Published : 31 Oct 2025 10:25 AM
Last Updated : 31 Oct 2025 10:25 AM

ஜெமிமா ரோட்ரிக்ஸ் வெற்றிக்கு வித்திட்டது எப்படி? - உலகக் கோப்பை அரையிறுதி திக் திக் தருணங்கள்

மும்பை டி.ஒய் பாட்டீல் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று வரலாறு நிகழ்த்தப்பட்டது. இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் உறுதுணையுடன் மகா விரட்டலில் ஈடுபட்ட ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஆஸ்திரேலிய அணியின் உலகக் கோப்பை ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்திய அணியைத் தகுதி பெறச் செய்தார்.

ஜெமிமா ரோட்ரிக்ஸ் 134 பந்துகளில் 127 ரன்களையும், ஹர்மன்பிரீத் கவுர் 89 ரன்களையும் சேர்த்து முக்கியக் கூட்டணி அமைத்ததால் இந்த அசாத்திய வெற்றி சாத்தியமானது.

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் அதிகபட்ச சேசிங் ஆன 338 ரன்களை விரட்டி இந்திய மகளிர் அணி 5 விக்கெட் இழப்புக்கு 341 ரன்கள் என்று அபாரமாக வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியின் உலகக் கோப்பை தொடர் 16 வெற்றிகளை முடிவுக்குக் கொண்டு வந்து தோல்விமுகத்தை காட்டியது இந்திய மகளிர் படை.

ஆனால் ஜெமிமா ரோட்ரிக்ஸுக்கு அதிர்ஷ்டமும் கைகொடுத்தது. இவர் 82 ரன்களில் இருந்த போது ஆஸ்திரேலிய பவுலர் அலனா கிங் வீசிய பந்தை ஸ்லாக் ஸ்வீப் செய்ய முயற்சித்தார். ஆனால் பந்து டாப் எட்ஜ் ஆகி உயரமாக காற்றில் எழும்பியது. கிங், அலிசா ஹீலி இருவருமே கேட்சை நோக்கி குழுமினர். ஆனால் கேட்ச் தரைத் தட்டியது. இது ஒரு வாய்ப்பு என்றால் ரோட்ரிக்ஸ் சதம் எடுத்த பிறகு 106-ல் இருந்த போது இன்னொரு வாய்ப்பும் நழுவ விடப்பட்டது. இதனையடுத்து மேட்சை முடித்து விட்டார் ரோட்ரிக்ஸ்.

இந்த இரு வாய்ப்புகளையும் விடுத்தால் ரோட்ரிக்ஸின் பேட்டிங் அதியற்புத வகையாறாவையும் ஆல்டைம் கிரேட் வகையறாவையும் சேர்ந்தது என்றே கூற வேண்டும்.

இந்திய அணிக்கு 102 பந்துகளில் 131 ரன்கள் தேவை என்ற கடினமான தருணமே. ஆனால் ரோட்ரிக்ஸ் அருமையாக களத்தின் இடைவெளிகளைப் பயன்படுத்தி ரன்களை கோலி போலவே மிக வேகமாக ஓடி எடுத்து கடினமாக உழைத்து ஆடி வெற்றி பெற்றுத் தந்தார். போட்டியில் மிகவும் திக் திக் தருணம் அலனா கிங் பந்தில் எல்.பி. முறையீட்டுத் தருணமே. டி.ஒய் பாட்டீல் ஸ்டேடியமே ரிவியூவின் போது பேரமைதி காத்தது, பந்து ஸ்டம்பைத் தாக்கவில்லை என்று தெரிந்தவுடன் மீண்டும் ஆரவாரம் தொடங்கியது.

முன்னதாக, ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனை ஃபோபி லிட்ச்ஃபீல்ட் 93 பந்துகளில் 119 ரன்களை விளாச எல்லிஸ் பெரி 77 ரன்களை எடுக்க ஆஷ்லி கார்ட்னர் பின்னால் இறங்கி 63 ரன்களை விளாச 338 ரன்களை ஆஸ்திரேலியா மகளிர் அணி எடுத்தது. அப்போது நினைத்திருப்பார்கள் இதுதாண்டா வெற்றி ஸ்கோர் என்று. 34 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் என்று இருந்த ஆஸ்திரேலிய அணியை இந்திய மகளிர் அணிப்பந்து வீச்சு கம்பேக் கொடுத்து 14 ஓவர்களில் 118 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றி மட்டுப்படுத்தியது . இதுவும் வெற்றிக்குப் பெரிய காரணமாகும்.

முன்னதாக, ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா ஓப்பனிங் இறங்கினர். ஆனால் ஷஃபாலி ஒரு பவுண்டரியுடன் பெவிலியன் திரும்பினார். விராட் கோலியின் அதே நம்பர் 3 நிலையில் ரோட்ரிக்ஸ் இறங்கினார். மந்தனாவும் 10வது ஓவருக்குள் ஆட்டமிழந்தார். ஹர்மன்பிரீத் ரோட்ரிக்ஸ் இணைந்து ரன் ரேட்டை விட்டுக் கொடுக்காமல் பார்ட்னர்ஷிப்பையும் கட்டமைத்தனர்.

ரோட்ரிக்ஸ் 57 பந்துகளில் அரைசதம் காண, ஹர்மன்பிரீத் 65 பந்துகளில் அரைசதம் எடுத்தார். அரைசதம் எடுத்த பிறகுதான் முதல் சிக்ஸரை அடித்தார் ஹர்மன்பிரீத். அதுவும் இன்சைடு அவுட் சிக்ஸ், அபாரமான ஷாட். அடுத்த ஓவரில் கார்ட்னர் பந்தில் மிகப்பெரிய சிக்ஸ். ஆனால் ஹர்மன்பிரீத் ஆட்டமிழந்தவுடன் ஆட்டத்தில் மீண்டும் ஒரு திருப்பம்.

தீப்தி சர்மாவும் 17 பந்துகளில் 24 ரன்களை எடுத்து ரன் அவுட் ஆனார். ரிச்சா கோஷ் இறங்கி 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களை விளாசி இலக்கின் நெருக்கடியைக் குறைத்தார். 114 பந்துகளில் தன் முதல் உலகக் கோப்பைச் சதம் கண்ட ரோட்ரிக்ஸ், வாய்ப்பை விடக்கூடாது என்று உறுதியாக நின்றார். இதனால் சதம் எடுத்தவுடன் அதைக் கொண்டாடவில்லை, ஏனெனில் அதைவிட பெரிய இலக்கு வெற்றி, மற்றும் இறுதிக்குத் தகுதி பெறுவது. கடைசியில் அமஞ்ஜோத் கட் ஷாட்டில் வெற்றி கைகூட ரோட்ரிக்ஸின், இந்திய மகளிர் படையின் வெற்றிக் கொண்டாட்டத்தையும் 34,000 ரசிகர்களின் கொண்டாட்டத்தையும் யாரால் நிறுத்த முடியும்?

முதன் முதலாக ஆஸ்திரேலியாவோ இங்கிலாந்தோ இல்லாத இறுதிப் போட்டி வரும் ஞாயிறன்று இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x