார். மேத்யூ ரென்ஷா, மிட்ச் மார்ஷ் இருவரும் தேர்வு செய்யப்படவில்லை. காரணம் ஆல்ரவுண்டர்கள் கேமரூன் கிரீன், பியூ வெப்ஸ்டர் இருவரும் உள்ளனர்.

ஆஸ்திரேலிய அணி வருமாறு: ஸ்டீவ் ஸ்மித் கேப்டன், ஷான் அபாட், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, பிரெண்டன் டாக்கெட், கேமரூன் கிரீன், ஜாஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜாஷ் இங்லிஷ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், நேதன் லயன், மிட்செல் ஸ்டார்க், ஜேக் வெதரால்ட், பியூ வெப்ஸ்டர்.

இங்கிலாந்து அணி: பென் ஸ்டோக்ஸ் (கே), ஹாரி புரூக் (துணைக் கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஷோயப் பஷீர், ஜேகப் பெத்தேல், பிரைடன் கார்ஸ், ஜாக் கிராலி, பென் டக்கெட், வில் ஜாக்ஸ், ஆலி போப், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜாஷ் டங், மார்க் உட்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x