Published : 03 Nov 2025 08:59 PM
Last Updated : 03 Nov 2025 08:59 PM
சென்னை: நடப்பு மகளிர் உலகக் கோப்பை தொடரில் இரண்டாம் இடம்பிடித்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு தமிழகத்தின் முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆறுதல் சொல்லியுள்ளார்.
நவி மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் 52 ரன்களில் தோல்வியை தழுவியது தென் ஆப்பிரிக்கா. இந்த தொடரில் இரண்டு முறை நூறு ரன்களுக்கு குறைவாக ஆல் அவுட் ஆகியுள்ளது தென் ஆப்பிரிக்கா. இருப்பினும் மீண்டெழுந்து இறுதிப் போட்டிக்கு அந்த அணி முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
“சில நேரங்களில் விளையாட்டு போட்டியின் முடிவு மிகவும் கொடூரமானதாக இருக்கலாம். ஏனெனில், ஆட்டத்தில் ஒரே ஒருவர் தான் வெற்றியாளராக இருக்க முடியும். இது மாதிரியான உயர்மட்ட போட்டிகளில் சாம்பியன்களை பிரித்து காட்டுவது சிறு விஷயங்கள்தான். அது நழுவ விடப்பட்ட வாய்ப்பாக இருக்கலாம், டாஸ் முடிவாக கூட இருக்கலாம். இப்படி பல உள்ளன.
தொடர்ந்து இரண்டு முறை டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடியது, இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இரன்டு முறை நூறு ரன்களுக்கு குறைவாக ஆட்டமிழந்துள்ளது, அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை எளிதாக வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது, இப்படி இது அனைத்தும் சாம்பியன்களால் மட்டுமே துணிவாக செய்ய முடியும்.
இந்த உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வார்ட்டின் ஆட்டம் சாம்பியனை போல இருந்தது. இந்த தொடரில் அவர் பதிவு செய்த ரன்கள் சாதனையாக அமைந்துள்ளது. அரையிறுதி மற்றும் இறுதியில் சதம் விளாசி அசத்தினார்” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT