Published : 05 Nov 2025 07:11 AM
Last Updated : 05 Nov 2025 07:11 AM
துபாய்: ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி மகுடம் சூடியது.
இந்நிலையில் இந்த தொடரின் சிறந்த அணியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது. இதில் இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
தொடக்க வீராங்கனையான மந்தனா 54.25 சராசரியுடன் 434 ரன்கள் எடுத்திருந்தார். இதில் ஒரு சதம், 2 அரை சதங்கள் அடங்கும்.
ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஒரு சதம், அரை சதத்துடன் 58.40 சராசரியுடன் 292 ரன்கள் குவித்திருந்தார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரை இறுதியில் அவர், 127 ரன்களை விளாசி மிரட்டியிருந்தார்.
தீப்தி சர்மா பேட்டிங்கில் 3 அரை சதங்களுடன் 215 ரன்களும், பந்துவீச்சில் 22 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தார். இறுதிப் போட்டியில் 5 விக்கெட்களை வேட்டையாடிய அவர், தொடர் நாயகி விருதையும் வென்றிருந்தார்.
2-வது இடம் பிடித்த தென் ஆப்பிரிக்க அணியில் இருந்தும் 3 வீராங்கனைகளுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. இறுதிப் போட்டியில் சதம் விளாசிய
லாரா வோல்வார்ட் தொடரின் சிறந்த அணிக்கான கேப்டனாக தேர்வாகி உள்ளார். அவர், 71.37 சராசரியுடன் 571 ரன்கள் குவித்து சாதனை படைத்திருந்தார்.
ஐசிசி அணி விவரம்: ஸ்மிருதி மந்தனா (இந்தியா), லாரா வோல்வார்ட் (தென்னாப்பிரிக்கா), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (இந்தியா), மரிசான் காப் (தென்னாப்பிரிக்கா), ஆஷ் கார்ட்னர் (ஆஸ்திரேலியா), தீப்தி சர்மா (இந்தியா), அன்னாபெல் சதர்லேண்ட் (ஆஸ்திரேலியா), நாடின் டி கிளார்க் (தென்னாப்பிரிக்கா), சித்ரா நவாஸ் (பாகிஸ்தான்), அலானா கிங் (ஆஸ்திரேலியா), சோஃபி எக்லெஸ்டோன் (இங்கிலாந்து), நாட் ஸ்கைவர்-பிரண்ட் (இங்கிலாந்து).
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT