Published : 04 Nov 2025 09:58 AM
Last Updated : 04 Nov 2025 09:58 AM
நவிமும்பை: ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் 52 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது இந்திய அணி. இதன் மூலம் உலகக் கோப்பை தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வெற்றியில் தொடக்க வீராங்கனையான ஷபாலி வர்மாவின் மட்டை வீச்சும் பிரதான பங்கு வகித்தது. 78 பந்துகளை சந்தித்த அவர், 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் விளாசி மிரட்டினார். இதன் மூலம் மகளிர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் அதிக ரன்கள் விளாசிய இளம் வீராங்கனை என்ற சாதனையையும் அவர், படைத்தார்.
பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்ட ஷபாலி வர்மா, பந்துவீச்சிலும் நெருக்கடியான தருணத்தில் 2 விக்கெட்களை வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்திருந்தார். 299 ரன்களை விரட்டிய தென் ஆப்பிரிக்க அணி ஒரு கட்டத்தில் 20 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 113 ரன்கள் குவித்து வலுவாக இருந்தது. அப்போது ஷபாலி வர்மா சுனே லூஸ், மரிஸான் காப் ஆகியோரை தனது அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழக்கச் செய்து ஆட்டத்தின் போக்கை இந்திய அணியின் பக்கம் இழுத்துக் கொண்டுவந்தார்.
இத்தனைக்கும் ஷபாலி வர்மா, உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது அவரது பெயர் இல்லாமலேயே இருந்தது. மோசமான பார்ம் காரணமாக அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. மாறாக அந்த நேரத்தில் சீராக ரன்கள் சேர்த்து வந்த பிரதிகா ராவல் தொடக்க வீராங்கனையாக தேர்வாகி இருந்தார். லீக் சுற்றில் பிரதிகா ராவல், நியூஸிலாந்து அணிக்கு எதிரான முக்கியமான ஆட்டத்தில் சதம் விளாசி அசத்தியிருந்தார். ஆனால் துரதிருஷ்டவசமாக வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் பீல்டிங்கின் போது காயம் அடைந்து தொடரில் இருந்து விலகினார் பிரதிகா ராவல். இதன் காரணமாகவே 21 வயதான ஷபாலி வர்மாவுக்கு வாய்ப்பு கிடைத்தது.
அப்போது ஹரியானா அணிக்காக சூரத் நகரில் நடைபெற்ற டி20 தொடருக்காக ஷபாலி வர்மா தீவிரமாக தயாராகி வந்தார். இந்திய அணியில் இருந்து உடனடியாக அழைப்பு வந்ததும் நவிமும்பை புறப்பட்டுச் சென்ற அவர், அங்குள்ள பல்கலைக்கழக மைதானத்தில் தீவிர பேட்டிங் பயிற்சி செய்தார். அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக களமிறங்கிய ஷபாலி வர்மா 10 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஆனால் இறுதிப் போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் அற்புதமாக செயல்பட்டு இந்திய அணி வரலாற்று சாதனை நிகழ்த்துவதற்கு உறுதுணையாக இருந்தார்.
இறுதிப் போட்டிக்கு பின்னர் ஷபாலி வர்மா கூறியதாவது: அரை இறுதிக்கு முன்பு எனக்கு அழைப்பு வந்தபோது, நான் உண்மையிலேயே அதிர்ச்சியடைந்தேன். கடைசி நிமிடத்தில் இதுபோன்ற வாய்ப்பு கிடைப்பது அடிக்கடி நடப்பதில்லை. விஷயங்களை எளிமையாக வைத்துக்கொண்டு அந்த தருணத்தை அனுபவிக்க வேண்டுமென எனக்குள் நானே கூறிக் கொண்டேன். இறுதிப் போட்டியில் ரன்கள் எடுத்ததும், விக்கெட்டுகளை வீழ்த்தியதும், ஒரு கனவு நனவாகியது போல் உணர்ந்தேன். இதெல்லாம் கடவுளின் திட்டம் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன்.
நான் அணியில் மீண்டும் இணைந்த நாளிலிருந்து, எல்லோரும் என்னை இங்கேயே நீண்ட காலம் இருந்ததை போல உணர வைத்தனர். தலைமை பயிற்சியாளர் அமோல் மஜூம்தார், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகியோர் பயமின்றி விளையாடுங்கள், இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள், தவறுகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று என்னிடம் கூறினார். அந்த சுதந்திரம் எனக்கு மிகுந்த நம்பிக்கையைத் தந்தது. சக வீராங்கனைகள் அனைவரும் ஒருவருக்கொருவர் ஆதரவளித்தனர். யாராவது சோர்வாக இருந்தால், மற்றவர்கள் அவர்களை உற்சாகப்படுத்துவார்கள். அதுதான் இந்த அணியை மிகவும் சிறப்பானதாக்கியது.
ஆரம்பத்தில் நான் அணிக்கு தேர்வு செய்யப்படாதது வேதனையாக இருந்தது. அதேவேளையில் அணியில் உள்ள வீராங்கைனைகள், ‘நீ திரும்பி வருவாய், தயாராக இரு’ என்று என்னிடம் தொடர்ந்து கூறி வந்தனர். அவர்களிடமிருந்தும் என் குடும்பத்தினரிடமிருந்தும் கிடைத்த அந்த நம்பிக்கை என்னைத் தொடர்ந்து வழிநடத்தியது. அதுவே இப்போது உலகக் கோப்பை வெற்றியாளராக இங்கே நிற்கவைத்துள்ளது.
அரை இதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது எங்களுக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளித்தது. நாங்கள் அவர்களிடம் பலமுறை தோற்றிருக்கிறோம், அதனால் அந்த வெற்றி எல்லாவற்றையும் மாற்றியது. ஒவ்வொரு வீராங்கனையும் இறுதிப் போட்டியில், குறிப்பாக மைதானத்தில் தங்களால் முடிந்த
அனைத்தையும் வெளிப்படுத்தினர். அதுதான் இந்த வெற்றியை மிகவும் உணர்ச்சிவசப்படுத்தியது மற்றும் எங்கள் அனைவருக்கும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக மாற்றியது. இவ்வாறு ஷபாலி வர்மா கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT