Published : 04 Nov 2025 10:16 AM
Last Updated : 04 Nov 2025 10:16 AM
ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பரிசுகள் குவிந்து வருகின்றன.
சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணிக்கு ரூ.51 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா நேற்று அறிவித்தார். இந்த தொகை அணியில் உள்ள அனைத்து வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், தேசிய தேர்வுக்குழுவினர் ஆகியோருக்கு பகிர்ந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வேகப்பந்து வீச்சு வீராங்கனையான ரேணுகா சிங் தாக்குருக்கு இமாச்சல் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு ரூ.1 கோடி பரிசுத் தொகையை அறிவித்துள்ளார். ரேணுகா சிங் தாக்குர் இமாச்சல் பிரதேசத்தில் உள்ள சிம்லா மாவட்டத்தின் ரோஹ்ரு பகுதியை சேர்ந்தவர் ஆவார். அதேவேளையில் மற்றொரு வேகப்பந்து வீச்சு வீராங்கனையான கிரந்தி கவுடுக்கு ரூ.1 கோடி பரிசுத் தொகையை அறிவித்துள்ளார் மத்திய பிரதேச மாநில முதல்வர் மோகன் யாதவ். கிரந்தி கவுடு, மத்திய பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியை சேர்ந்தவர் ஆவார்.
உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு, சூரத்தைச் சேர்ந்த தொழிலதிபரும் மாநிலங்களவை உறுப்பினருமான கோவிந்த் தோலாகியா வைர நகைகள் மற்றும் சோலார் பேனல்களை பரிசாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், பிசிசிஐ-க்கு அனுப்பியுள்ள கடித்தத்தில், சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் வைர நகை மற்றும் அவர்களின் வீடுகளுக்கு சோலார் பேனல்கள் அமைத்து கொடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT