Published : 04 Nov 2025 01:14 PM
Last Updated : 04 Nov 2025 01:14 PM

மட்டைப் பிட்ச்களில் நாங்கள் மிகச் சிறந்த அணி - இங்கிலாந்து பலவீனங்களை ஒப்புக் கொண்ட மெக்கல்லம்

வெளிநாடுகளில் இருக்கும் சூழ்நிலைமைகளுக்கு ஏற்ப இங்கிலாந்து சரிவர தங்களைத் தயார் செய்து கொள்வதில்லை, ஆகவே அங்கு போராட்டம் தொடரவே செய்கிறது, ஆனால் மட்டை பிட்ச் அதாவது ஃபிளாட் ட்ராக் என்றால் நாங்கள்தான் தாதா என்று இங்கிலாந்தின் தலைமைப் பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் ஒருவழியாக தன் அணியின் பலவீனங்களை ஒப்புக் கொண்டார்.

பொதுவாக உள்நாட்டிலேயே எதிரணிகளிடம் உதை வாங்கிப் பழக்கப்பட்ட இங்கிலாந்து அணி பிரெண்டம் மெக்கல்லம் - பென் ஸ்டோக்ஸ் கூட்டணியின் ‘பாஸ்பால்’ அதிரடி கிரிக்கெட் மூலம் கொஞ்சம் சக்சஸ் ஆனது. அதுவும் ஃபிளாட் ட்ராக்கைப் போட்டு கடந்த ஆஷஸ் தொடரில் தொடரை 2-2 என்று சமன் தான் செய்ய முடிந்தது.

சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியிலும் ஃபிளாட் ட்ராக் உத்தி கைகொடுக்காமல் தொடரை சமன் தான் செய்ய முடிந்தது, இன்னும் சொல்லப்போனால் கவுதம் கம்பீர்-கில் கூட்டணியின் சொதப்பலான செலக்‌ஷன் கோளாறுகளைக் களைந்திருந்தால் இந்திய அணி தொடரை வென்றேயிருக்கும்.

ஒருநாள் போட்டிகளில் இதே அணுகுமுறை இங்கிலாந்தை ஓடிஐ தரவரிசையில் 8ம் இடத்திற்குத் தள்ளி விட்டுள்ளது. அடுத்த உலகக்கோப்பைக்குள் இன்னும் 19 போட்டிகள் உள்ளன, இதில் ஏதாவது தேறினால் 8ம் நிலையிலிருந்து மேலே நகர்ந்தோ அல்லது அதே 8ம் நிலையைத் தக்க வைத்தாலோ நேரடியாக ஐசிசி உலகக்கோப்பைக்குத் தகுதி பெறும். இல்லையெனில் தகுதிச்சுற்றுப் போட்டிகளில் ஆடித்தான் வர முடியும்.

சமீபத்தில் நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இங்கிலாந்து 3 போட்டிகளிலுமே 50 ஓவர்கள் வரை நீடிக்கவில்லை. 0-3 கிளீன் ஸ்வீப் ஆகி அவமானத்துடன் திரும்பியுள்ளனர். கடந்த 7 ஒருநாள் தொடர்களில் 6-ஐ இங்கிலாந்து இழந்துள்ளது. இந்நிலையில் ஆசிட் டெஸ்ட் என்று அழைக்கப்படும் ஆஷஸ் தொடரில் இந்த மாதம் முதல் விளையாடுகிறது. பிரெண்டன் மெக்கல்லம் என்ன சொல்கிறார் என்று கேட்போம்:

“ஆஸ்திரேலியாவுக்கு வந்திருக்கிறோம், எந்த வித சாக்குப்போக்குகளுக்கும் இடமில்லை. நல்ல தயாரிப்புடன் வந்திருக்கிறோம். நல்ல ஃபிளாட் பிட்சில் நாங்கள் மிக மிக அருமையான அணி. எங்களுக்கு பொருந்தும் அத்தகைய சூழ்நிலையில் நாங்கள் அதிரடி கிரிக்கெட்டை ஆடுகிறோம். பிட்சில் கொஞ்சம் பவுலிங் எடுத்தால் அவ்வளவுதான் நாங்கள் களேபரம் ஆகிவிடுகிறோம்.

அது ஸ்பின் ஆக இருந்தாலும் வேகப்பந்துச் சாதகமாக இருந்தாலும் எங்களால் அதற்கேற்ப தகவமைத்துக் கொள்ள முடியவில்லை. நான் ஒருநாள் கிரிக்கெட் பற்றியே இங்கிலாந்தைப் பொறுத்தவரை கவலைப்படுகிறேன், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதுவும் ஆஷஸ் தொடரில் ஓரளவுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற உணர்வுடன் தான் வந்திருக்கிறோம்.” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x