Published : 29 Oct 2025 12:14 PM
Last Updated : 29 Oct 2025 12:14 PM
குஜராத் அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில் 5 விக்கெட்டுகளை 38 ரன்களுக்கு வீழ்த்தி பெங்காலுக்கு 2வது வெற்றியைப் பெற்றுத்தந்த ஷமி, தன் உடல் தகுதியை நிரூபித்து அஜித் அகார்க்கரின் அராஜகக் கருத்துகளுக்கு பந்தினால் பதிலடி கொடுத்துள்ளார்.
அட்டகாசமான பந்து வீச்சில் அவரது பழைய ரவுண்ட் த விக்கெட் இன்ஸ்விங்கர், பவுன்சர் எல்லாம் துல்லியமாக விழுந்தன. ஸ்விங்கும் அபாரம். இதை விட தன் உடல் தகுதியை ஒருவர் அறிவிக்க முடியாது. சர்பராஸ் கானைச் சூழ்ந்துள்ள அரசியல் இவரையும் சூழாமல் இருந்தால் நிச்சயம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஷமி தேர்வு செய்யப்பட வேண்டும். இந்நிலையில்தான் அவர் ‘சர்ச்சைகள் தன்னைப் பின் தொடர்ந்து வருகின்றன’ என்று கூறியுள்ளார்.
நேற்று அவர் எடுத்த 5 விக்கெட்டுகள் அவரது 13-வது முதல் தர 5 விக்கெட்டுகள் ஸ்பெல் ஆகும். இதனையடுத்து குஜராத் அணியை 144 ரன்கள் வித்தியாசத்தில் பெங்கால் வீழ்த்தியது. மேலும் இந்த சீசனில் 15 விக்கெட்டுகளை 10.46 என்ற சராசரியில் எடுத்து விக்கெட்டுகள் பட்டியலில் 3-ம் இடத்தில் உள்ளார்.
இனி அவர் சொல்வதைக் கேட்போம்: “இப்படி செயல்திறனை வெளிப்படுத்தும் போது அது மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் நல்ல உணர்வை ஏற்படுத்துகிறது. கடினமான கட்டத்திலிருந்து மீண்டு வந்து இப்படி செயல்படுவது திருப்தி அளிக்கிறது. 2023 உலகக்கோப்பைக்குப் பிறகான காலக்கட்டம் கடினமானது வலி நிறைந்தது.
பிறகு ரஞ்சி டிராபி, ஐபிஎல், சாம்பியன்ஸ் டிராபி, துலீப் டிராபி, இப்போது என் பழைய ரிதம் திரும்பியது. இன்னும் என்னிடம் நிறைய கிரிக்கெட் மீதமிருக்கிறது. இது எனக்கு கம் பேக் போட்டி அல்ல, கடந்த ஆண்டு நீங்கள் கம் பேக் என்று சொன்னால் ஒப்புக் கொள்வேன். இப்போது இந்தப் போட்டி என்ற சூழலில் ஒரு ஸ்பெஷல் கம் பேக்தான்.
தென் ஆப்பிரிக்கா தொடர் குறித்த கேள்வி வரும் என்று எதிர்பார்த்தேன். சர்ச்சைகள் என்னைப் பின் தொடர்கின்றன. நான் வேறு என்ன செய்யவோ சொல்லவோ முடியும்? இன்றைய உலகில் சமூக ஊடகங்கள் அனைத்தையும் திரித்துக் கூறுகின்றன. என் பணி நன்றாக ஆடுவதே. எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ என்னுடைய சிறப்பான பங்களிப்பு செய்திருக்கிறேன். மற்றவை எல்லாம் கடவுள் கையில் ஒப்படைத்து விட்டேன். பெங்கால் என் வீடு, ஒவ்வொரு போட்டியும் நான் இங்கு ஆடுவது எனக்கு சிறப்பு வாய்ந்தது. ” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT