Published : 05 Nov 2025 11:35 AM
Last Updated : 05 Nov 2025 11:35 AM
கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஆசியக் கோப்பை டி20 போட்டிகளில் இந்திய-பாகிஸ்தான் வீரர்கள் நடந்து கொண்ட விதம் கிரிக்கெட் அரங்கில் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது, இந்நிலையில் ஐசிசி விசாரணை முடிந்து தண்டனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ராவுஃப் 4 தகுதியிழப்புப் புள்ளிகளுடன் 2 ஒருநாள் போட்டிகளில் ஆடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சூரியகுமார் யாதவுக்கு 2 தகுதியிழப்புப் புள்ளிகளும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஆசியக் கோப்பை முழுதுமே இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி கடைசி இறுதிப் போட்டியிலும் வீழ்த்தி கோப்பையை வென்றது, ஆனாலும் இருதரப்புமே ஆட்ட உணர்வு, ஸ்போர்ட்ஸ்மென்களுக்கு உண்டான நாகரிகத்துடன் நடந்து கொள்ளவில்லை என்று உலக கிரிக்கெட் ரசிகர்கள் உட்ப்ட பலரும் இரு அணிகள் மீதும் அதிருப்தியை தெரியப்படுத்தினர்.
இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்தனர். பாகிஸ்தானுக்கு எதிரான லீக்கில் வெற்றி பெற்ற பிறகு இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், ‘பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களுடன் நிற்கிறோம், வெற்றியை இந்திய ராணுவ வீரர்களுக்கு சமர்ப்பிக்கிறோம் என்று பேசினார். கிரிக்கெட்டில் தேவையில்லாமல் அரசியலைக் கலக்கிறார் என்று சூரியகுமார் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் எழுப்பியது.
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவுஃப், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியாவின் 6 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது போல் இந்திய ரசிகர்கள் பகுதிக்குச் சென்று செய்கை செய்தது கடும் சர்ச்சைகளைக் கிளப்பியது.
ஹாரிஸ் ராவுஃப் அவுட் ஆகிச் சென்ற போது பும்ராவும் அவரைப்போலவே பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தியது போன்ற செய்கையைச் செய்தார். அரைசதம் அடித்தவுடன் சும்மா போகாமல் துப்பாக்கியால் சுடுவது போல் செய்கை செய்த பாகிஸ்தான் வீரர் ஃபர்ஹானுக்கு ஒரு தகுதியிழப்புப் புள்ளி வழங்கப்பட்டது.
இந்த ஒட்டுமொத்த அலங்கோலங்களை விசாரித்து ஐசிசி அதிகாரபூர்வ அறிக்கையை நேற்று வெளியிட்டது. இதனையடுத்து ஹாரிஸ் ராவுஃபிற்கு 2 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் ஆடத் தடை விதித்தது. சூரியகுமார் யாதவுக்கு 2 தகுதியிழப்புப் புள்ளிகளை விதித்தது. மேலும் அவரது சம்பளத்தில் 30% அபராதமும் விதித்தது. பும்ராவுக்கு ஒரு தகுதியிழப்புப் புள்ளி அளிக்கப்பட்டது.
ஹாரிஸ் ராவுஃபுக்கு தடையுடன் 30% அபராதமும் விதிக்கப்பட்டது. இதன்படி ஹாரிஸ் ராவுஃப் நேற்று தொடங்கிய தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் ஆடவில்லை. 6-ம் தேதி நடக்கும் 2-வது ஆட்டத்திலும் அவரால் ஆட முடியாது. 3வது போட்டியில்தான் அவரால் ஆட முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT