Published : 31 Oct 2025 12:37 PM
Last Updated : 31 Oct 2025 12:37 PM
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் கலாச்சாரம் கொண்டதாகக் கூறிவரும் இங்கிலாந்துக்கு வரலாறு காணாத தர்மசங்கடம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. 2027 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைக்கு தகுதிச் சுற்றுகளில் ஆடித்தான் தகுதி பெற முடியும் என்ற சூழ்நிலை ஏற்படும் போல் உள்ளது. ஏனெனில் ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் இங்கிலாந்து 8வது இடத்தில் உள்ளது.
இவர்களுக்குக் கீழ் மே.இ.தீவுகள், வங்கதேச அணிகள்தான் உள்ளன. 2027 உலகக்கோப்பைக்கு டாப் 8 அணிகள் நேரடியாகத் தகுதி பெறும். இப்போது இங்கிலாந்து ஆடிவரும் போட்டிகளில் பெரும்பாலானவற்றை வெல்லவில்லை எனில் 8-லிருந்து கீழிறங்கி விட்டால் மார்ச் 31, 2027 அன்று 9ம் இடத்தில் இருந்தால் தகுதிச் சுற்றுக்களில் ஆடித்தான் இங்கிலாந்து உலகக்கோப்பைக்குள் நுழைய முடியும்.
காரணம் என்னவெனில் கடந்த 2 ஆண்டுகளில் எக்கச்சக்கமாக இருதரப்புத் தொடர்களில் ஏற்பட்டுள்ள கடும் தோல்விகளே. மே.இ.தீவுகள், ஆஸ்திரேலியா, மீண்டும் மே.இ.தீவுகள், இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளிடம் உதை மேல் உதை வாங்கியதோடு தங்களுக்கு இத்தகைய தகுதிப் பிரச்சினை இருப்பதே கூட தெரியாமல் நியூஸிலாந்திடம் இப்போது ஒருநாள் தொடரை இழந்துள்ளனர். தங்கள் சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியதோடு சரி.
சரி. வரும் போட்டிகளிலாவது வெற்றிகளைப் பெற்று உள்ளே நேரடியாக நுழைந்து விடலாம் என்றால் அதிலும் சிக்கல். அடுத்த உலகக்கோப்பை தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வேயில் நடைபெறுவதால் இரு அணிகளும் தானாகவே தகுதி பெற்று விடும். இது உண்மையில் இங்கிலாந்துக்கு சிக்கல்களை அதிகப்படுத்துகிறது. தென் ஆப்பிரிக்கா தற்போது 6ம் இடத்திலும் ஜிம்பாப்வே 11ம் இடத்திலும் உள்ளது.
இங்கிலாந்துக்கு இன்னும் 13 மாதங்களே கால அவகாசம் உள்ளது. கையில் உள்ள ஒருநாள் போட்டிகள் மொத்தம் 20. வரும் தொடர்களோ கடினமானது. ஏனெனில் இங்கிலாந்தில் நடைபெற உள்ள 6 ஒருநாள் போட்டிகளில் இந்தியாவையும் இலங்கையையும் எதிர்த்து ஆட வேண்டும். இதில் வெற்றி உத்தராவாதம் கடினமே.
மீதமுள்ள 14 ஒருநாள் போட்டிகளும் அந்நிய மண்ணில் நடைபெறுகிறது. இங்கிலாந்து அணி எப்போதுமே வெளிநாடுகளில் மோசமாகவே ஆடும். இந்நிலையில் இலங்கை, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தானில் ஆட வேண்டும். இதில் ஒன்று முத்தரப்புத் தொடர்.
நியூஸிலாந்துக்கு எதிராக நாளை சனிக்கிழமை ஆடும் போட்டியுடன் சேர்த்து உலகக்கோப்பை தகுதி பெறுவதற்கான இறுதிக்கெடுவுக்கு முன் 20 போட்டிகள் இங்கிலாந்து வசம் உள்ளன. அந்நிய மண்ணில் ஆடும் 14 போட்டிகளில் எதிர்கொள்ளும் அணிகள் இப்போது டாப் 6-ல் உள்ள அணிகள். ஆகவே இதுவும் கடினமே.
இன்னொரு சிக்கல் என்னவெனில் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இங்கிலாந்துக்கு அடுத்த இடங்களில் உள்ள மே.இ.தீவுகள், வங்கதேச அணிகளுக்கு மீதமிருக்கும் ஒருநாள் போட்டிகளில் அதிகம் அவர்கள் சொந்த மண்ணில் நடக்கிறது.
ஆகவே வெஸ்ட் இண்டீஸ், வங்கதேச அணிகள் இதில் வெற்றிகளைக் குவித்து தரவரிசையில் முன்னேற்றம் கண்டாலும் இங்கிலாந்து தகுதிச்சுற்று ஆடித்தான் 2027 உலகக்கோப்பைக்குத் தகுதி பெற முடியும்.
பாஸ்பால், பூஸ்பால் என்று சுயதம்பட்டம் அடித்துக் கொண்டு, ‘உற்சாகமான கிரிக்கெட்டை’ நாங்கள் ஆடுகிறோம், ’வெற்றி தோல்வி வீரனுக்கு ஜகஜம்’ என்று வடிவேலு ஒரு காமெடி சீனில் சொல்வது போல் சொல்லிக்கொண்டு திரியும் இங்கிலாந்து வெற்றியே அல்லாமல் தொடரை தொடர்ந்து இழந்து கொண்டு தோல்வியே வீரனுக்கு சகஜம் என்று கூற முடியுமா?
ஆகவே இங்கிலாந்தின் திங்க்-டேன்க், ராபர்ட் கீ, மெக்கல்லம், ஹாரி புரூக் உள்ளிட்டோர் முன்னிலையில் கடும் தர்மசங்கடத்தை எதிர்கொள்ள வேண்டிய சவால் காத்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT