Published : 30 Oct 2025 08:30 AM
Last Updated : 30 Oct 2025 08:30 AM
நவிமும்பை: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, 7 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது.
இந்திய அணி அரை இறுதிக்கு போராடியே தகுதி பெற்றிருந்தது. முதல் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று தொடரை சிறப்பாக தொடங்கிய இந்திய அணி அதன் பின்னர் ஹாட்ரிக் தோல்வி அடைந்து பின்னடைவை சந்தித்தது. இதன் பின்னர் நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல் ஆகியோர் விளாசிய சதம் மற்றும் பந்துவீச்சில் காட்டிய கட்டுக்கோப்பான திறனால் இந்திய அணி வெற்றியை வசப்படுத்தி அரை இறுதியில் கடைசி அணியாக நுழைந்தது.
சிறந்த பார்மில் இருந்த பிரதிகா ராவல், வங்கதேச அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் பீல்டிங்கின் போது காயம் அடைந்ததால் தொடரில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ள ஷபாலி வர்மா, மந்தனாவுடன் தொடக்க வீராங்கனையாக களமிறங்கக்கூடும். அல்லது ஹர்லின் தியோல் மந்தனாவுடன் இணைந்து இன்னிங்ஸை தொடங்க வாய்ப்புள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஹர்மன்பிரீத் கவுர் 115 பந்துகளில் 171 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்திருந்தார். இதேபோன்ற செயல் திறனை மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்த ஹர்மன்பிரீத் கவுர் முயற்சிக்கக்கூடும். விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆட்டத்தில் ஓய்வு கொடுக்கப்பட்டிருந்த ரிச்சா கோஷ் காயத்தில் இருந்து குணமடைந்துள்ளதால் அணியில் இடம் பெறக்கூடும்.
ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் அலிசா ஹீலி காயம் காரணமாக கடந்த இரு ஆட்டங்களில் பங்கேற்கவில்லை. உடற்தகுதியை பெறும் வகையில் நேற்று அவர், பயிற்சிகளை மேற்கொண்டார். அலிசா ஹீலி களமிறங்கும் பட்சத்தில் ஆஸ்திரேலிய அணியின் பலம் மேலும் அதிகரிக்கக்கூடும். நடப்பு தொடரில் அவர், 2 சதங்கள் விளாசியிருந்தார்.
வங்கதேச அணிக்கு எதிராக 84 ரன்கள் விளாசிய ஃபோப் லிட்ச்ஃபீல்ட், 2 சதங்கள் மற்றும் 7 விக்கெட்கள் வீழ்த்தியுள்ள ஆஷ்லே கார்ட்னர், 114 ரன்களுடன் 15 விக்கெட்கள் வேட்டையாடி உள்ள அனாபெல் சுதர்லேண்ட், 13 விக்கெட்கள் கைப்பற்றியுள்ள அலானா கிங் ஆகியோரும் பலம் சேர்க்கக்கூடியவர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT