Published : 05 Nov 2025 07:17 AM
Last Updated : 05 Nov 2025 07:17 AM
கோவை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு - விதர்பா அணிகள் இடையிலான ஆட்டம் கோவையில் நடைபெற்றது. இதன் முதல் இன்னிங்ஸில் தமிழ்நாடு அணி 291 ரன்களும், விதர்பா 501 ரன்களும் குவித்தன. 210 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய தமிழ்நாடு அணி நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் 89 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் டிராவில் முடித்துக்கொள்ளப்பட்டது.
ஆதிஷ் 46, விமல் குமார் 9, பிரதோஷ் ரஞ்ஜன் பால் 14, ஆந்த்ரே சித்தார்த் 11, ஷாருக் கான் 40, முகமது அலி 25 ரன்களில் ஆட்டமிழந்தனர். பாபா இந்திரஜித் 189 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 77 ரன்களும், கேப்டன் சாய் கிஷோர் 4 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றதால் விதர்பா அணிக்கு 3 புள்ளிகள் கிடைத்தது. தமிழ்நாடு அணிக்கு ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
இன்னிங்ஸ் வெற்றி: ‘பி’ பிரிவில் மங்கலாபுரத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் கர்நாடகா அணி இன்னிங்ஸ் மற்றும் 164 ரன்கள் வித்தியாசத்தில் கேரளா அணியை வீழ்த்தியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் கர்நாடகா 5 விக்கெட்கள் இழப்புக்கு 586 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்திருந்தது. கருண் நாயர் 233 ரன்களும், ரவிச்சந்திரன் சம்ரன் 220 ரன்களும் விளாசியிருந்தனர். கேரளா அணி முதல் இன்னிங்ஸில் 238 ரன்களுக்கு ஆட்டமிழந்து பாலோ-ஆன் பெற்றது. அந்த அணி 2-வது இன்னிங்ஸில் 184 ரன்களுக்கு சுருண்டது. ஆட்ட நாயகனாக கருண் நாயர் தேர்வானார்.
ஜெய்ஸ்வால் சதம்: ‘டி’ பிரிவில் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை - ராஜஸ்தான் அணிகள் மோதின. இதன் முதல் இன்னிங்ஸில் மும்பை 254 ரன்களும், ராஜஸ்தான் 617 ரன்களும் எடுத்தன. 363 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய மும்பை அணி நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் 82 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்திருந்த போது போட்டி டிராவில் முடித்துக்கொள்ளப்பட்டது. தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 174 பந்துகளில், ஒரு சிக்ஸர், 18 பவுண்டரிகளுடன் 156 ரன்கள் விளாசினார். முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றதால் ராஜஸ்தான் அணி 3 புள்ளிகளை பெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT