Published : 02 Nov 2025 08:26 AM
Last Updated : 02 Nov 2025 08:26 AM
மும்பை: ஐசிசி உலகக் கோப்பையை வெல்லும் வேட்கையுடன் இந்திய மகளிர் அணி, இன்று தென் ஆப்பிரிக்காவுடன் மோதவுள்ளது. இந்தப் போட்டி நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கவுள்ளது.
13-வது ஐசிசி ஒருநாள் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி தொடங்கியது. இந்தியா, இலங்கை நாடுகள் இணைந்து இப்போட்டியை நடத்தி வருகின்றன.
இந்த போட்டியில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்றன. கடந்த 26-ம் தேதியுடன் லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இந்தியா ஆகியவை முதல் 4 இடங்களை பிடித்து அரை இறுதிக்கு முன்னேறின. இலங்கை, நியூஸிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின. இந்நிலையில் குவாஹாட்டியில் கடந்த மாதம் 29-ம் தேதி நடைபெற்ற முதல் அரை இறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணி 125 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தையும், கடந்த 30-ம் தேதி நவிமும்பையில் நடைபெற்ற 2-வது அரை இறுதியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியையும் தோற்கடித்தன.
2 நாள் ஓய்வுக்குப் பிறகு இறுதிப்போட்டி நவி மும்பையில் உள்ள டி.ஓய். பாட்டீல் மைதானத்தில் இன்று (நவம்பர் 2) மாலை 3 மணிக்கு நடைபெற்றது. முதல்முறையாகக் கோப்பையை வெல்லும் வேட்கையில் இந்திய அணி, தென்ஆப்பிரிக்க அணியுடன் மோதுகிறது.
இந்நிலையில் நேற்று இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும், தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வார்ட்டும் கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இந்திய அணி இதுவரை 3 முறை உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. 2005-ல் ஆஸ்திரேலியாவிடமும், 2017-ல் இங்கிலாந்திடமும் இந்திய அணி இறுதிப் போட்டியில் தோல்வி கண்டது. எனவே, இம்முறை, தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி வெல்லவேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர்.
அரை இறுதி உற்சாகம்: லீக் சுற்றில், இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவிடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்டுள்ளது. அரை இறுதிச் சுற்றில் பலம்வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை, இந்திய அணியினர் வென்று சாதனை படைத்தனர். எனவே, அந்த உற்சாகத்தில் களமிறங்குகிறது. பேட்டிங்கில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா (ஒரு சதம், 2 அரை சதங்களுடன் 389 ரன்கள்), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (ஒரு சதம், ஒரு அரை சதத்துடன் 268 ரன்கள்), கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் (2 அரை சதங்களுடன் 240 ரன்கள்), ரிச்சா கோஷ் (ஒரு அரை சதத்துடன் 201 ரன்கள்) ஆகியோர் அசுர பலத்துடன் இருக்கின்றனர்.
அதேபோல் எதிரணியை மிரட்டுவதற்காக தீப்தி சர்மா, சரணி, கிராந்தி கவுட் ஆகியோர் காத்திருக்கின்றனர். தீப்தி சர்மா 17 விக்கெட்களையும், சரணி 13 விக்கெட்களையும், கிராந்தி கவுட் 9 விக்கெட்களையும் கைப்பற்றி மீண்டும் ஒருமுறை உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தக் காத்திருக்கின்றனர்.
அதேபோல் லாரா வோல்வார்ட் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும் முதல் தடவையாக உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறது. அந்த அணி முதல் முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. லீக் சுற்றில் அந்த அணி, இந்தியாவை வீழ்த்தி இருப்பதால் கூடுதல் உற்சாகத்துடன் களமிறங்குகிறது.
அந்த அணி பேட்டிங்கில் லாரா வோல்வார்ட், டாஸ்மின் பிரிட்ஸ், மரிசான் காப் உள்ளிட்டோர் மீண்டும் ஒரு முறை சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தக் காத்திருக்கின்றனர். அவர்களைச் சமாளிப்பது இந்திய பந்து வீச்சாளர்களுக்கு சவாலாக இருக்கும் என்று தெரிகிறது.
அதேபோல் பந்துவீச்சில், மரிசான் காப், அயபோங்கா காக்கா, நடின் டி கிளர்க், நான்குலுலேக்கோ லாபா ஆகியோர் இந்திய அணியை அச்சுறுத்தத் தயாராக உள்ளனர். ஒருநாள் போட்டிகளில் இதுவரை, இந்தியா, தென் ஆப்பிரிக்க அணி 34 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 20 போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்கா 13 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.
அணி விவரம் - இந்தியா: ஹர்மன்பிரீத் கவுர்(கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ரிச்சா கோஷ்(விக்கெட் கீப்பர்), உமா ஷெட்டி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லின் தியோல், ஷபாலி வர்மா, அமன்ஜோத் கவுர், தீப்தி சர்மா, ஸ்னே ராணா, கிராந்தி கவுட், ரேணுகா சிங் தாக்குர், சரணி, அருந்ததி ரெட்டி, ராதா யாதவ்.
தென் ஆப்பிரிக்கா: லாரா வோல்வார்ட்(கேப்டன்), டாஸ்மின் பிரிட்ஸ், சினாலோ ஜாப்டா(விக்கெட் கீப்பர்), கராபோ மெஸோ(விக்கெட் கீப்பர்), அன்னேக்கே போஷ், நடின் டி கிளர்க், அன்னேரி டெர்க்சன், மரிசான் காப், சுனே லுஸ், நாண்டுமிசோ சங்காசே, குளோ டிரையான், அயபோங்கா காக்கா, மசபாட்டா கிளாஸ், நான்குலுலேக்கோ லாபா, டுமி செகுகுனே. | நேரம்: பிற்பகல் 3 மணி, நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
ரூ.40 கோடி பரிசு: இறுதிப் போட்டியில் கோப்பையை வெல்லும் அணிக்கு சுமார் ரூ.40 கோடி பரிசுத்தொகை கிடைக்கும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) அறிவித்துள்ளது. உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டிக்கான பரிசுத்தொகை சுமார் ரூ.122.5 கோடியாகும். முதலிடம் பெறும் அணிக்கு ரூ.40 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு சுமார் ரூ.20 கோடியும் பரிசாகக் கிடைக்கும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.
ஜெமிமா ரோட்ரிக்ஸ் சாதிப்பாரா? - இறுதிப் போட்டியில் அனைத்து ரசிகர்களின் கண்களும் இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் மீது உள்ளது. ஆஸ்திரேலியாவுடனான அரை இறுதிப் போட்டியின்போது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்தார் ஜெமிமா. இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து 127 ரன்கள் குவித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அவரது ஸ்கோரில் 14 பவுண்டரிகளும் அடங்கும். தன் மீது அழுத்தத்தை ஏற்றிக்கொள்ளாமல் வெற்றி இலக்கை சேஸ் செய்து வெற்றி கண்டு சாதித்தார் ஜெமிமா.
இதனால் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. எனவே, இறுதிப் போட்டியிலும் ஜெமிமா அதிக ரன்களைக் குவித்து சாதிப்பாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
மைதானம் எப்படி? - இறுதிப் போட்டி நடைபெறவுள்ள நவிமும்பை டி.ஒய் பாட்டீaல் மைதானம் பேட்டிங்குக்கு ஏற்றதாக இருக்கும். அதே நேரத்தில் மாலை நேரத்தில் பனிப்பொழிவின் தாக்கம் இருக்கும். இருந்தபோதும் இரு அணி வீராங்கனைகளும் அதிக ரன்களைக் குவிக்க முடியும்.
‘கோப்பையை வென்றால் இந்திய அணிக்கு ரூ.125 கோடி’: நவிமும்பையில் இன்று நடைபெறவுள்ள உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி இறுதிச் சுற்றில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றினால் ரூ.125 கோடி பரிசளிக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நேற்று அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு சர்வதேச டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய ஆடவர் அணிக்கு ரூ.125 கோடியை பிசிசிஐ பரிசாக வழங்கியிருந்த நிலையில், மகளிர் அணிக்கும் அதே பரிசுத் தொகை வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT